
நின்றாலும் உன்நினைவு
நடந்தாலும் உன்நினைவு
நொடிதோறும் உன்நினைவே
வேண்டும் அம்மா
இருந்தாலும் உன்நினைவு
கிடந்தாலும் உன்நினைவு
எப்போதும் உன்நினைவே
வேண்டும் அம்மா
(நின்றாலும்)
இழுத்துவிடும் மூச்சில்
உன்பெயர் ஒலிக்க வேண்டும்
இதயத்தின் துடிப்பில்அது
இசையாகி இனிக்க வேண்டும்
ஓடும் உதிரத்திலே
ஒன்றாகிக் கலக்க வேண்டும்
ஒவ்வொரு அசைவினிலும்
நீஉடன் இருக்க வேண்டும்
(நின்றாலும்)
கண்ணிமையின் ஓரத்திலே
கண்ணீரின் ஈரத்திலே
கற் பகமே உந்தன்
கருணைநான் உணர வேண்டும்
பிறவிகள் எடுத்தாலும்
பிறவாமல் போனாலும்
உன்னை மறவாத வரம்
ஒன்றுமட்டும் எனக்கு வேண்டும்
(நின்றாலும்)
--கவிநயா