Monday, March 22, 2010

வா...வா...!


கண்மணியே கவிதைசொல்வேன் வாவா - உன்
பொன்மனதை போற்றிதினம், வாவா
விண்மதியே மண்ணிறங்கி வாவா - இந்த
பெண்மனதில் குடியிருக்க வாவா

உயிர்உருக உனையழைத்தேன் வாவா - இரு
விழிகசிய கவிபடித்தேன் வாவா
நினைவிலுன்னை நிறுத்திவைத்தேன் வாவா - என்
வினைகளெல்லாம் விரட்டிடவே வாவா

ததியெனவே உழலுகிறேன் வாவா - என்
மதிமயக்கம் நீக்கிடவே வாவா
கதியெனவே உனையடைந்தேன் வாவா - முழு
மதியழகே மலரெழிலே வாவா!


-கவிநயா

8 comments:

  1. விண்மதி மண் இறங்கி வந்து வினைகளைத் துடைக்க வேண்டுமா !!

    அம்மாடி !!!

    சிந்து பைரவியில் முயற்சித்திருக்கிறேன்.

    எனது பதிவில் இன்னும் சிறிது நேரத்தில் வரும்.
    உங்கள் தோழியிடம் சொல்லி பாட வைத்து ப்பின் உங்கள் இடுகையில் போடுங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  2. வாங்க தாத்தா. நீங்க பாடியது வழக்கம் போலவே அருமை. மிகவும் நன்றி.

    //விண்மதி மண் இறங்கி வந்து வினைகளைத் துடைக்க வேண்டுமா !!//

    எல்லாம் வல்ல அன்னைக்கு ரொம்ப சுலபம்தானே :)

    என் தோழியெல்லாம் பிடிக்கிறது சிரமம் :( முயற்சி செய்து பாக்கிறேன்.

    ReplyDelete
  3. முதல் வரி படித்தவுடனேயே பாடத் தொடங்கிவிட்டேன். ஏதோ ஒரு பிரபலமான பாட்டின் மெட்டு. எந்த பாட்டின் மெட்டு இது அக்கா?

    ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி...

    பனுவல்களில் வரும் சொற்களை எல்லாம் நன்கு நினைவில் வைத்துக் கொண்டு தகுந்த இடங்களில் பயன்படுத்துகிறீர்கள் அக்கா.

    ReplyDelete
  4. //முதல் வரி படித்தவுடனேயே பாடத் தொடங்கிவிட்டேன்.//

    அப்படியே பதிவு செய்து அனுப்பி வைங்க!

    //ஏதோ ஒரு பிரபலமான பாட்டின் மெட்டு. எந்த பாட்டின் மெட்டு இது அக்கா?//

    எனக்கும் சரியா தெரியலை, ஆனா 'நம்பிக்கை'யில் இட்ட போது 'மணமகளே மருமகளே வாவா" மெட்டுக்கு பொருத்தமா வர்றதா ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார்.

    //ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி...//

    ஆமாம், சில சமயம் பொருத்தமாக அமைந்து விடுகிறது.

    வாசித்ததற்கு நன்றி குமரா.

    ReplyDelete
  5. ஆமாம் ஆமாம். அந்தப் பாட்டு தான். மணமகளே மருமகளே வா வா பாட்டு மெட்டு தான். :-)

    ReplyDelete
  6. //ஆமாம் ஆமாம். அந்தப் பாட்டு தான். மணமகளே மருமகளே வா வா பாட்டு மெட்டு தான். :-)//

    :) பாடித் தாங்க, பார்ப்(கேட்)போம்.. :)

    ReplyDelete
  7. குழந்தைகளுக்குக் கூட புரியும் வகையில் ஒவ்வொரு வரிகளும் அழகாக இருக்கின்றன. இன்றைக்கு தான் இந்த வலைப்பூவை முழுவதுமாக படித்து முடிக்க முடிந்தது. நன்றி கவிநயா.

    அன்புடன்
    சுவாதி

    ReplyDelete
  8. //இன்றைக்கு தான் இந்த வலைப்பூவை முழுவதுமாக படித்து முடிக்க முடிந்தது.//

    அப்பாடி! முழுசும் படிச்சீங்களா... மிகவும் நன்றி சுவாதி.

    ReplyDelete