Monday, November 4, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 1



யதுகுல காம்போஜி ராகத்தில் மனமுருகிப் பாடித் தந்திருக்கிறார், சுப்பு தாத்தா. மிக்க நன்றி தாத்தா!



அம்மா வருவாய் அருளைப் பொழிவாய்
கண்ணால் அருள்வாய் கருணை புரிவாய்
பெண்ணார் மணியே கனியே சுவையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (1)

விண்ணோர் போற்றும் விமலே வனிதே
மண்ணோர் போற்றும் மலரே அமுதே
பண்ணோர் போற்றும் பரமே அருளே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (2)

கண்டங் கறுத்தோன் காதல் மனையே
தண்டம் பிடித்தோன் தாயே சிவையே
அண்டம் அனைத்தும் பணியும் அழகே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (3)

வண்டா டுங்கரு விழியே எழிலே
செண்டா டுங்கரம் உனதே லலிதே
கொண்டா டும்புவி உனையே அனையே*
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (4)



*அனையே == அன்னையே – கவிச் சுவைக்காக மருவியது.

--கவிநயா

(தொடரும்)

No comments:

Post a Comment