Friday, October 19, 2018

வெற்றித்திருநாள்

வெற்றித்திருநாள் 

      அன்னையின் வெற்றித்திருநாளாகக் கொண்டாடப்படும்
விஜயதசமி நமது  காமம் ,க்ரோதம் ,மோகம், லோபம் ,
மதம் [பெருமை] ,மாத்சர்யம் [பொறாமை ] ,ஸ்வார்த்தம் [சுயநலம்] , அநியாயம் , அமானவதம்[கொடுமைத்தன்மை ] ,அஹங்காரம் ஆகிய 10 அசுரகுணங்களையும்  அழித்து ஒழித்து நம்மை நாம் வெல்ல  அன்னை அருள் பெருக்கும் நாள் .
               சிவனின் பூத கணத்தலைவனாம் சிற்பக்கலைஞன் சித்திரசேனன் ,முதல் அசுரகுணத்தலைவனாம் காமனை சிவன் தகனம் செய்ததால் குவிந்து கிடந்த சாம்பரை அசுரப் பதுமையாய்ப்  பிடித்து வைக்க ,ஈசன் பார்வை பட்டதும் அப்பதுமை உயிர்பெற்று இரண்டாம் அசுரகுணமாம் க்ரோதமே உருவான பண்டாசுரனாயிற்று. ருத்ர மந்திரம் ஜெபித்ததன் பலனாய் "அயோநிஜையாக[ஸ்த்ரீ புருஷ சம்பந்தமின்றி]பிறக்கும் பெண்ணாலன்றி வேறெவராலும் மரணமில்லை" என்று வரம்பெற்ற பண்டாஸுரனை தேவயஞாக்னி குண்டத்தில் உதித்த ஸ்ரீ லலிதா  மஹாத்ரிபுரசுந்தரி வதம் செய்த கதை யாவரும் அறிந்ததே ! இதே லலிதை , மாந்தரும் உபாசித்து அசுரகுணங்களை அழித்து வெற்றி பெற அருளவேண்டி பரம கருணையுடன் விக்ரஹமாக ஆலயத்தில் எழுந்தருளும் திவ்ய கோலமே காஞ்சி காமாக்ஷி !
             காமாட்சியின் வழிபாடோ , க்ரோதத்திற்கு உதாரணமாக நாம் யாவரும் கருதும் துர்வாசர் எழுதிய ஆகமநூலாகிய  சௌபாக்கிய சிந்தாமணி என்ற சாக்த வழிபாட்டு முறையை அனுசரித்து நடக்கிறது! மஹா கோபக்காரரான துர்வாசர் அன்னையை எவ்வளவு அழகாகத் துதிபாடித்  தொழுதவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது . அவர் எழுதிய அருமையான அன்னைத்துதிகளில்  ஒரு சின்ன துதியையாவது அம்மா பாட்டு அன்பர்களுக்கு அளிக்க வேண்டும்  என்று தோன்றியதன் பலனே இப்பதிவு [ பிழை இருந்தால் மன்னிக்கும்படி துர்வாசரிஷியை வேண்டியவண்ணம் இயன்றவரை தமிழிலும் துதி ஆக்கி அளிக்கிறேன் ]

துர்வாச மகரிஷி இயற்றிய  அன்னைத் துதி

 

பவநமயி ! பாவகமயி !
க்ஷோணிமயி ! ககனமயி !  க்ருபீடமயி !
ரவிமயி ! சசிமயி !
திங்மயி ! ஸமயமயி! பிராணமயி ! சிவே பாஹி !
               
               [தமிழில்]

வாயுமயமானவளே ! 
தீயுமாய்த் திகழ்பவளே !
மண்மயமானவளே ! 
விண்ணாக  விரிந்தவளே !
நீராக நிறைந்தவளே !
கதிரவனாய்க் காய்பவளே!
தண்மதியாய்க் குளிர்பவளே !
திக்கெல்லாம் தாய் நீயே !
காலமயமான மாயே !
உயிர் யாவும் நீ தாயே !
சிவையே ! காத்தருள்வாயே !

1 comment:

  1. துர்வாசரின் துதியை இங்கே அளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete