Tuesday, August 10, 2021

நீயே கதி

 

அம்மா உன்றன் நாமம் அன்றாடம் சொல்லி வர

அகிலம் எல்லாம் இன்ப மயமாகும், இந்த

உலகின் பிறவித் துன்ப மயல் தீரும்

 

சரணம் சரணம் என்று உன்பாதம் பற்றிக் கொள்ள

மரணம் இல்லா வாழ்வு எமைச் சேரும், அந்தக்

கரணம் புளகி உன்றன் புகழ் பாடும்

 

வேதனைகள் விரட்டி வர, சோதனைகள் சூழ்ந்து வர

பாதங்கள் கதியென்று வந்தேனம்மா, என்றன்

ஆதங்கம் தீர்த்து அருள் செய்வாயம்மா

 

அம்மா உன்னிடமின்றி வேறெங்கு சென்றிடுவேன்?

உன்னிடத்தில் சொல்லாமல் எவரிடத்தில் சொல்லிடுவேன்?

அறியாயோ உன் பிள்ளை உள்ளம் அம்மா, என்றன்

அறியாமை நீக்கி அருள் செய்வாயம்மா

 

காளி என நீலி என நின்றவளே தாயே

கடலெனவே கருணை செய்ய வந்தாயே நீயே

நீலி என சூலி என நின்றவளே தாயே

நிர்க் கதியாய் வந்தோர்க்கு நிழல் தருவாய் நீயே

 

 

--கவிநயா


No comments:

Post a Comment