
அன்னையிவள் அன்னையெங்கள் ஆதிபரா சக்தி!
அகிலமெலாம் ஆண்டிருக்கும் ஆதார சத்தி!
முன்னைவினை தீர்ந்திடவே அன்னைபதம் நாடு!
என்றுமவள் நினைவினிலே அவள்புகழே பாடு!
அன்றுதொட்டு இன்றுவரை அவள்நடத்தும் நாடகம்!
ஆரறிவார் இதன்மகிமை சொல்லவென்னால் கூடுமோ!
அதர்மத்தை அழித்திடவே அசுரர்களை அழித்தாள்!
அண்டிவந்த நல்லவர்க்கு அபயக்கரம் கொடுத்தாள்!
மண்ணிலிவள் புற்றாகக் கோலம்கொண்டு தவழ்ந்தாள்!
மன்னுபுகழ் தெய்வமெனக் கொண்டாடிட மகிழ்வாள்!
நீரினிலே நிலைத்திருந்து நெல்வயலைக் காத்தாள்!
நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணி ஆனாள்!
நெருப்பினிலே சுடரான மாரியம்மன் இவளே!
மறுப்பவரைச் சுட்டெரிக்கும் மாகாளியும் இவளே!
காற்றாகத் தவழ்ந்துவரும் காத்தாயி இவள்தான்!
ஊற்றாக உயிராக உய்விப்பவளும் இவள்தான்!
ஆகாயவெளியினிலே ஓங்காரமாய் ஒலிப்பாள்!
ரீங்காரம் செய்திருந்து எம்முணர்வில் கலப்பாள்!
பஞ்சபூத சக்தியெனப் படர்ந்திருந்து காப்பாள்!
அஞ்சுமுயிர் அனைத்துக்கும் தஞ்சமிவள் தருவாள்!
கொஞ்சுமுகக் கோமளமாய் என்றன்முன்னே வருவாள்!
கெஞ்சுகின்ற என்றனுக்கே இன்னமுதம் தருவாள்!
வேதமெலாம் போற்றுகின்ற வேதவல்லி இவளை
நாதவொலி சிறந்திடவே நற்றமிழால் போற்று!
தனைமறந்து இவள்நினைவில் மனமுருகிப் பாடி
நிலைமறந்து நிகழ்மறந்து இன்பமுடன் ஆடு!
செயலெல்லாம் சக்தியென சொல்லெல்லாம் சக்தியென
கயல்விழியில் மனம்வைத்து காலமெலாம் தேடு!
நொடிப்பொழுதும் அகலாமல் நினைவொன்றி வாழ்ந்தால்
அடிக்கமலம் தந்துனையே இவள் கூட்டிச் செல்வாள்!
ஆதாரம் தேடாமல் அவள்பாதம் நாடு!
சேதாரம் ஏதுமின்றி தனையுணர்த்தி மகிழ்வாள்!
அன்னையன்னை அன்னையெங்கள் அன்பினுக்கு மங்களம்!
ஆதிபரா சக்தியிவள் அடிமலரே சங்கமம்!
***************