Thursday, April 22, 2010

"அன்னையெங்கள் ஆதிபராசக்தி!!"

"அன்னையெங்கள் ஆதிபராசக்தி!"

அன்னையிவள் அன்னையெங்கள் ஆதிபரா சக்தி!
அகிலமெலாம் ஆண்டிருக்கும் ஆதார சத்தி
!

முன்னைவினை தீர்ந்திடவே அன்னைபதம் நாடு
!
என்றுமவள் நினைவினிலே அவள்புகழே பாடு
!

அன்றுதொட்டு இன்றுவரை அவள்நடத்தும் நாடகம்
!
ஆரறிவார் இதன்மகிமை சொல்லவென்னால் கூடுமோ
!

அதர்மத்தை அழித்திடவே அசுரர்களை அழித்தாள்
!
அண்டிவந்த நல்லவர்க்கு அபயக்கரம் கொடுத்தாள்
!

மண்ணிலிவள் புற்றாகக் கோலம்கொண்டு தவழ்ந்தாள்
!
மன்னுபுகழ் தெய்வமெனக் கொண்டாடிட மகிழ்வாள்!

நீரினிலே நிலைத்திருந்து நெல்வயலைக் காத்தாள்!
நமக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணி ஆனாள்
!

நெருப்பினிலே சுடரான மாரியம்மன் இவளே
!
மறுப்பவரைச் சுட்டெரிக்கும் மாகாளியும் இவளே
!

காற்றாகத் தவழ்ந்துவரும் காத்தாயி இவள்தான்
!
ஊற்றாக உயிராக உய்விப்பவளும் இவள்தான்
!

ஆகாயவெளியினிலே ஓங்காரமாய் ஒலிப்பாள்
!
ரீங்காரம் செய்திருந்து எம்முணர்வில் கலப்பாள்!

பஞ்சபூத சக்தியெனப் படர்ந்திருந்து காப்பாள்
!
அஞ்சுமுயிர் அனைத்துக்கும் தஞ்சமிவள் தருவாள்
!

கொஞ்சுமுகக் கோமளமாய் என்றன்முன்னே வருவாள்
!
கெஞ்சுகின்ற என்றனுக்கே இன்னமுதம் தருவாள்
!

வேதமெலாம் போற்றுகின்ற வேதவல்லி இவளை

நாதவொலி சிறந்திடவே நற்றமிழால் போற்று
!

தனைமறந்து இவள்நினைவில் மனமுருகிப் பாடி

நிலைமறந்து நிகழ்மறந்து இன்பமுடன் ஆடு
!

செயலெல்லாம் சக்தியென சொல்லெல்லாம் சக்தியென

கயல்விழியில் மனம்வைத்து காலமெலாம் தேடு
!

நொடிப்பொழுதும் அகலாமல் நினைவொன்றி வாழ்ந்தால்

அடிக்கமலம் தந்துனையே இவள் கூட்டிச் செல்வாள்
!

ஆதாரம் தேடாமல் அவள்பாதம் நாடு
!
சேதாரம் ஏதுமின்றி தனையுணர்த்தி மகிழ்வாள்!


அன்னையன்னை அன்னையெங்கள் அன்பினுக்கு மங்களம்
!
ஆதிபரா சக்தியிவள் அடிமலரே சங்கமம்!

***************

11 comments:

 1. ஆதி பராசக்தி, காத்தாயி, காத்யாயினி, கதம்ப வனவாசினி
  ஆனந்த வல்லி, அம்ருத தாயினி, அன்னபூரணி,
  காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, சமயபுரத்து மாரியம்மன்,
  நாகை நெல்லுக்கடை மாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன்,
  எங்கள் திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள வானப்பட்டரை மாரியம்மன்
  சக்தி, சிவ பார்வதி, என நாங்கள் வணங்கும் எல்லா அன்னையருக்கும்
  உங்களது அற்புதமான பாடல் அருமையாகப் பொருந்துகிறது.

  வழக்கமான லாலி மெட்டில் பாடியிருக்கிறேன்.(in my family blog)

  சுப்பு ரத்தினம்.
  http://menakasury.blogspot.com

  P.S: Is the verse being changed now and then ?

  ReplyDelete
 2. அருமையான பாட்டு SK ஐயா! பல கதைகளையும் ஊடே ஒத்தை வரியில் சொல்லி இருக்கீக! :)

  //நீரினிலே நிலைத்திருந்து நெல்வயலைக் காத்தாள்!//

  நெல்வயலைக் காத்தாள் = காந்திமதி-நெல்லையப்பர்!
  நீரினிலே நிலைத்திருந்து = என்ன SK?

  ReplyDelete
 3. ஆஹா! எங்க வானப்பட்டரை மாரியம்மன் ஆளா நீங்க!

  வாங்க சூரி சார்!

  இதையே, 'வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்' என்னும் மெட்டில் பாடிப் பாருங்கள்!

  எழுதி முடித்த பின்னர் எனக்குப் பட்டது இது !

  ReplyDelete
 4. ரவி, ரவி!

  நீங்கதான் இதை இப்படியும் பார்ப்பீங்கன்னு நம்பினேன்!

  அகஸ்தியர் தெரியுமில்லை!

  சிவ-பார்வதி திருமணத்தைப் பார்க்க முடியாமல், தென்புலம் வந்தார்.
  சிவன் தனது கங்கையை அவர் கலசத்தில் கொடுக்க, அதைக் காகம் தட்டிவிட, அது காவிரியாக, சட்டென அந்தக் கலசத்தை எடுத்துக் கொண்டு பொதிகை வந்து, அங்கிருந்து தவழவிட்ட தாமிரபரணிக்குள் இருந்து நெல்லையை வாழ வைக்கும் காந்திமதி!

  அப்பா.... மூச்சு வாங்குது!

  அதைத்தான் குறிப்பாகச் சொல்லியிருக்கிறேன்.
  :))

  ReplyDelete
 5. அன்னை உந்தன் திருவடிகள் சரணம் அம்மா சரணம்!
  அன்பு கொண்டு நீயும் உடன் வரணும் அம்மா வரணும்!

  அழகிய ஆதிசக்தி கவி தந்தமைக்க்கு நன்றி அண்ணா.

  ReplyDelete
 6. Miga alagaana vaarthaigal.Arputham

  ReplyDelete
 7. நீங்க சொன்ன மாதிரி வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி மெட்டுல பாடிப் பார்த்தேன் எஸ்.கே. ஐயா. அருமையா இருக்கு.

  ReplyDelete
 8. எல்லாம் அன்னை மீனாக்ஷி அருள்! நன்றி, கவிநயா!

  ReplyDelete
 9. மிக்க நன்றி, திரு. நடராஜன்.

  ReplyDelete
 10. மிக்க நன்றி, திரு. நடராஜன்.

  ReplyDelete
 11. அருமையா வந்ததுன்னு சொன்னா மட்டும் போதுமா குமரன். எங்களுக்கும் பாடிக் காட்டலாம்ல!:)) நாங்களும் ரசிப்போமே! சீக்கிரம் பண்ணுங்க! :)) நன்றி!

  ReplyDelete