Friday, July 18, 2008

ஆடிவெள்ளியில் அகத்துள் காண்போம்!


மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை
கொங்கைகள் பொங்கிடும் அங்கையற்கண்ணி
தங்கத்தாமரைக் குளத்தின் அருகே
தங்கிடவந்தாள் கூடல்மா நகரில்!


காமம் அழித்திடக் கருணை கொண்டு
காட்டிய கோலம் கண்டவர் நடுங்கிட
சங்கரன் வந்து கோணத்தில் கட்டிட
கச்சியில் அமர்ந்தாள் காமாட்சித் தாயும்!

பிச்சை எடுக்கும் துணைவனைப் பேண
அன்புளம் கொண்ட அரும்பெரும் தேவி
அகலக் கண்களை அழகாய்க் காட்டி
அமர்ந்ததும் காசி எனும் பெருந்தலத்தில்!

முப்பெருந்தேவியர் முழுவுருக் காண
எப்பதி சென்றால் திருவருள் கிட்டும்
என்றே அலையும் பக்தர் கூட்டம்
அறிந்திட வேண்டும் அகத்தின் உள்ளே!

எங்கே சென்று தேடினும் கிட்டா
அன்பின் உருவம் அமரும் இடமும்
இங்கே எமது இதயத் தாமரை
இதனைப் புரிந்தால் எல்லாம் நலமே!

வெள்ளிக்கிழமைகள் அன்னையின் திருநாள்
ஆடிவெள்ளியோ அனைத்திலும் உயர்வு
ஆடிடும் மனத்தை அசையா நிறுத்தி
அதிலே அவளைக் கண்டிட விழைவோம்!

ஆடும் மயிலாய் ஆடியே வருவாள்
அழகாய் எம்மின் உள்ளில் உறைவாள்
அகமும் புறமும் அவளை நினைந்தால்
அருளைப் பொழிவாள் கருணைக் கடலாய்!

ஆடிவெள்ளியில் அவளை நினைப்போம்
பாடியே நிதமும் பதமலர் பணிவோம்
தேடியே வருவாள் சத்தியம் இதுவே
நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம்!


அனைவருக்கும் ஆடிவெள்ளியில் அன்னையின் அருள் கிட்ட வேண்டுகிறேன்!

10 comments:

  1. /////ஆடிவெள்ளியில் அவளை நினைப்போம்
    பாடியே நிதமும் பதமலர் பணிவோம்
    தேடியே வருவாள் சத்தியம் இதுவே
    நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம்!////

    அருமை!

    இதனால்தானோ என்னவோ,
    "ஆடி வெள்ளி
    தேடி உன்னை
    நானடைந்த நேரம்"
    என்ற பல்லவியோடு கவியரசர்
    ஒரு பாடலை எழுதினார் போலும்
    வி.எஸ்.கே சார்!

    ReplyDelete
  2. ஆமாம் ஐயா!
    கவியரசு ஒரு நிதரிசனக் கவி!
    ஒவ்வொன்றையும் அனுபவித்துச் சொல்லிப் பாடியவர்!
    அவர் வார்த்தைகள் அனைத்தும் சத்தியம்!

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  3. ஆகா! ஆடிப் பட்டம் துவங்கியாச்சா? அம்மன் பாட்டில் தேடி விதைக்க வேண்டியது தான்!
    முதல் வெள்ளியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி SK! அடுத்த வாரம் வெள்ளி, அடியேன்...சொல்லிட்டேன் :)

    ReplyDelete
  4. //முப்பெருந்தேவியர் முழுவுருக் காண
    எப்பதி சென்றால் திருவருள் கிட்டும்
    என்றே அலையும் பக்தர் கூட்டம்
    அறிந்திட வேண்டும் அகத்தின் உள்ளே!//

    அருமை! அருமை! அருமை!

    மனத்தாமரையில் எங்க மகமாயி!
    அகத்தாமரையில் எங்க அபிராமி!
    உளத்தாமரையில் அவளை உகந்திடுவோம்!
    பதத்தாமரையில் மனம் பதித்திடுவோம்!

    ReplyDelete
  5. ////முப்பெருந்தேவியர் முழுவுருக் காண
    எப்பதி சென்றால் திருவருள் கிட்டும்
    என்றே அலையும் பக்தர் கூட்டம்
    அறிந்திட வேண்டும் அகத்தின் உள்ளே!//

    அருமை! அருமை! அருமை!

    மனத்தாமரையில் எங்க மகமாயி!
    அகத்தாமரையில் எங்க அபிராமி!
    உளத்தாமரையில் அவளை உகந்திடுவோம்!
    பதத்தாமரையில் மனம் பதித்திடுவோம்!///

    ரிப்பீட்டேய்!!!

    அப்பப்ப இங்க வந்து பார்த்துட்டு போவேன்; இப்ப ஆடியோடு அன்னையை அழைத்து வந்தமைக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  6. விதை விதைக்க உங்களுக்குச் சொல்லியா தரணும் ரவி!

    வந்து அன்னை புகழ் பாடுங்கள்

    ReplyDelete
  7. //அருமை! அருமை! அருமை!

    மனத்தாமரையில் எங்க மகமாயி!
    அகத்தாமரையில் எங்க அபிராமி!
    உளத்தாமரையில் அவளை உகந்திடுவோம்!
    பதத்தாமரையில் மனம் பதித்திடுவோம்!//

    பதித்திடும் அனைத்தையும்
    பக்திமணம் கமழ்ந்திட
    உதித்திடும் பேரொளி
    அன்பொடு புனைவீர்!

    ReplyDelete
  8. //அப்பப்ப இங்க வந்து பார்த்துட்டு போவேன்; இப்ப ஆடியோடு அன்னையை அழைத்து வந்தமைக்கு நன்றி அண்ணா.//

    நீங்கள்லாம் அப்பப்பவா வந்து பார்க்கறது!
    அடிக்கடி வர வேண்டாமா!
    மூன்றாம் வெள்ளி நீங்க பண்ணுங்க கவிநயா!

    ReplyDelete
  9. எளிமையான அருமையான கவிதை எஸ்.கே. நன்றிகள். ஆடிவெள்ளியில் தேடி இட்டதற்கும் நன்றிகள்.

    இந்த வாரம் ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் போடப்போறாரா? சரி தான்.

    அடுத்த வாரம் கவிநயா அக்காவுடைய அயிகிரி நந்தினி பாட்டின் தமிழாக்கம் வரட்டும். அக்காவிற்கு அழைப்பு அனுப்புகிறேன். அவரும் இந்தக் குழுவில் சேர்ந்து கொண்டு அன்னையின் புகழ் பாடட்டும்.

    நீங்கள் எல்லாம் ஆடிவெள்ளியன்று இடுகை இட ஓடி வருவதால் அடியேன் வெள்ளியில்லாத வேறொரு நாளில் இட வேண்டியது தான் போலும். :-)

    ReplyDelete
  10. அழைப்பை ஏத்துக்கிட்டேன். நன்றி குமரா. அடுத்த வாரம் அயிகிரி நந்தினி போடப் போறதால, இப்ப எழுதினதை என் பூவுல போட்டுட்டேன்...
    http://kavinaya.blogspot.com/2008/07/blog-post_24.html

    //நீங்கள் எல்லாம் ஆடிவெள்ளியன்று இடுகை இட ஓடி வருவதால் அடியேன் வெள்ளியில்லாத வேறொரு நாளில் இட வேண்டியது தான் போலும். :-)//

    நீங்கதான் அவளைப் பத்தி எப்பவுமே எழுதறீங்களே. அப்புறம் என்ன :))

    ReplyDelete