Thursday, July 31, 2008

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

அம்மா.

அம்மா என்ற சொல்லைச் சொல்லும்போதே எவ்வளவு சுகமாக இருக்கிறது. அந்த ஒரு சொல்லே அளவில்லாத அன்பையும், குழைவையும், நெகிழ்வையும் தந்து விடுகிறது. அதனாலேயே அவளை, உலகுக்கெல்லாம் அன்னையை, ஆதிபராசக்தியை, அகிலாண்ட ஈஸ்வரியை, அழைக்கும்போது, அன்னை என்றோ, அம்பாள் என்றோ, இன்னும் வேறு விதமாகவோ சொல்லாமல், அம்மா என்று அழைக்கவே எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மா என்றவுடன் இதயத்துக்குள் வந்து அமர்ந்து கொண்டு விடுகிறாள் என்று தோன்றும்.

எனக்கு அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் பெருமைகளையும் அருமைகளையும் அறியேன். ஆனால் அவள் அன்பே உருவானவள் என்பதை மட்டும் ஆணித்தரமாய் அறிவேன். இல்லையென்றால் என்னைப் போன்ற சிறியவளுக்கு அவளைப் பற்றி ஒரு வரியேனும் எண்ணும், எழுதும், பேசும், வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவளுக்கே அவளுக்கான இந்தப் பூவில் முதல் முதலாக மூன்றாம் ஆடிவெள்ளிக்கு எழுதும் வாய்ப்புக்கு மிக மகிழ்ந்து, அவள் திருவடிகள் பணிந்து தொடங்குகிறேன்.


மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சிறுவயது முதலே அதன் வடிவத்தால், இசையால் கவரப்பட்டு, பொருள் புரியாமலே பாடி வந்திருக்கிறேன். சமீபத்தில் அதன் பொருளை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கிய போது அதனைத் தமிழில் எழுதும் எண்ணம் வந்தது. அப்படி முயல்கையில் சமஸ்கிருதத்தில் ஒரு சொல்லில் சொல்லும் விஷயத்துக்கு தமிழில் நான்கு சொற்களேனும் வேண்டியிருப்பதாய் உணர்ந்தேன். அம்மா மன்னிப்பாள் என்ற நம்பிக்கையில், அதனை மொழி பெயர்ப்பு என்று அழைக்காமல் தழுவல் என்றே அழைக்கிறேன். குமரன் அளித்த ஊக்கத்தின் பேரில் அதனை இங்கே பதிக்கிறேன்.

அன்னையின் அன்புக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. எதிர்பார்ப்பில்லாத தூய அன்பைத் தரக் கூடியவர்கள் தாய்மார்கள் மட்டுமே (தந்தைமார்கள் அடிக்க வராதீங்க!). உலகாதய அம்மாக்களே இப்படியென்றால், ஜகன்மாதாவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அப்பேற்பட்ட அன்னைக்கும் பிள்ளையிடம் கோபம் வரலாம். வரும். எப்போது? பிள்ளை தவறு செய்யும்போது. அதுவும் அன்பினாலேயே ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதனால்தான் ஜகன்மாதாவும் நம்முள் இருக்கும் மஹிஷனை அழித்து அருள்பாலிக்கவே மஹிஷாசுரமர்த்தினியாய் ஜொலிக்கிறாள்! அவளுடைய, நிகரில்லாத எழிலையும், ஒப்பில்லாத வீரத்தையும், கரையில்லாத கருணையையும், இந்தப் பாடல் என்னமாய் போற்றுகிறது!

வாருங்கள் – அயிகிரி நந்தினியின் தமிழ்த் தழுவலைப் பார்க்கும் முன், அதனுடைய ஒலி வடிவத்தைக் கேட்டு மகிழுங்கள்.


Get this widget | Track details | eSnips Social DNA

இங்கே குமரன் அனுப்பித் தந்த அயிகிரி நந்தினிக்கான அபிநயத்தைக் கண்டு களிக்கலாம். நன்றி குமரா.இப்போது தமிழ்த் தழுவல்:

நந்தியும் தேவரும் நயந்துன்னைப் போற்றிட மகிழ்ந்தின்பம் தருகின்ற மலைமகளே
விந்திய மலையின் உச்சியில் உறைந்து ஒளிர்பவளே ஜயம் தருபவளே
கறைக் கண்டன் அவனின் மனையவளே பலலீலைகள் புரிந்திடும் உமையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (1)

இறை வருக்கும் இறை யானவளே அறியா தவர்க்கும் அருள் புரிபவளே
ஓம் எனும் ப்ரணவத்தை ஆள்பவளே மூவுலகையும் காத்திடும் மூத்தவளே
தனுதிதி வம்சத்தை ஒழித்தவளே வீண் ஆணவம் அழித்திடும் அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (2)

புன்னகையால் மனம் கவர்பவளே எந்தன் அன்னையே கதம்பவனப்ரியையே
மலைகளுக் கெல்லாம் அரசனாம் அந்த இமயத்தின் சிகரத்தில் வசிப்பவளே
மதுகை டபர்களை வென்றவளே என்றும் ஆனந்த நடம் செய்யும் நாயகியே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (3)

அரக்கரைத் த்வம்சம் செய்பவளே போர்க் களிறுகளைக் கொன் றொழிப்பவளே
சிம்மத்தின் மீதேறி வருபவளே பெரும் கோபத்தில் ஜொலிக்கின்ற துர்க்கையம்மா
பகைவரின் தலைகளைக் கைகளின் பலத்தால் தூளாய்ச் சிதற வைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (4)

வெற்றியின் மறுவடி வானவளே கடும் பகைவரையும் கொன்று வெல்பவளே
சிவகணங்களைப் படையாகக் கொண்டு போர் தொடுத்தவளே காளி பயங்கரியே
பாவத்தின் வடிவாய்ப் பாதகம் புரிந்திட்ட அசுரரின் தூதரை அழித்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (5)

உனைச் சரணடையும் பகைவரின் பெண்டிர்க்கும் அடைக்கலம் தந்து காப்பவளே
மூவுல கினையும் மூர்க்கமாய் அடக்கிடும் அரக்கரை வேலால் பிளப்பவளே
திக்குகள் அதிர்ந்திட முரசுகள் ஒலித்திட சூரியனாய்த் தக தகப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (6)

ஒருஹூங் காரத்தால் எதிர்வரும் பகைவரைப் புகையெனக் கலைந்தோடச் செய்பவளே
போர்க் களத்தினிலே வீழ்கின்ற குருதியால் தழைக்கின்ற கொடியினைப் போன்றவளே
சங்கரன் அருகிலும் அரக்கரின் நடுவிலும் பேத மின்றிக் களித் திருப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (7)

மென்னுடலைப் பல விதவிதமாய்ப் பல அணிகலனால் அணி செய்தவளே
மின்னும் வாளுடன் கூரம் புகளுடன் எதிரிகள் தலைகளை அறுப்பவளே
பெரும்படை களையும் பொம்மைகள் போல விளையாட்டாய் வெட்டிச் சாய்ப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (8)

அண்டங்கள் திரண்டு போற்றிடும் வணங்கிடும் எங்களின் வெற்றித் திருமகளே
சங்கரன் கவனத்தைக் கவர்ந்திட நடமிட கிண்கிணிச் சலங்கைகள் அணிந்தவளே
அர்த்த நாரியாய் அரனுடன் இணைந்து ஆடியும் பாடியும் களிப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (9)

பூ முகத்தினிலே ஒளிரும் சிரிப்பால் ஞானிய ரையும் கவர்ந் திழுப்பவளே
அல்லி மலர்களை மலர்ந்திடச் செய்கின்ற குமுத சகாயனைப் போன்றவளே
நிலைகொள்ளாமல் சுற்றும்கருவண்டுகளைத் தன்னிரு விழிகளாய்க் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (10)

கதிரவன் கதிர்களைத் தாங்கி எதிரொலிக்கும் வெள்ளி மரங்களிடை வசித்திருக்கும்
மல்லரையும்வே டுவர்களையும் வெல்லும்விளையாட்டில் இஷ்டம் உடையவளே
சிவந்த வேர்களுடன் வெள்ளை மலர்கள் தாங்கும் அழகிய கொடியினை ஒத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (11)

வெறியுடன் தாக்கிடும் மதயா னைகளையும் எளிதாய் அடக்கிப் பணியச் செய்வாய்
மூவுல கினுக்கும் ரத்தினம் போன்ற நிலவின் அழ கொத்த இளவரசி
எழிற் புன்னகையால் மனங்களைக் கொள்ளை கொள்ளும் அன்புருவான அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (12)

மகிழமலர்களில் அமர்ந்த தேனீக்கள் கமல மலர்களையும் மொய்த்திடவே
அந்தக்கமலம்போல் மனங்கவர் நிறங்கொண்ட மாசற்ற நெற்றியை உடையவளே
கலைகளின் இயல்பாம் நளினம் மிகுந்த அன்னங்கள் தொடர வருபவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (13)

காடுகள் அடர்ந்த தருத் தரங்களிலே தெய்வீகப் பெண்டிர் சூழ்ந்திருக்க
அந்தவண்ண அழகு மலைப் பிரதேசத்தில் மகிழ்வுடன் வசிக்கும் மலைமகளே
கோகிலமும் மிக நாணும்படி தன் புல்லாங் குழலினை இசைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (14)

இடையினில் ஒளிரும் மஞ்சள் பட்டாடையால் நிலவொளியையும் தோற்கடிப்பவளே
பதம் பணிவோரின் ஆபரணங்களால் நகங்களும் ஜொலிக்க திகழ்பவளே
தங்கமலை உச்சியில் விளங்கும்கலசம்போல் அழகிய தனங்களை உடையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (15)

கதிரவனையும் விஞ்சும் வலிமை கொண்ட பலஆயிரம் கரங்களை உடையவளே
தாரகாசுரனை எளிதினில் வென்ற வேலவனின் அன்னை ஆனவளே
சுரதா சமாதி இருவருக்கும் மன அமைதியைத் தந்து காத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (16)

உன் மலரடிகளைத் தினமும் போற்றி அன்புடன் துதித்து வணங்கையிலே
தாமரை மலரில் வாசம் செய்யும் உன் திருவருள் எனக்கின்றிப் போய்விடுமோ?
உன் திருவடிகளே சதமென இருக்கையில் செல்வங்கள்ஏதும் என்னை விலகிடுமோ?
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (17)

பொன்னென மின்னிடும் பெருங்கடல் நீரால் உனக் கபிஷேகம் செய்கையிலே
சசியை அடைந்திட்ட சுரபதிக் கிணையாய் சுவர்க்கத்தின் இன்பம் கிடைத்திடுமே
சிவனவன் வசிக்கின்ற உன்மலரடியையே எனக்கும்அடைக்கலமாய்க் கொண்டுவிட்டேன்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (18)

ஒரு முகமாக ஒரு மனதாக உன்னெழில் வதனத்தைச் சிந்தை செய்தால்
இந்திர லோகத்து அரம்பையரும் உன்பக்தரை ஒதுக்கிடத் துணிவதில்லை
அன்பின் பெருக்கால் சுந்தரரைத் தன் பொக்கிஷமாக்கிக் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (19)

எளியோரையும் மிகக் கருணை கொண்டு காப்பவளே எமையும் காத்திடுவாய்
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அன்னையே உன்திரு வடிசரணம்
துயரங்கள் அனைத்தையும் களைந்திடுவாய் உன்விருப்பப்படி எமை அமைத்திடுவாய்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (20)

***

மனதார அழைத்தால் மறுக்காமல் வருவாள்!
அன்போடு அழைத்தால் அரவணைத்து அருள்வாள்!
அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!


அன்புடன்
கவிநயா

16 comments:

 1. //மனதார அழைத்தால் மறுக்காமல் வருவாள்!
  அன்போடு அழைத்தால் அரவணைத்து அருள்வாள்!
  அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!//


  தமிழ்கூறும் நல்லுகத்திற்கு ஒரு நல்ல பக்திரசம் ததும்பும் படைப்பு.

  அன்னை பராசக்தியின் அருள்பரப்பும் தெய்வீகத் தொண்டு தொடரட்டும்.

  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  ReplyDelete
 2. //ஜகன்மாதாவும் நம்முள் இருக்கும் மஹிஷனை அழித்து அருள்பாலிக்கவே மஹிஷாசுரமர்த்தினியாய் ஜொலிக்கிறாள்! அவளுடைய, நிகரில்லாத எழிலையும், ஒப்பில்லாத வீரத்தையும், கரையில்லாத கருணையையும், இந்தப் பாடல் என்னமாய் போற்றுகிறது!//

  அந்த அன்னையின் பாடலை அழகு தமிழில் அனைவரும் பொருள் உணர்ந்து ஓதுவதற்கு ஏதுவாக தமிழ் படிப்பதற்கு ஏதுவாக அளித்ததற்கு அன்னை தங்களுக்கு அனைத்து நலங்களும் வழங்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள். மிக எளிமையாகவும், நல்ல நடையும் அமைந்து உள்ளது. நன்றி

   Delete
 3. ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்த்தினி, ரம்ய கபர்த்தினி சைல சுதே

  மஹிஷாசுர வதம் செய்தவளே, இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம்!

  நல்லா வந்திருக்குக்கா...தமிழ்த் தழுவலும், பனுவலும்!

  வீடியோ நடனம் சூப்பர்!

  ReplyDelete
 4. ஓஓஓஓஓ
  கவி அக்காவின் முதல் பதிவா இது, அம்மன் பாட்டில்!

  வருக வருக
  அக்காவின் பாடல் பதிவுகள் வருகவே!
  அம்மாவின் அமுத மொழி தருகவே!

  ReplyDelete
 5. வாங்க விஜய். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி, கைலாஷி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. வருக கண்ணா. அன்பான வரவேற்புக்கும் தமிழ்த் தழுவலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி. வீடியோவுக்கு குமரனுக்கு நன்றி :)

  ReplyDelete
 8. அம்மா என்றழைக்காத உயிரில்லையே
  அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே

  பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன கவிக்கா முதல் பத்தியைப் படிக்கும் போது. நன்கு சொன்னீர்கள்.

  ReplyDelete
 9. உண்மை தான் அக்கா. நிறைய பொருட்செறிவுடன் தான் இருக்கிறது வடமொழியில். தமிழில் முயன்றால் அதே பொருட்செறிவுடன் மாற்ற முடியுமா தெரியவில்லை. கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தமிழில் 'பொன்மழைப்பாடல்கள்' என்று மொழிபெயர்த்துத் தந்த கண்ணதாசனும் வடமொழியில் நாலு வரியில் இருப்பதை தமிழில் பதினாறு அடிகளில் எழுதினார். நாலு வரிகளில் எழுத வேண்டுமென்றால் கண்ணதாசனை விடச் சிறந்தவராக இருக்க வேண்டும் போலும். அபிராமி பட்டரால் இயன்றிருக்கும்.

  முதன்முறையாக உங்கள் பதிவிற்கு வந்த போது இந்தப் பனுவலைத் தான் படித்தேன். மூலத்தில் இருக்கும் சொற்கள் ஒவ்வொன்றும் மொழிபெயர்க்கப்படாவிட்டாலும் முடிந்த அளவிற்குப் பொருள் மாற்றம் இல்லாமல் மெட்டில் அமையும் படி நன்கு செய்திருந்ததைக் கண்டேன். அன்னையின் அருளால் அது உங்களுக்கு இயன்றிருப்பதைக் கண்டேன். மனம் உவந்து அதனையும் சொன்னேன். நினைவிருக்கலாம்.

  ReplyDelete
 10. எதிர்பார்ப்பில்லாத அன்பை அம்மாவிடம் காணலாம் என்பது விதி. அதற்கும் விதிவிலக்குகள் உண்டு. அதே போல் அப்பாவிடமும் அப்படிப்பட்ட அன்பைக் காணலாம்; ஆனால் அது வேறுவிதமான அன்பு. அம்மாவைப் போல் வெளிப்படையாகத் தெரியாது. :)

  ReplyDelete
 11. வருக குமரா! "அம்மா என்றால் அன்பு" என்பதை நினைத்துக் கொண்டுதான் முதல் பத்தி எழுதினேன். நீங்களும் சரியான பாடலை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

  //கண்ணதாசனும் வடமொழியில் நாலு வரியில் இருப்பதை தமிழில் பதினாறு அடிகளில் எழுதினார்.//

  அப்படியானால் அயிகிரி நந்தினியை தமிழில் 20 ஸ்லோகங்களாக இல்லாமல் 40-ஆக வேண்டுமானால் எழுத முயற்சி செய்யலாம்.

  //அன்னையின் அருளால் அது உங்களுக்கு இயன்றிருப்பதைக் கண்டேன். மனம் உவந்து அதனையும் சொன்னேன். நினைவிருக்கலாம்.//

  ஆஹா, மறக்கக் கூடியதா அது? இப்போதும் அவ்வப்போது படித்துக் கொள்வதுதான் உங்களது அந்த பின்னூட்டத்தை.

  //அதே போல் அப்பாவிடமும் அப்படிப்பட்ட அன்பைக் காணலாம்; ஆனால் அது வேறுவிதமான அன்பு. //

  உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் குமரா :) விதிவிலக்குகள் எல்லாவற்றிலும் உண்டு :)

  விரிவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும், வலைப்பூ அழைப்பிற்கும், தொடரும் உங்கள் உதவிகளுக்கும் மிக மிக நன்றி உங்களுக்கு!

  ReplyDelete
 12. அருமையா இருக்கு கவிநயா, சொல்ல வார்த்தைகளே இல்லை. நல்லதொரு படைப்பைக் கொடுத்த அந்த அம்பிகையின் அருள் துணை நிற்கும். பணி தொடரவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. ஆஹா, கீதாம்மா. உங்கள் வருகை கண்டு ரொம்ப சந்தோஷம் :) உங்கள் வாக்கை அவள் வாக்காகவே பாவித்து மனமார்ந்த நன்றி தெரிவிச்சுக்கறேன்!

  ReplyDelete
 14. அருமையான விளக்கம்

  ReplyDelete
 15. //Several tips said...

  அருமையான விளக்கம்//

  வாங்க. மிக்க நன்றி! :)

  ReplyDelete