Monday, November 3, 2008

இருப்பது போலே இருக்கின்றாய்...



இருப்பது போலே இருக்கின்றாய் - அம்மா
ஆனால் உன்னைக் காணவில்லை
எங்கும் எதிலும் இருக்கின்றாய் எனக்கேன்
உன்னிருப்பிடம் தெரியவில்லை?

வாழ்க்கைக் கடலில் தள்ளி விட்டாய் - அம்மா
நீந்துதல் எவ்விதம் சொல்லவில்லை
கண்ணீர்க் கடலில் மிதக்க விட்டாய் - அம்மா
கரைகா ணும்வழி காட்டவில்லை

புயலில் மழையில் நான் அலைந்தேன் - அம்மா
அலைகளில் சிக்கி அலைக்கழிந்தேன்
பாவக் கடலில் மூழ்கி விட்டேன் - அம்மா
போக்கிடம் இன்றி தத்தளித்தேன்

உன்னை அல்லால் யாரெனக்கு - அம்மா
உலகில் எனக்கெதும் உதவி இல்லை
உன்னை இறுகப் பற்றிக் கொண்டேன் - உன்
அடியே என்கதி நம்பி விட்டேன்

கணந்தோறும் உன்னைப் பணிகின்றேன் - அம்மா
கடைக் கண்ணாலே காத்திடுவாய் - உன்
திருவடியில் மனம் உருகிநின்றேன் - அம்மா
உள்ளம் இரங்கி உதவிடுவாய்


--கவிநயா

6 comments:

  1. எல்லோர் மனதிலும் எழும் கலக்கங்கள். எங்கே அம்மா நீ என்ற தேடல்கள்.

    //உன்னிருப்பிடம் தெரியவில்லை?//

    தெரியாவிட்டாலும்...

    //கணந்தோறும் உன்னைப் பணிகின்றேன் - அம்மா
    கடைக் கண்ணாலே காத்திடுவாய் - உன்
    திருவடியில் மனம் உருகிநின்றேன் - அம்மா
    உள்ளம் இரங்கி உதவிடுவாய்//

    நாம் இப்படி மனம் கரைந்து நிற்கையில் தேடி வராமலா இருந்திடுவாள்?

    வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
  2. வாங்க ராமலக்ஷ்மி. தவறாத வருகைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  3. அட, இந்த இடுகையை மிஸ் பண்ணியிருக்கேனே...

    //உன்னை அல்லால் யாரெனக்கு - அம்மா
    உலகில் எனக்கெதும் உதவி இல்லை
    உன்னை இறுகப் பற்றிக் கொண்டேன்//

    உன்னையல்லால் வேறே கதியில்லையம்மா, உலகமின்ற அன்னை...அப்படிங்கற பாபநாசம் சிவன் பாடலை நினைவுபடுத்தும் வரிகள்..

    //கணந்தோறும் உன்னைப் பணிகின்றேன் - அம்மா
    கடைக் கண்ணாலே காத்திடுவாய் -//

    கடைக்கண்ணால் இவரை...அப்படின்னும் ஒரு பாடல்...முழுதா நினைவுக்கு வரல்ல...ஜீவா/திரச சொல்வாங்க...

    எப்படிக்கா, மடை திறந்தாற்போல எழுதறீங்க...சூப்பரு.

    ReplyDelete
  4. ரொம்பப் புலம்பிட்டேன் போல, அதாம்மா யாருமே இந்த பாட்டைப் படிக்கல, அப்படின்னு புலம்பிக்கிட்டிருந்தேன் :) வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மௌலி.

    //எப்படிக்கா, மடை திறந்தாற்போல எழுதறீங்க//

    அவள் அருள் இருக்கும் வரைக்கும் மடையும் திறந்திருக்கும்... :)

    ReplyDelete
  5. கடைக்கண் வைத்தென்னை ஆதரி கருணாகரி சங்கரி பரமேஸ்வரி......இந்த பாட்டு தானே மௌளி வேணும். கவியின் நயமான கவிதை.உள்ளத்தை தொட்டு விட்டது.

    ReplyDelete
  6. வருகைக்கு மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா.

    ReplyDelete