Sunday, October 26, 2008

அனைத்துக்கும் அன்னை நீயே !



ஆங்கார காளி நீ
ஸம்ஹார சூலி நீ
கரு நீல சியாமளையும் நீ!

கருவிலே திருவாகி
கண்ணனின் சோதரியாய்
உதித்திட்ட மாயையும் நீ!

அன்னை நீ அன்பும் நீ
அறிவும் நீ செறிவும் நீ
அறிவுக் கெட்டாப் பொருளும் நீ!

விண்ணையும் மண்ணையும்
விரிந்த அண் டங்களையும்
படைத்திட்ட விந்தையும் நீ!

வித்தும் நீ விளைவும் நீ
விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ!

மலையும் நீ கடலும் நீ
மாதவர் போற்றிடும்
மங்கையர்க் கரசியும் நீ!

சொந்தம் நீ சுற்றம் நீ
பந்தம் நீ பற்றும் நீ
நிலையான ஆனந்தம் நீ!

சொத்தும் நீ சுகமும் நீ
கற்பனைக் கெட்டாத
கற்பக விருட்சமும் நீ!

காற்றுக்குள் அசைவு நீ
கடலுக்குள் உவர்ப்பு நீ
காட்டுக்குள் அடர்த்தியும் நீ!

அசைகின்ற உயிர்கள் நீ
அசையாத யாவும் நீ
அனைத்துக்கும் அன்னை நீயே!!


அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!!


அன்புடன்
கவிநயா

11 comments:

  1. காளி பூஜையன்று காளியின் மீது கவிதை அருமையான பொருத்தம் கவிநயா.

    (வங்காளத்தில் ஐப்பசி அமாவாசையன்று இரவு, காளி சிலை ஸ்தாபிதம் செய்து விடிய விடிய பூஜை சிறப்பாக நடைபெறும்)

    ReplyDelete
  2. http://uk.youtube.com/watch?v=qCNTlDUiLoQ

    ReplyDelete
  3. இன்று காளி பூசை என்ற தகவல் கிடைத்ததிலும் காளி பூசை அன்று 'யாதுமாகி நின்ற காளி'யைப் பற்றிய பாடலைப் பாடக் கிடைத்ததிலும் மிக்க மகிழ்ச்சி.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  4. வாங்க கைலாஷி. இன்றைக்கு காளி பூஜைன்னு தெரியாது. தற்செயலாக இட்டது பொருத்தமாகி விட்டது அன்னையின் அருளே. சந்தோஷமா இருக்கு :) மிக்க நன்றி.

    ReplyDelete
  5. வாங்க பாட்டி. நான் பாடிக்கிற ராகத்துலயே இந்த பாட்டை அமைச்சிருக்கீங்க. அதுவும் நீங்களும் தாத்தாவும் மாத்தி மாத்திப் பாடி கலக்கியிருக்கீங்க :) மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நன்றி குமரா. காளி பாடல் பொருத்தமாய் அமைஞ்சது பத்தி எனக்கும் மிக்க மகிழ்ச்சி :) உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அனைத்துக்கும் அன்னையானவளின் ஆசிகள் யாவருக்கும் கிடைக்குமாறு பாடியிருக்கிறீர்கள். அருமை. உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாங்க ராமலக்ஷ்மி. நன்றி.

    ReplyDelete