இனிய தீபத் திருநாளில் நூறாம் பதிவு அமைந்ததும் அன்னை பராசக்தியின் திருமுக ஒளியே!
இந்தச் சிறப்பு இடுகையில், ராஜாவின் ஜனனி ஜனனி ஸ்டைலில், ஒரு பாட்டு இடம் பெறப் போகிறது! அம்மன் பாட்டின் முதலமைச்சர், நம்ம கவிநயா அக்காவைப் பதிவை நடத்தித் தரும்படி அழைக்கிறேன்! வாங்க-க்கா! Over to கவிநயா!

தாயன்பை நாடாதவர் எவருண்டு? அவள் அன்பிற்கு ஏங்காதவர் தாம் யாருண்டு? நம்முடைய ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாய் அறிந்தவள் நம் தாயே அன்றோ?
உலகத் தாய்மார்களே இப்படியென்றால், உலகத்துக்கெல்லாம் தாயான அவளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
சந்தோஷமோ, சஞ்சலமோ, கோபமோ, வருத்தமோ, எதுவாக இருந்தாலும், "அம்மா" என்றழைத்து அவள் கால்களை இறுகக் கட்டிக் கொண்டால் போதும், மனம் சமன்பட்டுவிடும்.
அவளிடம் நம் எண்ணங்களையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும், வேண்டுதல்களையும், போற்றுதல்களையும், இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத்தான் எத்தனை எத்தனை பாடல்கள்!
அதுவும் நம் தாய்மொழியிலேயே அவற்றை அவளிடம் சொல்கையில் அதனால் ஏற்படும் இன்பத்திற்கும், கிடைக்கும் ஆறுதலுக்கும், இணையே இல்லை. அப்பேர்பட்ட அன்புருவான அன்னைக்கான பாடல் வரிகளைப் பகிர்ந்து கொள்ளவென்றே, அன்னை சக்தியின் வேல் தாங்கியோனின் பெயர் தாங்கிய குமரன், இந்த வலைப் பூவைத் தொடங்கினார். அது இன்று வளர்ந்து, 100-வது பாடலைத் தொட்டிருக்கிறது!
சக்தி இல்லாமல் எதுவுமில்லை. சக்தியை மனதில் இருத்திப் புறப்பட்டால், சூலம் தாங்கிய சிவனும் கூடவே துணையாக வருவான் என்பார், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அவளை நம் அனைவருக்கும் உடனிருந்து வழி நடத்த வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, "அம்மன் பாட்டு" குழுவினரின் சார்பில், இந்த நூறாவது இடுகைக்கு உங்கள் அனைவரையும், "வருக, வந்து அன்னையின் அருள் பெறுக", என அன்போடு வரவேற்கிறேன்!
சரி, இந்த 100-வது இடுகையின் சிறப்பு என்ன என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.
"ஜனனீ ஜனனீ" என்ற இளையராஜா அவர்களின் பாடலை கேளாதவர், கேட்டு உருகாதவர், இருக்க முடியாது.
அந்தப் பாடலின் மெட்டிலேயே நம் கேஆரெஸ், இனிக்கும் செந்தமிழில், (கண்) பனிக்கும் அருமையான பாடலொன்றை இயற்றித் தந்திருக்கிறார்.
ஜனனி ஜனனி என்ற சாகா வரம் பெற்ற பாடல்!
அதே மெட்டில், தமிழ் நீ தமிழ் நீ, தரணீ தமிழ் நீ!
மீனாக்ஷி என்ற (ஒரு பதிவரின்) நண்பரும், பதிவர் SK ஐயாவும் பாடுகின்றனர்! கேளுங்கள்!
மீனாக்ஷி அவர்களின் குரலில்: (கேட்டுக்கிட்டே படிங்க...)
Thamizh nee (Janan... |
SK ஐயாவின் குரலில்:
| கவிநயாவின் குரலில்:
|

தமிழ்-நீ தமிழ்-நீ! தரணீ தமிழ்-நீ!
தமிழ்ப் பால் தர-நீ, வருவாய் உமை-நீ!
தொடுப்பு:
தனியாய் ஒருசேய், தவித்தே அழவும்,
கனிவாய் வரும்தாய், முலைப்பால் தரவும்,
இனிதாய்த் தமிழில், சிவனார் சமயம்,
நனிதாய் வளர, வனிதாய் வருவாய்!
அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ! (தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************
முடிப்பு-1:
குளிர்பூ முகத்தில் குமிழ் புன்சிரிப்பும்,
மிளிர்பூங் கரத்தில் மின்னும் குண்டலமும்,
நளிர்நள் இரவில், நயமாய் எறிந்தாய்,
தளிர்வெண் நிலவாய், தமிழ்ப்பா நிலவாய்!
மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************
முடிப்பு-2:
புவனேஸ்வரி நீ! பரமேஸ்வரி நீ!
ஜகதீஸ்வரி நீ! ஜோதீஸ்வரி நீ!
கமலேஸ்வரி நீ! விமலேஸ்வரி நீ!
அமலேஸ்வரி நீ! நிமலேஸ்வரி நீ!
அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ!)
பார் ஆட்சியும் நீ! நீர் ஆட்சியும் நீ!
சீர் ஆட்சியும் நீ! தேர் ஆட்சியும் நீ!
கா மாட்சியும் நீ! மீ னாட்சியும் நீ!
மா மாட்சியும் நீ! மா காட்சியும் நீ!
மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************
முடிப்பு-3:
மூகாம்பிகை நீ! நாகாம்பிகை நீ!
ஏகாம்பர னின் பாகாம்பிகை நீ!
ராஜாம்பிகை நீ! பீஜாம்பிகை நீ!
லலிதாம்பிகை நீ! ஜகதாம்பிகை நீ!
அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ! )
சிவ மோகினி நீ! சிவ பாகினி நீ!
சிம்ம வாகினி நீ! சிந்தை வாகினி நீ!
சிவ சங்கரி நீ! சக்தி சங்கரி நீ!
சக்தி சங்கரி நீ! சிவ சங்கரி நீ!
மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ!)
(அம்மாவின் பாத கமலங்களில், குழந்தை(இரவி)சங்கரனின் மழலைச் சொல்)

பாடலைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போமா?
முதல் வரியிலேயே அன்னையையும் தமிழையும் ஒரு சேரப் போற்றி, அவளும் தமிழும் ஒன்றே எனக் கூறி அரிதாக ஆரம்பித்திருக்கிறார். தமிழுக்கு அன்னை செய்தது என்ன?
* பிள்ளை தவித்து அழுவதைக் காண விரும்பும் தாயும் உண்டோ? படித்துறையில் சம்பந்தப் பிள்ளை தனிமையில் அழ, அதனைப் பொறுக்க மாட்டாமல், அப்பனுடன் ஓடோடி வந்து அவருக்கு ஞானப்பால் ஊட்டுகிறாள் அம்மை.
* அமாவாசையில் நிலவைக் கண்டதாகச் சொல்லி விடும் பக்தனைக் காக்கும் பொருட்டு, தன் காதணியை எறிந்து, முழு நிலவை அமைத்துத் தரும் அன்னை அபிராமியின் கருணைக்குத் தான் அளவேது?
இந்த செய்திகளைத் தனக்கே உரிய தனித்தமிழில், பாடலின் தொடக்கத்தில் எடுத்து இயம்புகிறார், கேஆரெஸ். “நனிதாய் வளர வனிதையே வருவாய்” என்று கனிவாய் அழைக்கிறார்.
குளிர்பூ முகத்தில் குமிழ் புன்சிரிப்பும்,
மிளிர்பூங் கரத்தில் மின்னும் குண்டலமும்”
என்ன அழகான வரிகள். கையில் காதணியோடு காட்சி தரும் அன்னையின் பூமுகப் புன்னகையின் எழில் அப்படியே கண்முன் விரிகிறது.
அதற்குப் பின் வரும் வரிகளில், அவளுடைய பற்பல வடிவங்களையும், சிறப்புகளையும், பெருமைகளையும், பெயர்களையும் அடுக்கிக் கொண்டே போகிறார்.
“அரி சோதரி நீ எனை ஆதரி நீ”
எனக்குப் பிடித்த வரிகள். அவள் ஆதரவு இல்லாவிட்டால் அணுவும் அசையாதல்லவா.
எத்தனை பெயர்கள், எத்தனை வடிவங்கள், எப்படி அழைத்தாலும், நம் மனதின் நிலைக்கேற்ப, ஒருவளே, பலவிதமாகத் தோற்றம் தரும் அன்னையின் அன்பிற்குத் தான் ஈடேது, இணையேது!
இதனைத் தன் பாடல் வரிகளில் அருமையாக அறியச் செய்திருக்கிறார் கேஆரெஸ்.
இவ்விதம் அவளின் பல நாமங்களையும் சிறப்புகளையும் ஒரே பாடலில் போற்றுவதாலேயே, இந்தப் பாடல் 100-வது பதிவுக்கு வெகு பொருத்தமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இன்னும் சொன்னால் பின்னும் நீண்டு விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, இந்த இடுகையின் பிற சிறப்புகளைச் சொல்ல வருமாறு கேஆரெஸ்ஸை வேண்டுகிறேன்… Over to KRS!

நன்றிக்கா!
சக்தியிடம் வேல் வாங்கிய முருகனாய்...கவிநயா அக்காவிடம் பதிவு வாங்கிய கேஆரெஸ்ஸாய் துவங்கறேன்! :)
முதலில் பாசஞ்சர் ரயில் போல் ஓடிக் கொண்டிருந்த இந்த அம்மன் பாட்டு ரயிலை, எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு மாற்றிய பெருமை கவி-க்காவையும், SK ஐயாவையும் தான் சாரும்! இங்கு அவிங்க போட்ட பதிவுகளின் எண்ணிக்கையை நீங்களே எண்ணிக்கோங்க! :)
அடுத்து...இந்தப் பாட்டை ரொம்ப அருமையாப் பாடிக் கொடுத்த மீனாக்ஷி!
அன்னை அவள் காரியங்களை அவளே நடத்திக் கொள்வாள் என்பதற்கு இதை விடச் சான்று வேண்டுமா?
மதுரை இவிங்க சொந்த ஊர்! மதுரை மீனாக்ஷியே நூறாம் இடுகைக்கு பாடிக் கொடுக்கணும்-ன்னு இருக்கு போல!
இவர்கள் வளர்ந்தது சென்னை. இருப்பது அமெரிக்கா. கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம்.
இவிங்க தீவிர முருக பக்தை. திருப்புகழ் பாடுவதிலும் கற்றுத் தருவதிலும் விருப்பமும் கூட. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 பேர் இவரிடம் திருப்புகழ் கற்று வருகிறார்கள். பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் இசையமைத்துப் பாடுவதில் ஆர்வம் உடையவர்.
SK ஐயா பற்றி அடியேன் என்ன சொல்லிட முடியும்!
அம்மன் பாட்டில் அவர் இட்ட இடுகைகளுக்கு மகுடம் சென்ற 99ஆம் இடுகை! அம்பாளை அழகு தமிழில், மந்திரப் பூர்வமாக, நூறாம் இடுகைக்காகவே எழுந்தருளப் பண்ணியிருந்தார்!
திருப்-புகழ் பாடுவோர் இந்த இரண்டு பேரும், இன்று திரு-வின் புகழைப் பாடி இருக்கிறார்கள்! இருவருக்கும் அடியோங்கள் நன்றி! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! பாட்டுக் குழுவில் கீதம் இசைக்கும் என் நன்-நண்பர் குமரன் மற்றும் பதிவர் அன்புத்தோழிக்கும் நன்றி!

இந்த அம்மா என்பது மந்திரமில்லாத மந்திரச் சொல்!
இந்த மந்திரத்தை ஆலயத்தில் மட்டுமல்லாது, அடி மனதில் அனைவரும் உச்சாடனம் செய்து கொண்டு தான் இருக்காங்க!
நல்லவன்/தீயவன், ஏழை/பணக்காரன், ஆத்திகன்/நாத்திகன், ஞானி/சம்சாரி, அறிவாளி/முட்டாள், உயர்திணை/அஃறிணை, ஆண்/பெண்/திருநங்கை என்று எத்தனை எத்தனை பேதங்கள் கண்ணுக்குத் தெரிந்தாலும்...
உலகில் அத்தனைக்கும் பொதுவான மந்திரம் "அம்மா"!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே! அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!
மிகவும் கொடூர குணம் கொண்ட பெண்கள் இருக்கலாம்! தன் குழந்தைகளையே தவிக்க விட்ட தாய்கள் இருக்கலாம்! இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தாய் இருக்கலாம்! பெற்ற மகவைத் தொட்டியில் வீசும் தாய் இருக்கலாம்! ஆனால்...தாய் வேறு! தாய்மை வேறு!
தாய்கள் தவறலாம்! ஆனால் தாய்மை என்றுமே தவறுவதில்லை!
தாய்மைக்கு ஆண்/பெண் உருவம் இல்லை! அதனால் தான் இறைவனைத் "தாயும்-ஆனவன்" என்றார்கள்! "அரங்கத்து-அம்மா" பள்ளி எழுந்தருளாயே என்று அந்த அரங்கனையும் "அம்மா" என்றே பாடுகிறார்கள்!
ஓடும் நதியும் அம்மா! நாடும் நாடும் அம்மா!
பேசும் தமிழும் அம்மா! பேசாத் தமிழும் அம்மா!
இந்த அம்மன் பாட்டு-100 இல், உலக அன்னையை (ஜகன் மாதாவை), அறம் வளர்த்த நாயகியை (தர்ம சம்வர்த்தினியை) தமிழ்த் தாயாகப் போற்றி வழிபடுவோம்! உலக அன்னையின் ஆதரவை மட்டுமே பெற்று, தன் பெற்றோர் ஆதரவு இன்றி வாழும் பல குழந்தைகளின் நலனை இன்று நினைத்துக் கொள்வோம்! சொல்லிலும் செயலிலும் இருத்துவோம்!
துளசி டீச்சர், கீதாம்மா, வல்லியம்மா, புதுகைத் தென்றல் அக்கா, ராமலக்ஷ்மி, ஷைலஜாக்கா, கெபி அக்கா, இன்னும் பல பேரு...மகளிர் சக்தி கொண்ட இந்த அம்மன் பாட்டு வலைப்பூ!
சக்தி தாசர்களான மெளலி அண்ணா, கணேசன், கைலாஷி ஐயா இன்னும் பலர்...வாசகர் வட்டம் கொண்ட இந்த வலைப்பூ...
பா மாலைகளையும், பூ மாலைகளையும் தொடர்ந்து அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும், அன்னைக்குச் சூட்ட வாழ்த்துங்கள் மக்களே!
ஜனனி, ஜனனி - தமிழ் நீ, தமிழ் நீ!
அரி சோதரி நீ - எமை ஆதரி நீ!
மண்ணளக்கும் தாயே! மகமாயி திருவடிகளே சரணம்!

வாழ்த்துகள் கவிநயா மற்றும் கேஆர்எஸ் !
ReplyDeleteஹைய்யோ....
ReplyDeleteமீனாட்சி குரலும் பாட்டின் அழகும் எங்கியோ இழுத்துக்கிட்டுப் போயிருச்சுப்பா.
தமிழில் அழகுச் சொற்களுடன் பாட்டு அட்டகாசமாப் பொருந்தி வருது இசையோடு.
இன்னிக்கு கார்த்திகை தீபத் திருநாள்.
சாமிக்கு இந்தப் பாட்டுதான் நைவேத்தியம்.
நல்லா இருங்க எல்லோரும்.
பி.கு: இன்னும் கவிநயாவைக் கேக்கலை. அப்புறம் வரேன்
சொல்ல விட்டுப்போச்சே.......
ReplyDeleteநூறுக்கு, நூற்றுக்கணக்கான வாழ்த்து(க்)கள்.
குழுவினருக்கு வாழ்த்துக்கள்.பாடலின் சொற்கள் தன் போக்கில் தானாக வந்து அமர்ந்தது போல் இருக்கிறது மீனாக்ஷி மேடம் மிக அருமையாகப் பாடியிருக்காங்க...படங்களும் அருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
ReplyDeleteசித்ரூபிணி எல்லோருக்கும் நலமருள பிரார்த்திக்கிறேன்.
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteவாழ்த்துகள் கவிநயா மற்றும் கேஆர்எஸ் !//
முதல் வாழ்த்துக்கு நன்றி கோவி அண்ணா!
SK ஐயாவுக்கு வாழ்த்து எங்கே? அவர் பாடியதைக் கேட்டீங்களா? சீக்கிரம் கேட்டு தனிப் பின்னூட்டம் போடுங்க! :)
//துளசி கோபால் said...
ReplyDeleteஹைய்யோ....
மீனாட்சி குரலும் பாட்டின் அழகும் எங்கியோ இழுத்துக்கிட்டுப் போயிருச்சுப்பா//
ஹிஹி! டீச்சர் ஆழ்வார் போல! அரங்கனைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்கு முதலில் வருவது "ஹைய்யோ"! :)
//தமிழில் அழகுச் சொற்களுடன் பாட்டு அட்டகாசமாப் பொருந்தி வருது இசையோடு//
ஆமாம் டீச்சர்
அடியேன் எழுதிய போது அமைந்த சொற்செட்டுகளை, கூடவே இருந்து பார்த்தா மாதிரி பாடியிருக்காங்க மீனாட்சி! இத்தனைக்கும் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு கிடையாது! :)
//இன்னிக்கு கார்த்திகை தீபத் திருநாள்.
சாமிக்கு இந்தப் பாட்டுதான் நைவேத்தியம்//
அப்போ, இன்னிக்கு நான் நியூசி-கிரைஸ்ட் சர்ச்சில், உங்க வீட்டுல இருப்பேன்-ன்னு சொல்லுங்க! வேர் இஸ் மை வடை & வேர் ஆர் ஜிகே & ஜிக்குஜூ? :)
//நல்லா இருங்க எல்லோரும்//
ஆசிக்கு நன்றி டீச்சர்!
// துளசி கோபால் said...
ReplyDeleteசொல்ல விட்டுப்போச்சே.......
நூறுக்கு, நூற்றுக்கணக்கான வாழ்த்து(க்)கள்.//
நூற்றுக்கணக்கான அன்பான நன்றிகள் டீச்சர்!
//மதுரையம்பதி said...
ReplyDeleteகுழுவினருக்கு வாழ்த்துக்கள்//
வர வேணும் மெளலி அண்ணா! நன்றி!
//பாடலின் சொற்கள் தன் போக்கில் தானாக வந்து அமர்ந்தது போல் இருக்கிறது//
ஹிஹி!
யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற மாலவர் தந்ததினால்....
அஞ்சே நிமிடம் தான்! பேருந்தைப் பிடிக்க ஆபீசை விட்டுக் கிளம்பும் போது அவசரம் அவசரமாக எழுதியது!
இதில் இருந்தே தெரியலையா அடியேன் போக்கு அல்ல! அன்னையின் வாக்கு-ன்னு!
//மீனாக்ஷி மேடம் மிக அருமையாகப் பாடியிருக்காங்க...//
அவங்க தான் பதிவின் கதாநாயகி! வெரி மெலோடியஸ்!
//படங்களும் அருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது//
நியூயார்க் ராச்செஸ்டர் ராஜராஜேஸ்வரியின் அபிடேகமும், அலங்காரமும்!
//சித்ரூபிணி எல்லோருக்கும் நலமருள பிரார்த்திக்கிறேன்//
ததாஸ்து!
அப்படியே அருள்வாளாக!
வடை எல்லாம் இல்லை.
ReplyDeleteபொரி உருண்டை 'ஆறு' இருக்கு.
சீக்கிரம் வந்தால் கிடைக்கும்:-)
வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஅருமையான பாட்டு! ரொம்ப சூப்பரா அனுபவிச்சு பாடியிருக்காங்க SK அய்யாவும், கவினயாவும்....வாழ்த்துக்கல் (hmm..how do I type the correct L at the end of vazhthukkal with ekalappai? Forgive me for all typing errors as I am just learning how to type in tamil:-) )
ReplyDeleteKRS (and Kavinaya), thank you for giving me an opportunity to sing this beautiful song. I thoroughly enjoyed it.
Fantastic teamwork on amman paattu.
-மீனாக்ஷி
// அம்மன் பாட்டின் முதலமைச்சர், நம்ம கவிநயா அக்காவைப் //
ReplyDeleteநாற்காலில ஏறினா, பிறகு இறங்க வேண்டி வரும்... வேணாமப்பா. தொண்டரடிகளுக்கு அடியவளாகவே இருந்துக்கறேன் :)
மௌலி சொன்னது போல படங்களெல்லாம் மிக அழகு. குறிப்பா அன்னையின் திருவடி. நன்றி கண்ணா.
வேண்டினால் தட்டாமல் தரும் அன்னையைப் போல, என் தோழி மீனாக்ஷியும் வேண்டினால் தட்டாமல் பாடித் தந்து விடுவார் :) அவருக்கு என் சிறப்பு நன்றிகள்.
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வருகை தந்து சிறப்பித்த கோவி.கண்ணன், துளசிம்மா, மௌலி, கிரி, மற்றும் மீனாக்ஷிக்கு நன்றிகள் பல.
அம்மன் பாட்டுக் குழுவில் எனக்கும் ஒரு இடமளித்த அன்னைக்கும், குமரனுக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்.
//துளசி கோபால் said...
ReplyDeleteவடை எல்லாம் இல்லை.//
அனுமத் ஜெயந்திக்கு இன்னொரு தபா வரேன் டீச்சர்.
//பொரி உருண்டை 'ஆறு' இருக்கு.
சீக்கிரம் வந்தால் கிடைக்கும்:-)//
சாப்டாச்சே! :)
கார்த்திகைக்கு கூட்டு/அப்பம் வேற உண்டே! அம்மா முருங்கை பொரிச்ச கீரை வேற செய்வாங்க!
//கிரி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் :-)//
நன்றி தல!
//மீனாக்ஷி said...//
ReplyDeleteவாங்க மீனாக்ஷி!
//அருமையான பாட்டு! ரொம்ப சூப்பரா அனுபவிச்சு பாடியிருக்காங்க SK அய்யாவும், கவினயாவும்....வாழ்த்துக்கள்//
உங்களுடன் சேர்ந்து நாங்களும் மணக்கிறோம்!
//(hmm..how do I type the correct L at the end of vazhthukkal with ekalappai? Forgive me for all typing errors as I am just learning how to type in tamil:-)//
கவி இருக்க கவ-லை ஏன்? :)
கவிநயா அக்காவைப் புடிங்க! ஒரே நாள்-ல தமிழ் நீ தமிழ் நீ-ன்னு உங்களைத் தட்டச்ச வச்சிருவாங்க! :)
//KRS (and Kavinaya), thank you for giving me an opportunity to sing this beautiful song. I thoroughly enjoyed it.
Fantastic teamwork on amman paattu.//
Thanks again Meenakshi.
Your singing made adiyen's song more appealing!
Looking fwd to more meaningful and purposeful satsangams like this!
//கவிநயா said...
ReplyDeleteநாற்காலில ஏறினா, பிறகு இறங்க வேண்டி வரும்... வேணாமப்பா. தொண்டரடிகளுக்கு அடியவளாகவே இருந்துக்கறேன் :)//
ஹிஹி!
அப்போ நீங்க நம்ம கட்சி! :)
//மௌலி சொன்னது போல படங்களெல்லாம் மிக அழகு. குறிப்பா அன்னையின் திருவடி. நன்றி கண்ணா//
காய்ச்சல்-லயும் ரொம்பவே காய்ஞ்சி போய் தேடினேன்-க்கா! :)
ராச்செஸ்டர் அன்னையின் முகக்காந்தி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் க்ளோசப்-ல! அதுவும் பால்/மஞ்சள் அபிடேகம், அலங்காரம், திருவடி-ன்னு அழகா அமைந்து விட்டது!
//கவிநயா said...
ReplyDeleteஎன் தோழி மீனாக்ஷியும் வேண்டினால் தட்டாமல் பாடித் தந்து விடுவார் :) அவருக்கு என் சிறப்பு நன்றிகள்//
தட்டாமல்-ன்னு தட்டிக் கொடுக்கறீங்க தோழியை! ஹிஹி! தட்டுங்க தட்டுங்க! நாங்களும் அடுத்த முறை உங்களைத் தட்டுறோம் பாடல் தேவைப்படும் போது! :)
//அம்மன் பாட்டுக் குழுவில் எனக்கும் ஒரு இடமளித்த அன்னைக்கும், குமரனுக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்//
உங்களுக்கு இல்லாத இடமாக்கா?
எங்க அ.உ.ஆ.சூ குமரனுக்கே நீங்க தான் இடம் அளிச்சீங்க-ன்னு ஊர்ல பேசிக்கறாங்க! :)
அன்னையின் அழகினையும் பெருமையையும்.. அழகா பாடிருக்கீங்க.
ReplyDeleteஅடியேன் அகமகிழ்ந்தேன்..
அக்கா, நீங்க பாடினத மட்டும் தான் கேக்க முடிஞ்சது.. வசீகரப்படுத்தியிருக்கீங்க..
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிநயா, மீனாட்சி, கேயாரஸ் - ஒரு நல்ல இன்னிசை அனுபவம் தந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி
நூற்றுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//Raghav said...
ReplyDeleteஅன்னையின் அழகினையும் பெருமையையும்.. அழகா பாடிருக்கீங்க.
அடியேன் அகமகிழ்ந்தேன்..//
நன்றி ராகவ்! உங்கள் அகமகிழ்ச்சி கண்டு அகமகிழ்ச்சி! :)
//அக்கா, நீங்க பாடினத மட்டும் தான் கேக்க முடிஞ்சது.. வசீகரப்படுத்தியிருக்கீங்க..//
சூப்பர்!
மற்ற ஒலிச்சுட்டிகள் வேலை செய்கிறது தானே?
//நாகு (Nagu) said...
ReplyDeleteசதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.
கவிநயா, மீனாட்சி, கேயாரஸ் - ஒரு நல்ல இன்னிசை அனுபவம்//
நன்றி நாகு!
எங்களுக்கும் நல்ல இசை அனுபவம் தான்! இனி கம்போசிங் போட்டு களை கட்டிறலாம். என்ன சொல்றீங்க? :)
//சதங்கா (Sathanga) said...
ReplyDeleteநூற்றுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி சதங்கா!
//எங்க அ.உ.ஆ.சூ குமரனுக்கே நீங்க தான் இடம் அளிச்சீங்க-ன்னு ஊர்ல பேசிக்கறாங்க! :)//
ReplyDeleteஎந்த ஊர்ல? :) இதெல்லாம் கொஞ்சம் ஓ...வரா இல்ல? அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்லாம் நாங்க தூ...ரத்தில இருந்துதான் பாத்துக்கிட்டிருக்கோம் :)
மீனாக்ஷி அக்காவைத்தானே சொன்னீங்க ராகவ்?
ReplyDeleteராகவ், நாகு, சதங்கா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
எப்படி சொல்வேன் இந்த அடியவர்களின் பெருமையை! நூறாவது இடுகையை மிக அருமையாக அமைத்த இரவிசங்கர், மீனாட்சியக்கா, கவிநயாக்கா, எஸ்.கே. ஐயா அனைவருக்கும் அடியேனின் தலை தாழ்ந்த வணக்கங்கள்.
ReplyDeleteகவிநயா அக்கா அ.உ.ஆ.சு. இரவிசங்கர் தான். வேறு எவரும் இல்லை. :-)
ReplyDelete(அ.உ.ஆ.சு - அகில உலக ஆன்மிக சுப்ரீம்ஸ்டார்)
//கவிநயா said...
ReplyDeleteமீனாக்ஷி அக்காவைத்தானே சொன்னீங்க ராகவ்?//
:)
கவி-க்கா வர வர நல்லாவே பாயின்ட் பிடிக்கறாங்கப்ப! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஎப்படி சொல்வேன் இந்த அடியவர்களின் பெருமையை!//
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
//நூறாவது இடுகையை மிக அருமையாக அமைத்த இரவிசங்கர், மீனாட்சியக்கா, கவிநயாக்கா, எஸ்.கே. ஐயா அனைவருக்கும் அடியேனின் தலை தாழ்ந்த வணக்கங்கள்//
அம்மன் பாட்டு ஆதி கவி, எங்கள் குமரனுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteகவிநயா அக்கா அ.உ.ஆ.சு. இரவிசங்கர் தான். வேறு எவரும் இல்லை. :-)
(அ.உ.ஆ.சு - அகில உலக ஆன்மிக சுப்ரீம்ஸ்டார்)//
me the esc! :)
//கவி-க்கா வர வர நல்லாவே பாயின்ட் பிடிக்கறாங்கப்ப! :)//
ReplyDeleteஅப்ப இது வரை அப்படி இல்லைங்கறீங்களா :) என் 'இலட்சணம்' எனக்குத் தெரியாதா? :)
//அ.உ.ஆ.சு - அகில உலக ஆன்மிக சுப்ரீம்ஸ்டார்//
ReplyDeleteநீங்க ரெண்டு பேருமே அதான் தம்பீஸ்!
100!! வாழ்த்துகள்!!
ReplyDeleteநூறுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள்! எல்லார் குரலிலும் பாட்டு அருமை! அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
ReplyDelete//இலவசக்கொத்தனார் said...
ReplyDelete100!! வாழ்த்துகள்!!//
100!! நன்றிகள்!!
:)
//ஷைலஜா said...
ReplyDeleteநூறுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள்! எல்லார் குரலிலும் பாட்டு அருமை! அவர்களுக்கும் பாராட்டுக்கள்!//
நன்றி-க்கா! நூறாம் இடுகைக்கு மறக்காம வந்து வாழ்த்தியமைக்கு!
இ.கொ. மற்றும் ஷையக்காவிற்கு நன்றிகள்.
ReplyDeleteதங்களது உன்னதமான பாடலை நான் ஆனந்த பைரவி ராகத்தில் பாட முயற்சி செய்திருக்கிறேன்.
ReplyDeletehttp://uk.youtube.com/watch?v=LRMFHO9remw
நேரம் கிடைக்கும்போது கேட்கவும்.
சுப்பு ரத்தினம்.
எனது முந்தைய பின்னோட்டத்தில், இப்பாடல் கவி நயா அவர்கள் இயற்றியது என்று நினைத்து அவர்களுக்கு
ReplyDeleteநன்றி தெரிவித்திருந்தேன்.
இப்போது திரும்பவும் பதிவினை கவனமாக படித்தபோது பாடலை திரு கே ஆ ரெஸ் அவர்கள் இயற்றி இருக்கிறார்கள் என்று
தெரிந்தது. அவர்களது அனுமதி பெறாமல் அவர்தம் பாடலை ஏதோ எனக்குத் தெரிந்தவாறு பாடி அதை யூ ட்யுபிலேயும்
போட்டு விட்டேன்.
இப்பதான் தெரிகிறது.
// அந்தப் பாடலின் மெட்டிலேயே நம் கேஆரெஸ்,
இனிக்கும் செந்தமிழில், (கண்) பனிக்கும் அருமையான பாடலொன்றை இயற்றித் தந்திருக்கிறார்//
நண்பர் கேஆரெஸ் அனுமதி தருவாரென நினைக்கிறேன். இல்லையெனின் யூ ட்யூபில் டெலிட் செய்துவிடுகிறேன்.
கிழவனை மன்னிக்கவேண்டும்.
இருந்தாலும் ஒரு வார்த்தை. கவி நயாவாக இருந்தாலும் சரி, கேஆரெஸ் ஆக இருந்தாலும் பாடச் சொன்னது, ஏன்
பாடியதே ,அந்தக் கலைவாணி தானே.!! அவள் படத்தை தான் நான் சேர்த்திருக்கிறேனே ! சரஸ்வதி தேவி யின்
அருளால், கேஆரெஸ்ஸும் கவி நயாவும் தொடர்ந்து ஒரு நூறு பாடல்க்ளை ஒரு ஆயிரம் பாடல்களுக்குக் கொண்டு
செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,
சுப்பு ரத்தினம்.
வருக சுப்பு தாத்தா. ஆனந்த பைரவி ஆனந்தமாக இருக்கிறது :) மிக்க நன்றி.
ReplyDeleteநூறாவது பதிவிற்காக இரவி ஷங்கர் ஐயா, கவிநயா மற்றும் அம்மன் பாடல்களில் பங்களித்த அனைத்து அம்மன் பக்தர்களுக்கும் பாடல்களை படித்து இன்புற்ற அன்பர்கள் அனைவருக்கும் அன்னை அருள் புரிய வேண்டுகிறேன்.
ReplyDeleteஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி.
//நண்பர் கேஆரெஸ் அனுமதி தருவாரென நினைக்கிறேன். இல்லையெனின் யூ ட்யூபில் டெலிட் செய்துவிடுகிறேன்.
ReplyDeleteகிழவனை மன்னிக்கவேண்டும்//
வாங்க சூரி சார்!
அடியேனின் பாடல் தான் என்றாலும், அன்னையின் திருவடிகளில் கைகாட்டி, கண்டருளப் பண்ணிய பின், அது பிரசாதம் ஆகிவிட்டது!
எனவே இப்போ அது அனைத்து அடியார்களுக்கும் சொந்தம்! :)
இப்போ தான் இந்தப் பின்னூட்டம் பார்த்தேன்! வீட்டுக்குப் போய் Youtube கேட்டுவிட்டுச் சொல்றேன்! உங்கள் ஆர்வம் கண்டு மிகவும் மகிழ்ச்சி! :)