Friday, January 23, 2009

லலிதா நவரத்தின மாலை 2

ஞான கணேசனையும் ஞான ஸ்கந்தனையும் ஞான சத்குருவையும் ஞானானந்தனையும் சரணடைந்த பின்னர் இந்த லலிதா நவரத்தின மாலை என்னும் நூல் நன்கு அமைய கணநாயகனைப் பாடும் பாடல் வருகிறது. இயற்கைச் சக்திகளே கணங்கள் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அந்த இயற்கைச் சக்திகளின் தலைவனாக விநாயகர் இருப்பதால் அவருக்கு கணநாயகர் என்றும் ஒரு பெயர். அவருக்கு யானை உருவம் இருப்பதால் 'கணநாயக வாரணம்' என்றும் அழைக்கப்படுகிறார். அந்த கண நாயக வாரணம் இந்த நவரத்தின மாலையினைக் காக்கும்.

யார் மேல் இந்த நவரத்தின மாலை என்று கேட்டால் உலகங்களையெல்லாம் உடையவளான புவனேஸ்வரியின் பால் சேர்க்கப்படும் நவரத்தின மாலை இது. அவளது புன்னகை நலம் பூக்கும் புன்னகை. எல்லோருக்கும் நலத்தையே தரும் புன்னகை. அவள் ஆக்கும் தொழிலுடன் ஐந்து அறங்களையும் செய்கிறாள். ஆக்கும் தொழில் ஐந்தறன் ஆற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரி. அவள் பால் சேர்க்கும் நவரத்தின மாலை இது. இதனைக் காக்கும் கண நாயக வாரணமே.

ஆக்கும் தொழில் ஐந்தறன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தினமாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே


இந்த புவனேஸ்வரியே லலிதாம்பிகை. மென்மையான கொடியைப் போன்ற அகிலங்களுக்கெல்லாம் அன்னை. கொடியைப் போன்று மென்மையானவள் என்பதால் லலிதை. அனைத்து உலகங்களுக்கும் அன்னை என்பதால் லலிதாம்பிகை. அவளுக்கு வெற்றி என்றால் அனைத்துலகிற்கும் அனைத்துலக மக்களுக்கும் அனைத்துலக உயிர்களுக்கும் வெற்றி. அதனால் அன்னையின் வெற்றியை வேண்டி அவளையே வணங்குகிறோம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அடுத்த பகுதியிலிருந்து ஒவ்வொரு இரத்தினமாகவும் அன்னை எப்படி திகழ்கிறாள் என்று பார்ப்போம்.

12 comments:

  1. கணநாயக வாரணனின் திருவடிகள் சரணம்.

    ஐந்து அறம் பற்றி விளக்கமா சொல்லுங்களேன்...

    ReplyDelete
  2. ஐந்து அறங்கள்:

    1. அறிவுடையவர்களுக்கு ஐயம் (தானம்) இடுதல் என்னும் அறம்
    2. விருந்தினருக்கு விருந்தோம்பல் என்னும் அறம்
    3. தெய்வத்தை வணங்குதல் என்னும் அறம்
    4. தென்புலத்தார் என்னும் முன்னோர்களை வணங்குதல் என்னும் அறம்
    5. எல்லா உயிர்களையும் காத்தல் என்னும் அறம்

    இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றாலும் சொல்கிறேன் அக்கா.

    ReplyDelete
  3. நன்றி குமரா.

    //அறிவுடையவர்களுக்கு ஐயம் (தானம்) இடுதல் என்னும் அறம்//

    இது சரியா புரியலை. நேரம் கிடைக்கும் போது சொல்லுங்களேன்... மீண்டும் நன்றி :)

    ReplyDelete
  4. //அறிவுடையவர்களுக்கு ஐயம் (தானம்) இடுதல் என்னும் அறம்//

    ஐயமும் பிச்சையும் - விளக்குங்களேன்!

    அப்படியே லலிதை என்றால் என்ன? ஏன் லலித்+அம்பிகை?

    ReplyDelete
  5. கவிநயா அக்கா. ஐயம் என்பதற்கு இன்னொரு பொருள் தானம் செய்தல் - ஐயம் இட்டு உண் என்று படித்திருக்கிறோமே. அறிவுடையோர்களுக்கு செய்யும் தானம் என்னும் போது கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஞானமடைந்த துறவியர்களுக்கும் பொருள் தரவேண்டும் என்ற பொருளில் சொன்னேன்.

    ReplyDelete
  6. ஐயமும் பிச்சையும் பற்றி நீங்கள் சொல்லியிருப்பீர்களே இரவி. இங்கேயும் சொல்லியிருக்கிறேன் - சின்னதாக. விரிவாக கோதைத் தமிழில் இந்த வரி வரும் போது வரும். :-)

    //கொடியைப் போன்று மென்மையானவள் என்பதால் லலிதை. அனைத்து உலகங்களுக்கும் அன்னை என்பதால் லலிதாம்பிகை. //

    இந்தப் பகுதியைப் பார்க்காமல் விட்டுவிட்டீர்களா? அல்லது வேறு பொருள் உண்டு என்று நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  7. //கொடியைப் போன்று மென்மையானவள் என்பதால் லலிதை. அனைத்து உலகங்களுக்கும் அன்னை என்பதால் லலிதாம்பிகை. //

    இந்தப் பகுதியைப் பார்க்காமல் விட்டுவிட்டீர்களா? அல்லது வேறு பொருள் உண்டு என்று நினைக்கிறீர்களா?//

    பார்த்தேன் குமரன்!
    ஆனால் லலித் என்பதற்கு இன்னும் கொஞ்சம் பெயர்க் காரணம் வேணும்!
    ஏன் லலிதை?
    லலித் = உலகமா? கொடியா?
    எந்தக் கொடி போன்றவள்?
    இந்தத் திருநாமத்தின் சஹஸ்ரநாமத்தில் வருகிறதா? அதன் விளக்கம் என்ன?

    ReplyDelete
  8. டாங்கீஸ் குமரா :)

    ReplyDelete
  9. சொன்னது கொஞ்சம் குழப்பமாக அமைந்துவிட்டதா இரவி? லலிதை என்றால் மென்மையானவள். அம்பிகை என்றால் (அனைத்துலகுக்கும்) அன்னை. அதனால் லலிதாம்பிகை என்றால் மென்மையான அன்னை என்று பொருள்.

    லலித் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  10. தொடர்ந்து இப்பகுதியினைப் படிக்க அருள் தா கணநாதா.

    ReplyDelete
  11. சின்னவயசிலேயே இந்தப் பாட்டு எனக்கு மனப்பாடம். அன்னையின் முன் மனமுருகி ராகமாக பாடினால் மனதுக்கு இதமாய் இருக்கும். நவரத்தினங்களில் அன்னை.

    ஒலி வடிவம் இருந்தால் போடுங்கள்.
    தரவிறக்கம் செய்து அனைவரும் அருள் பெரட்டும்.

    நன்றி

    ReplyDelete
  12. புதுகைத் தென்றல் அக்கா. ஒலி வடிவம் அன்புத் தோழியின் இடுகையில் இருக்கிறது. http://ammanpaattu.blogspot.com/2007/07/lalitha-navarathina-maalai.html

    ReplyDelete