Thursday, January 22, 2009

ஏழுலகம் ஏத்துகின்ற எங்கள் அம்மையே !




ஏழுலகம் ஏத்துகின்ற எங்கள் அம்மையே - நீயும்
காக்க வேணும் அன்புடனே வந்து எம்மையே

வினைகளெல்லாம் சேர்ந்தழுத்த உள்ளம் வெம்பியே - நாங்கள்
வந்து நின்றோம் சந்நிதியில் உன்னை நம்பியே

மீன்விழியால் காப்பவளே மாந்தர் தம்மையே - அந்த
வான்போற்றும் தேனேமீ னாக்ஷி அம்மையே

கடைவிழியால் சிரிப்பவளே கருணை பொங்கவே - காஞ்சி
மாநகரின் மணியேகா மாக்ஷி அம்மையே

காசினியில் யாவருக்கும் கருமந் தொலையவே - காசி
நாதனுடன் விளங்கும்விசா லாக்ஷி அம்மையே

ஆதிசிவன் அருகினிலே அம்பலத்திலே - அவன்
அகம்மகிழ அருளும்சிவ காமி அம்மையே

காதணியைத் தானெறிந்து நிலவு தன்னையே - அன்பு
பட்டருக்காய் அமைத்தஅபி ராமி அம்மையே

அரும்புப்பிள்ளை அழுதிருக்க அன்னையாகவே - வந்து
அமுதுஊட்டி அணைத்தசிவ சக்தி அம்மையே

எங்களையும் அரவணைப்பாய் அன்புமீறவே - நாங்கள்
செய்யும்பிழை பொறுத்தருள்வாய் தன்மையாகவே

வினைகளெல்லாம் சேர்ந்தழுத்த உள்ளம் வெம்பியே - நாங்கள்
வந்து நின்றோம் சந்நிதியில் உன்னை நம்பியே


--கவிநயா

6 comments:

  1. ரொம்ப நாளைக்கப்புறமாக வாய் விட்டுப் பாடிய புதிய பாடல் அக்கா இது. மிக நன்றாக இருந்தது. தாள நயத்துடன் பொருள் வளத்துடன் எல்லா ஊர் அம்மன்களையும் அருமையாகப் பாடும் பாடல் இது.

    ஐயப்பன் பஜனையின் போது பாடுவதற்கு மிகவும் ஏற்ற பாடல் இது. பஜனை நடத்தும் யாருடைய கண்ணிலாவது பட்டு பஜனையின் போது பாடப்பட வேண்டும் என்று ஆசை.

    ReplyDelete
  2. ஆகா, மிக்க மகிழ்ச்சி குமரா :) மிக்க நன்றியும்.

    ReplyDelete
  3. பாடல் மிகவும் பிடித்திருந்தது கவிநயாக்கா.
    One of the best ones!

    ReplyDelete
  4. வாங்க ஜீவா. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

    ReplyDelete
  5. மதுரை மீனாக்ஷி, காஞ்சி காமாக்ஷி, காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி, சிதம்பரம் சிவகாமி, ஆதி சிவசக்தி அனைவரையும் காப்பாற்று அம்மா.

    கவிதை அருமை கவிநயா.

    ReplyDelete
  6. வாங்க கைலாஷி. மிக்க நன்றி.

    ReplyDelete