Thursday, April 2, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -- 3

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -- 3 [61 - 91]
[பங்குனியில் ஒரு நவராத்திரி-5]
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’


[முந்தைய பதிவு]

நித்திலமே கற்பகமே நின்மலமே நன்மணியே
சுத்தபரி பூரணியே சுந்தரியே - அத்தருடன்

வாதாடு மங்கையே மாமந்த்ர ரூபியே
வேதாந்தி யேகமல மெல்லியலே - நாதாந்த

மாயேச் சுவரியே மங்கையே மாமறைக்குந்
தாயாகி நின்ற சரஸ்வதியே - காயாய்ப்

பழுத்த பழமாய்ப் பழத்திரதத் தானாய்
முழுத்தபரா னந்த முதலாய் - எழுத்துமுதல்

ஆறுசம யங்களுக்குள் அவ்வவர்க்கும் வெவ்வேறாய்
வேறுபல ரூப விகற்பமதாய்க் - கூறரிதாய்

அங்கங்குந் தானாய் அமர்ந்தவளே ஆதியந்தம்
எங்கெங்குந் தானாய் இருந்தவளே - திங்கள்நுதல்

அஞ்சுகமே தேனே யணங்கே யமுதமொழிக்
கிஞ்சுகமே பிஞ்சுமதிக் கிள்ளையே - கொஞ்சுகுயில்

கன்னி திரிசூலி கபாலி சிவகாமி
மன்னு கவுரி மகமாயி - பொன்னின் மலர்த்

தாளி சதுரி சவுந்தரிமுக் கண்ணுடைய
காளி பகவதி கங்காளி - தூளியாத்

தக்கன் தலையறுத்த தத்துவத்தி தற்பரத்தி
அக்கினிகை யீர்ந்த அமர்க்களத்தி - மிக்கபுகழ் [70]

வீரசக்தி மேருவினை வில்லா வளைத்தவொரு
பராசக்தி வேதப் பராசக்தி - தாரணிகள்

கொண்டகா ரிச்சிக்குங் குந்தளத்தி மாமதனன்
சண்டைக்கா ரிச்சி சகலத்தி - துண்டமதிச்

செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி
பஞ்சசக்தி கொந்தளத்தி பைம்பணத்தி - அஞ்சனத்தி

முத்துவடக் கொங்கைச்சி முல்லை முகிழ் நகைச்சி
பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத்தவெள்ளை

அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புடைச்சி
செக்க ரிளம்பிறைச்சி செண்பகத்தி - தக்கமணி

ஓலைக் குழைச்சி உபதேசக் குண்டலச்சி
மாலைக் கழுத்தி மவுனத்தி - ஞாலமெல்லாம்

அக்கரத்தி பொக்கணத்தி அண்டபகி ரண்டத்தி
முக்கணத்தி நிட்களத்தி மோட்சத்தி - மிக்கபுகழ்

ஏகாக் கரத்தி இமயப் பருப்பதத்தி
நாகாதி பூண்டசிங்க நாதத்தி - வாகான

பத்மா சனத்தி பரிமளத்தி பாம்பணைத்தி
கற்பாந் தரத்தி கருநிறத்தி - விற்காம

வேடிச்சி நல்லதொரு மீனவனுக் கன்றுமுடி
சூடிச்சி கொக்கிறகு சூடிச்சி - நாடிச்சீர் [80]

பாதந் தனைத்தேடும் பங்கயத்தில் வீற்றிருக்கும்
வேதன் தலையறுத்த வித்தகத்தி - நீதிபுனை

பாடகத்தி கீதப்ர பந்தத்தி வெள்ளிமன்றுள்
ஆடகத்தி கூடலுக்குள் ஆதியே ஏடெதிரே

ஏற்றுவித்து முன்சமணர் எண்ணா யிரர்கழுவில்
வீற்றிருக்க வைத்தமறை வித்தகியே - நாற்றிசையும்

கொண்டாடப் பெற்றதொரு கோமளமே சாமளையே
தண்டா மரைத்திருவே தையலே - மண்டலங்கள்

எங்குமொத்து நின்றருளும் ஈஸ்வரியே மாமதுரை
அங்கயற்கண் நாயகியே அம்மையே - துங்க

ஒளியே பெருந்திருவே ஓதிமமே உண்மை
வெளியே பரப்பிரம வித்தையே - அளிசேரும்

கொந்தளக பந்திக் குயிலே சிவயோகத்
தைந்தருவே மூவருக்கும் அன்னையே - எந்தன் இடர்

அல்லல்வினை யெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்லசவு பாக்கியத்தை நல்கியே - வல்லபத்தின்

ஆசுமது ரஞ்சித்ர வித்தார மென்றறிஞர்
பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு - நேசமுடன்

தந்தென்னை யாட்கொண்டு சற்குருவாய் என் அகத்தில்
வந்திருந்து புத்தி மதிகொடுத்துச் - சந்ததமும்

நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண். [91]
*************************


“மீனாட்சியம்மை கலிவெண்பா” நிறைந்தது!

யாவினும் நலம் சூழ்க!

*******************************


அருஞ்சொற்பொருள்:

61-நித்திலம்-முத்து; நின்மலம்-குற்றமற்றவள்; பரிபூரணி-எங்கும் நிறைந்தவள்; அத்தர்-தலைவர்.

62. வாதாடும்-வாதிக்கும்; தர்க்கம் செய்யும்; மந்த்ர ரூபி-மந்திரங்களையே வடிவாகக் கொண்டவள்; வேதாந்தி-வேத முடிவிலுள்ளவள்; நாதாந்த-நாத தத்துவத்தின் முடிவிடமாய்.

63. மாயேஸ்வரி-பெரிய நாயகி.

64. ரசம்-சுவை; முழுத்த-நிறைந்த; பரானந்தம்-சிவானந்தம்; முதல்-அடிப்படை; எழுத்துமுதல்-முதல் எழுத்தான அகரம் போன்றவள்.

65. அவ் உவர்-அந்தந்த மதத்தினர்; வெவ்வேறு-வேறுபட்ட தெய்வங்கள்; விகற்பம்-மாறுபட்ட புன்சிறு தெய்வங்கள்.

66. திங்கள்-சந்திரன்; நுதல்-நெற்றி.

67.அஞ்சுகம்-அழகிய சிறந்த கிளி; அணங்கு-தெய்வப் பெண்; சிஞ்சுகம்-கோவைக் கனி போன்ற சிவந்த வாயையுடையவள்; பிஞ்சுமதி-பிறைச் சந்திரன்; கொஞ்சு-பிரியமாகப் பாடவல்ல.

68. கன்னி-என்றும் இளமையானவள்; திரிசூலி-முத்தலை சூலமுடையவள்; கபாலி-மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவள்.

69. தாளி-கால்களையுடையவள்; சதுரி-சாமர்த்தியம் வாய்ந்தவள்; பகவதி-சிறந்த பிராட்டி; கங்காளி-எலும்பு மாலை அணிந்தவள்; தூளியா-தூளாகும்படி.

70. தத்துவத்தி-தத்துவங்களின் முடிவிடமாக உடையவள்; தற்பரத்தி-தானாகத் தோன்றிய மேன்மை பொருந்திய தனக்கு ஒப்பில்லாதவள்; ஈர்ந்த-அகப்படுத்திய.

71. பராசக்தி-மேலான ஆற்றல் பொருந்தியவள்; தாரணி-பூமி.

72. கார்-மேகம்; குந்தளத்தி-கருமையான கூந்தலையுடையவள்; சண்டை காரிச்சி- எதிர்த்துப் போரிடும் காமரூபம் பொருந்தியவள்; சகலத்தி-எல்லா தன்மைகளையும் தன்னிடம் இயல்பாய்ப் பெற்றவள்; துண்டமதி-பிறைச் சந்திரன்.

73. கஞ்சுளிச்சி-சட்டை அணிந்தவள்; கங்கணத்தி-நாகமாகிய காப்பை அணிந்தவள்; பஞ்ச சத்தி- ஐந்து சக்திகளாகவும் உள்ளவள்;கொந்தளத்தி-சிறந்த சூழலை உடையவள்; பைம்பணத்தி-பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவள்; அஞ்சணத்தி-மை பூசப் பெற்ற கண்ணை உடையவள்.

74. முத்து வடம்-முத்து மாலை; கொங்கை-தனம்; நகைச்சி-சிரிப்பினை உடையவள்; பத்தர்-அடியார்கள்; நெஞ்சகத்தி-மனத்தில் இருப்பவள்;பார் இடத்தி-பூமியை இருப்பிடமாக உடையவள்.

75. அக்குவடம்-சங்கு மாலை; வளர்த்தி-வளர்த்தவள்; செக்கர்-சிவந்த; பிறைச்சி-சந்திரனைத் தரித்தவள்.

76. ஓலை-காதணி; குழைச்சி-குண்டலத்தை உடையவள்; குண்டலச்சி-ஆகாய வழியே செல்லும் தன்மை வாய்ந்தவள்; மாலை-சிறந்தமங்கல மாலை; ஞாலம்-பூமி.

77. அக்கரத்தி-மந்திர எழுத்தே உருவகமாக உடையவள்; பொக்கணத்தி-திருநீற்றுப் பையை உடையவள்; அண்டம்-வானுலகம்; பகிர் அண்டம்-வானுலகின் வேறான பல உலகங்கள்; முக்கணத்தி-சத்துவ, ராஜஸ,தமோ குணங்களை உடையவள்; நிட்களத்தி-உருவமில்லாதவள்;குற்றமில்லாதவள்; மோட்சத்தி முத்தி தருபவள்.

78. ஏகாக் கரத்தி-ஓம் என்னும் பிரணவ ரூபமாயிருப்பவள்; நீங்காத கையை உடையவள் எனவும் வரும்; நாகாதி பூண்ட-நாகம், எலும்பு முதலியவற்றை ஆபரணங்களாக அணிந்த; நாதத்தி-வீர முழக்கம் செய்பவள்; வாகு-அழகு.

79. பரிமளம்-வாசனை; அணைத்தி-படுக்கையாக உடையவள்; கற்பாந்தந்தரத்தி- ஊழிக் காலத்தின்இறுதியிலும் இருப்பவள்.

80. வேடிச்சி-வேடுவர் குலப் பெண்; மீனவன் -சோமசுந்தரக் கடவுள் [பாண்டியன்]; சூடிச்சி-சூட்டியவள்; நாடி-தேடி.

81. வேதன் -பிரமன்; பங்கயம்-விஷ்ணுவின் உந்திக் கமலம்; வித்தகத்தி-மேலான தன்மை உடையவள்.

82. பாடகத்தி-பாடகம் என்கிற காலணி அணிந்தவள்; கீதம்-இசைப் பாடல்; ப்ரபந்தத்தி-நூல்களுக்குத் தலைவி;ஆடகத்தி-கால் மாறி ஆடியவள்; ஆதி-ஆதி சக்தியாய் அமைந்தவள்.

83. மறை வித்தகி-வேத விழுப் பொருள்.

84. கோமளம்-பேரழகு; யாமனை-காளி;தாமரைத் திரு-தாமரை போன்ற முகமுடைய பார்வதி; தையல்-பேரழகு வாய்ந்த பெண்.

85. நின்று-நிலை பெற்று; துங்க-தூய்மையான.

86. ஓதிமம்-அன்னம் போன்ற நடையுடையவள்; உண்மை வெளி-சத்து ஆகாயமாய் இருப்பவள்; பரப் பிரமம்-மேலான பொருள்; வித்து-அடிப்படையாய் இருப்பவள்; அளி-வண்டு.

87. கொந்து-கொத்துப் போன்று திரண்ட; அளகம்-கூந்தல்; பந்திக் குயில்-வரிசையான குயில்கள் கூவுவது போன்ற இனிமையான குரலை உடையவள்; ஐந்தரு-அரி சந்தனம், கற்பகம்,சந்தானம், பாரிஜாதம்,மந்தாரம் என்னும் தேவலோகத்திலுள்ள சிறந்த ஐவகை மரங்கள்; மூவருக்கும்-மும்மூர்த்திகளுக்கும்.

88. இடர்-சிறு துன்பம்; அல்லல்-பெருந் துன்பம்; வினை-பிறப்புக்கு ஏதுவாய நல்வினை, தீவினை; அஞ்சல்-பயப்படாதே; சவுபாக்கியம்-சிறந்த பேறுகள்; வல்லபம்-ஆற்றல்.

89. ஆசு-உடனே பாடப் பெறும் பாடல்; மதுரம்-இன்னிசைப் பாடல்; சித்திரம்-ஓவியத்தில் பொருந்தும்படியாகப்பாடப் பெறும் பாடல்; வித்தாரம்-விளக்கமாகப் பாடும் பாடல்; பெருவாக்கு-சிறந்த புகழ் வார்த்தைகள்.

90. அகம்-மனம்; புத்திமதி-பேரறிவு; சந்ததம்-எப்போதும்.

91. நீயே-நீ ஒருத்தியே; நின்று-நிலையாக; இரட்சி-பாதுகாப்பாயாக; சரணம்-பாதம்; சரண்-அடைக்கலம்.

**********************

[மேற்சொன்ன அருஞ்சொற்பொருள் விளக்கம் சென்னை, பச்சையப்பன் கல்லூரிப் பள்ளித் தலைமைத் தமிழ் ஆசிரியர், வித்துவான், அம்பை, இரா. சங்கரனார் எழுதியது.]

யாவர்க்கும் பொதுவாகி எல்லார்க்கும் நலமளிப்பவள் மீனாட்சியம்மை என்னும் பொருள் இதனைப் படிப்பவர்க்கு எளிதில் விளங்கும்!

அனைத்து உயிரிடத்தும் அன்பு பூண்டு, நல்லனவே நினைத்து அனைவரும் அருள்பெற அம்மையை வேண்டுகிறேன்.

இந்த அரும் பெரும் நூலான ‘மீனாட்சியம்மை கலிவெண்பா’வை இங்கு இட அருளிய அன்னைக்கு வந்தனம் சொல்லி முடிக்கிறேன்.
http://ammanpaattu.blogspot.com/2009/04/2_02.html

யாவினும் நலம் சூழ்க!

முருகனருள் முன்னிற்கும்!

+++++++++++++++++++


3 comments:

 1. கஞ்சுளிச்சி-சட்டை அணிந்தவள்;
  கங்கணத்தி-நாகமாகிய காப்பை அணிந்தவள்;

  பஞ்ச சத்தி- ஐந்து சக்திகளாகவும் உள்ளவள்;
  கொந்தளத்தி-சிறந்த சூழலை உடையவள்;

  பைம்பணத்தி-பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவள்;
  அஞ்சணத்தி-மை பூசப் பெற்ற கண்ணை உடையவள்.

  மிகவும் ரசித்துப் படிச்சேன் SK! அருமையான சொற் கோர்வை!

  ReplyDelete
 2. கந்தர் கலி வெண்பா தான் இவ்வளவு நாளும் தெரியும்!
  மீனாட்சி கலி வெண்பா தந்தமைக்கு மிகவும் நன்றி!

  அன்னையின் உற்சவம் கண்டு, இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

  ReplyDelete
 3. பல அரிய சொற்கள் இந்தக் கலிவெண்பாவில் அநாயசமாக வந்து பல்வேறு கதைகளை நினைவூட்டி மெய் சிலிர்க்கச் செய்யும்!

  இன்று ஒரு டோற்சவம் சென்று திரும்பினேன்.

  அங்கும் இந்த ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ எனச் சொல்லி, நவநீத கிருஷ்ணன் படமளித்துக் கௌரவித்தார்கள்.

  இங்கு வந்து பார்த்தால், கண்ணபிரானே சொல்கிறார்!

  நன்றி, ரவி!

  ReplyDelete