Tuesday, April 7, 2009
பசுங்கிளி தாங்கிய பைங்கிளி! (பங்குனியில் ஒரு நவராத்திரி -8)
மதுரையின் ஒளியே மாணிக்கமே
மரகதக் கொடியே மீனாட்சி!
சுந்தரர் மனதில் வீற்றிருக்கும்
சுந்தரியே எங்கும் உனதாட்சி!
மாயவன் மருகனின் தாயவளாம்
மாதவர் பணிந்திடும் தூயவளாம்
சேயென நமையென்றும் காப்பவளாம்
பூவெனச் சிரித்திடும் பூமகளாம்!
ஆலவாய் அழகனின் நாயகியே
அன்பால் நிறைந்த அருள்மதியே!
பசுங்கிளி தாங்கிய பைங்கிளியே
சுடரொளியே உள்ளம்கவர் எழிலே!
மீன்விழியாள் மனம் மீட்டிடுவாள்
தேன்மொழியாள் வழி காட்டிடுவாள்
சரணடைந் தோரைக் காத்திடுவாள்
கருணையி னால்இருள் நீக்கிடுவாள்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.eprarthana.com/images/gallery/amman/srimeenakshi.jpg
ஒரு அறிவிப்பு: இந்த வாரத்திற்கு பிறகு இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகப் பக்கம் வர்றது கஷ்டம். அதனால தற்காலிக விடுதலையை கிடைக்கும் போதே முடிஞ்ச வரை அனுபவிச்சுக்கோங்க :) அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
அன்னையை எப்படிப் போற்றினாலும் அழகே!
ReplyDeleteமூன்றாம் பத்தியில் ஒரு தட்டச்சுப்பிழை!
'அருள்மதியே' என இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.
நன்றி அண்ணா. திருத்திட்டேன்.
ReplyDelete//மாயவன் மருகனின் தாயவளாம்
ReplyDeleteமாதவர் பணிந்திடும் தூயவளாம்
சேயென நமையென்றும் காப்பவளாம்
பூவெனச் சிரித்திடும் பூமகளாம்!//
அருமை.......
vaazthukkaL wonderful creation
ReplyDeleteநன்றி மௌலி.
ReplyDeleteநன்றி தி.ரா.ச. ஐயா.
ReplyDelete//மதுரையின் ஒளியே மாணிக்கமே
ReplyDeleteமரகதக் கொடியே மீனாட்சி!//
மருவத்தூரில் வளர் மரகதமே-ன்னு வரும் பாட்டு போலவே மெட்டு அமைஞ்சிருக்கு-க்கா!
//மாயவன் மருகனின் தாயவளாம்
மாதவர் பணிந்திடும் தூயவளாம்
சேயென நமையென்றும் காப்பவளாம்
பூவெனச் சிரித்திடும் பூமகளாம்!//
தாயவளாம் எந்தன் சேயவளாம்!
சேயவளாம் எந்தன் தாயவளாம்!
யாரவளாம் என்று பார்க்கையிலே
சீரவளாம் எந்தன் சிறப்பவளாம்!
வானவன் தனக்குச் சோதரியாய்
ஆனவளாம் எந்தன் "மீன"வளாம்!
அப்படியா, அந்த பாட்டு நான் கேட்டதில்லை கண்ணா. உங்க பாட்டும் நல்லாருக்கு :) நன்றி.
ReplyDeleteநல்லா இருக்குக்கா. நானும் பாடிப் பணிந்தேன்.
ReplyDeleteநன்றி குமரா.
ReplyDeleteஉங்கள் பாடலை நான்கு ராகங்கள் பூபாள்ம், அடாணா, கானடா, முடிவில் ஆபோஹியில் பாட
ReplyDeleteமுயற்சி செய்தேன்.
நீங்கள் இதை கேட்கலாம். உங்கள் ஊரில் உங்கள் சினேகிதி பாடகி பாடினால், (இதே ராகங்களில்)
மிகவும் நன்றாக இருக்கும்.
உங்கள் முயற்சிகள் யாவற்றிற்கும் அன்னை மீனாட்சி துணை இருப்பாள்.
அவள் தானே உங்கள் மூலமாக எங்களை எல்லாம் அவள் தாள் பணிய அழைக்கிறாள்.
சுப்பு ரத்தினம்.
வாங்க சுப்பு தாத்தா. சுட்டி குடுக்கலையே? இனிமே ஊருக்கு போய்தான் கேட்க முடியும்னு நினைக்கிறேன்.
ReplyDelete//நீங்கள் இதை கேட்கலாம். உங்கள் ஊரில் உங்கள் சினேகிதி பாடகி பாடினால், (இதே ராகங்களில்) மிகவும் நன்றாக இருக்கும்.//
அவங்க ரொம்ப பிஸி. கேட்டு பார்க்கிறேன். அம்மா விருப்பப்படி நடக்கும்.
//உங்கள் முயற்சிகள் யாவற்றிற்கும் அன்னை மீனாட்சி துணை இருப்பாள்.//
கிளம்பும் சமயம் உங்கள் ஆசிகள் கண்டு மிக்க மகிழ்ச்சி தாத்தா. மிக்க நன்றியும்.
அன்னையின் மேல் பாடல் பொழியும் கவிநாயாவிற்கு ஒரு விருது.
ReplyDeleteகுமரன் ஐயா அடியேனுக்கு மனமுவந்து பட்டாம்பூச்சி விருது வழங்கினார். அதை அடியேன் தங்களுக்கு வழங்குகின்றேன்.
விருதைப்பற்றி அறிய செல்லுக
விருதுவாழ்த்துக்கள்.
ஆஹா !! இன்று என் கண்ணன் என்னை சரியான இடத்திற்கு அழைத்து வந்தான்.
ReplyDeleteஎன் அன்னையை பற்றி இவ்வளவு எளிமையாகவும் நயமாகவும் கவி புனைபவருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் !!
வாங்க ராதா.
ReplyDelete//ஆஹா !! இன்று என் கண்ணன் என்னை சரியான இடத்திற்கு அழைத்து வந்தான்.//
ஆம், அவனுக்கு நன்றி :)
//என் அன்னையை பற்றி இவ்வளவு எளிமையாகவும் நயமாகவும் கவி புனைபவருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் !!//
எழுத வைப்பவள் அவளே என்பதால் உங்கள் நமஸ்காரங்கள் அவளையே சாரும்.
படித்து பரவசமடைந்ததற்கு மீண்டும் நன்றிகள்.