வருடா வருடம் சித்திரை மாதம் பிறந்து முதல் வியாழக்கிழமை, புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சு, செவ்வாய்க் கிழமை போய் சேருவது வழக்கம். நானும் இந்த வருடம் (இரண்டாவது முறையா) இந்த பாத யாத்திரையை அவளருளால் நல்லபடியா முடிச்சிட்டு வந்தேன். தினமும் பகலில் தூங்கிட்டு சாயந்திரம் வெயில் தணிஞ்சதும் நடக்க ஆரம்பிச்சு, மறுபடி காலைல சூரியன் சுடற வரை நடப்போம். வழியெல்லாம் அவள் நினைவும் பாடல்களும்தான் துணை. அந்த தையல் நாயகிக்காக ஒரு பாட்டு...

சித்திரை மாதத்திலே தையல்நாயகி - தங்க
சித்திரமாம் உன்னைக் காண தையல்நாயகி
தத்திநடை பழகி வந்தோம் தையல்நாயகி - எங்கள்
முத்து நகை வடிவழகே தையல்நாயகி
பாதையெல்லாம் கல்லும் முள்ளும் தையல்நாயகி - நாங்கள்
பாதம் நோக நடந்து வந்தோம் தையல்நாயகி
வாதையெல்லாம் தீர்த்திடுவாய் தையல்நாயகி - தாயின்
வாஞ்சையுடன் அரவணைப்பாய் தையல்நாயகி
காட்டுவழி வந்தோமடி தையல்நாயகி - நாங்கள்
காரிருளில் தடுமாறி தையல்நாயகி
கண்ணொளியால் இருளகற்றி தையல்நாயகி - நீதான்
காப்பாற்ற வேணுமடி தையல்நாயகி
சித்தமெல்லாம் நிறைஞ்சிருக்கு தையல்நாயகி - உந்தன்
சின்ன முல்லைச் சிரிப்பாலே தையல்நாயகி
பித்தமெல்லாம் தெளிய வைப்பாய் தையல்நாயகி - உந்தன்
பேரருளின் ஒரு துளியால் தையல்நாயகி
நித்திலமாம் உன் பெயரை தையல்நாயகி - நாங்கள்
நித்தம் நித்தம் பாடி வந்தோம் தையல் நாயகி
சொத்தெதுவும் வேண்டாமடி தையல்நாயகி - நீ
சொந்தமானால் போதுமடி தையல்நாயகி!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://vidursury.blogspot.com/