
கண்மணியே கதிரொளியே
கருணைமிகும் கற்பகமே
பொன்னொளியே புதுமலரே
புவிமயங்கும் பூமயிலே!
வெண்ணிலவே தண்ணமுதே
விகசிக்கும் ஒளியழகே
பெண்ணெழிலே பெட்டகமே
புன்னகைக்கும் பூச்சரமே!
கனிமொழியே செழுமலரே
கண்கவரும் ஓவியமே
பனிமழையே பைந்தமிழே
பண்வளரும் காவியமே!
தேனே என்திரவியமே
தேசொளிரும் தேவதையே
மானே மின்னெழிற்கொடியே
நேசம்மிகும் நித்திலமே!
நான்மறையின் நாயகியே
நான்வணங்கும் நிரந்தரியே
வான்போற்றும் காரிகையே
நான்போற்ற வரணுமம்மா!!
--கவிநயா