Monday, June 15, 2009

ஏந்திழையே வாராயோ???



உள்ளேதான் இருக்கின்றாள்
உற்றுப்பார் என்கின்றார்
உள்ளிருக்கும் தேவதையே,
கண்ணில்பட மாட்டாயோ?

கள்ளிருக்கும் மலர்போலே
கருத்தினிலே இனிக்கின்றாய்
சொல்லோடு பொருள்போலே
சேர்ந்துசுவைத் திருக்கின்றாய்

சின்னஞ்சிறு குழந்தையைப் போலே
உன்னைமடி ஏந்திக் கொள்வேன்
உந்தன் மலர்அடிகள் எடுத்து
என்கூந்தல் சூடிக் கொள்வேன்

பண்ணெடுத்து பாட்டுச் சொல்லி
பத்திரமாய்ப் பார்த்துக் கொள்வேன்
என்னிடத்தில் இரக்கம் வைத்து
ஏந்திழையே வாராயோ???


--கவிநயா

12 comments:

  1. //உந்தன் மலர்அடிகள் எடுத்து
    என்கூந்தல் சூடிக் கொள்வேன்//
    இந்த வரிகள் கவர்ந்தன, நன்றிகள் கவிநயாக்கா.

    ReplyDelete
  2. //உந்தன் மலர்அடிகள் எடுத்து
    என்கூந்தல் சூடிக் கொள்வேன்//

    "உந்தன் அடி மலர் எடுத்து " என இருக்கவேண்டுமோ என நினைத்தேன்.
    பிறகுதான் உதித்தது. தேவியின் பாதங்களே மலராகும். அவ்வடிகளை
    என்கூந்தலிலே சூடிக்கொள்வேன். என் சிரசிலே தரித்துக்கொள்வேன் எனச்
    சொல்வது தான் எத்தனை பொருத்தம் !! ம‌ல‌ர் வாடும். ம‌ல‌ர‌டி வாடுமோ !
    என்றுமே ப‌ரிண‌மிக்கும்.

    பாடலை சிந்து பைரவி ராகத்திலே இங்கு எல்லோரும் கேட்கலாம்.
    http://www.youtube.com/watch?v=kHrKwMci_H8

    எல்லோருக்கும் தெரி ந்த‌ மெட்டு. சின்ன‌ஞ்சிறு பெண்போல‌, சிற்றாடை..என‌த்துவ‌ங்கும்
    பாட‌ல் மெட்டு தான். துவ‌க்க‌த்தில் இ ந்த‌ ராக‌மான‌ சி ந்து பைர‌வியின் ஆலாப‌னையுட‌ன்
    துவ‌ங்குகிற‌து. ர‌சியுங்க‌ள். தேவியின் அருள் பெறுங்க‌ள்.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    http://Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  3. வாங்க ஜீவா. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாங்க தாத்தா.

    //தேவியின் பாதங்களே மலராகும். அவ்வடிகளை
    என்கூந்தலிலே சூடிக்கொள்வேன். என் சிரசிலே தரித்துக்கொள்வேன் எனச்
    சொல்வது தான் எத்தனை பொருத்தம் !! ம‌ல‌ர் வாடும். ம‌ல‌ர‌டி வாடுமோ !//

    சரியான புரிதலுக்கு நன்றி தாத்தா. அப்படி நினைத்துதான் எழுதினேன்.

    சிந்துபைரவி ராகம் மிகப் பொருத்தம். இனிமையாக இருக்கு. மனமார்ந்த நன்றிகள் தாத்தா.

    ReplyDelete
  5. நல்ல பொருத்தமான கருத்துகள் அக்கா. கள் - மலர், சொல் - பொருள் என்று நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. //கள் - மலர், சொல் - பொருள் என்று நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

    மிக்க மகிழ்ச்சி குமரா :) நன்றி.

    ReplyDelete
  7. ஆஹா... நெஞ்சைப் பிழியுது பாட்டு! ஏந்திழை- அர்த்தம் என்னங்க? கைக்குழந்தை போலவா!!!

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க .. வாழ்க .. மேலும் இது போல நிறய எழுதுக..

    ReplyDelete
  9. நல்வரவு சிவாஜி. ஏந்திழை என்றால் ஆபரணங்கள் அணிந்த பெண் என்று பொருள். வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    நல்லா இருக்குங்க .. வாழ்க .. மேலும் இது போல நிறய எழுதுக..//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. உந்தன் மலர்அடிகள் எடுத்து
    என்கூந்தல் சூடிக் கொள்வேன்
    மிக அருமையான வரிகள்
    இதுபோல் ஜயதேவர் கீதகோவிந்தத்தில் கண்ணன் ராதையின் அடிகளை தலையில் சூடிக்கொள்வதாக எழுதி எல்லோரலும் ஏசப்பட்டு அதை அடித்துவிட்டார். மறுநாள் கலையில் மறுபடியும் அதே வரிகள் அதே இடத்தில் இருந்தது. முடிவில் கண்ணனே கனவில் வந்து தனக்கு அந்த வரிகள் பிடித்து இருப்பதாகவும் அதுதான் உண்மை என்றும் கூறி தான் தான் மறுபடியும் மாற்றி எழுதியதாக கூறினாராம். சரணாகதி தத்துவத்தை ஒரேவரியில் சொல்லிவிட்டீர்கள் நன்றி.

    ReplyDelete
  12. வாருங்கள் தி.ரா.ச. ஐயா.

    ரசனைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete