Monday, June 29, 2009

கண்மணியே கதிரொளியே...!



கண்மணியே கதிரொளியே
கருணைமிகும் கற்பகமே
பொன்னொளியே புதுமலரே
புவிமயங்கும் பூமயிலே!

வெண்ணிலவே தண்ணமுதே
விகசிக்கும் ஒளியழகே
பெண்ணெழிலே பெட்டகமே
புன்னகைக்கும் பூச்சரமே!

கனிமொழியே செழுமலரே
கண்கவரும் ஓவியமே
பனிமழையே பைந்தமிழே
பண்வளரும் காவியமே!

தேனே என்திரவியமே
தேசொளிரும் தேவதையே
மானே மின்னெழிற்கொடியே
நேசம்மிகும் நித்திலமே!

நான்மறையின் நாயகியே
நான்வணங்கும் நிரந்தரியே
வான்போற்றும் காரிகையே
நான்போற்ற வரணுமம்மா!!


--கவிநயா

4 comments:

  1. ரெம்ப பக்தியாக எழுதியிருக்கிறீர்கள்.நன்றாக இருக்கிறது .என் வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  2. நல்வரவு யாழினி. உங்க பேர் அழகா இருக்கு. முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி :)

    ReplyDelete
  3. இறை உணர்வு ஏற்படுகையில் ஏற்படும் ஆனந்தம் தான்
    எத்தகையது ? வர்ணனைக்கு அப்பாற்பட்டது எனினும்
    அதை தேனே எனவும் மானே எனவும் தெவிட்டாத‌
    தெள்ளமுதே எனவும்
    கனியே எனவும் பனி
    மழையே எனவும் கனி
    மொழியே எனவும் அல்லவா பாடி மகிழ்கிறோம் !

    இரு ராகங்களில் இரு தடவை முயற்சி செய்து
    முதலில் சாரங்கா விலும் பின் மத்யமாவதியிலும்
    பாட யத்தனித்திருக்கிறோம்.

    ஒரு புதுக்குரலைக் கேட்கலாம்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  4. வாங்க தாத்தா.

    /இறை உணர்வு ஏற்படுகையில் ஏற்படும் ஆனந்தம் தான்
    எத்தகையது ?/

    உண்மைதான். அன்பு மீறுகையில் கொஞ்சத்தானே தோணும்? :)

    பாடலை கண்டு பிடிக்க முடியல. சுட்டி குடுங்க...

    ReplyDelete