Monday, August 10, 2009

ஒரேயொரு வார்த்தை சொல்வாய்...


ஒரேயொரு வார்த்தை சொல்வாய்
என்னைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வாய்
பல நூறு ஜென்மங்கள்
எடுத்து வந்தேன் பார்த்துக் கொள்வாய்

(ஒரேயொரு)

பச்சைக் கிளி உனக்காக
பச்சைமர மாய்ப் பிறப்பேன்
பற்றிக் கொள்ளும் வெயிலினிலும்
பசும்நிழலை நான் கொடுப்பேன்

வஞ்சிக் கொடி உனக்காக
வண்ணமல ராய்ப் பிறப்பேன்
கொஞ்சிநீயும் நடை பழக
பாதை யெங்கும் பாய்விரிப்பேன்

(ஒரேயொரு)

குத்துவிளக்கா யிருந்தால்
கோதைமுகம் பார்த்திருப்பேன்
முத்துமணி மாலைகளாய்
மேனியினை அலங்கரிப்பேன்

கற்பூரமா யிருந்தால்
கருணை முகம் காட்டிடுவேன்
பொற்பதங்க ளைத்தழுவும்
நூபுரமாய்க் கிணுகிணுப்பேன்

அம்மாநீ உடன் இருந்தால்
துயர மெல்லாம் தூசாகும்
அம்மாஉன் துணை யிருந்தால்
பிறவி கூட பரிசாகும்

(ஒரேயொரு)


--கவிநயா

10 comments:

  1. சரியென்று ஒரு வார்த்தை சொன்னால் சரியாகப்போய் விடுமா?
    கதைமுடிவைத் தெரிந்து கொண்டு
    கதை படித்தால் சரிவருமா?

    பிறவிதொறும் தொடரும் சொந்தம்
    மறந்தேதான் போய் விடுமா?
    மறந்தால் அது சொந்தமென ஆகிடுமா?
    பிறந்ததற்கொரு பொருள் வேண்டாமா?

    மாறிமாறிப் பிறப்பதுவும் ஓர் விளையாட்டே!
    விளையாட்டை அறிந்துகொண்டால்
    வினைஎதுவும் தொடர்வதில்லை!
    துயரென்று ஒன்றுமில்லை! என்றுமில்லை!

    ReplyDelete
  2. சரிதான் கிருஷ்ணமூர்த்தி சார் :)

    //சரியென்று ஒரு வார்த்தை சொன்னால் சரியாகப்போய் விடுமா?//

    சரின்னு சொல்ல வேணாம்; ஏதேனும் சொன்னா போதும் :)

    //விளையாட்டை அறிந்துகொண்டால்//

    அதில்தானே சிக்கலே இருக்கிறது :(

    தொடர்ந்த வருகைக்கும் அரிய (பதில்) கவிதைகட்கும் மிக்க நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  3. "பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு" என்ற பாரதியின் பாடலையும்
    "கண்ணானால் நான் இமையாவேன் " என்ற ஒரு பழைய இனிமையான சினிமா பாடலையும் நினைவுபடுத்துகிறது. :-)

    //கற்பூரமா யிருந்தால்
    கருணை முகம் காட்டிடுவேன்//
    அழகாக உள்ளது ! :-)

    ReplyDelete
  4. வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, திரு. ராதா.

    ReplyDelete
  5. //திரு. ராதா.//
    ராதா என்று சொன்னாலே போதுமானது. :-)

    ReplyDelete
  6. //ராதா என்று சொன்னாலே போதுமானது. :-)//

    :) அப்படியே ஆகட்டும்.

    ReplyDelete
  7. /சரின்னு சொல்ல வேணாம்; ஏதேனும் சொன்னா போதும் :)/
    அதுக்குத்தான்
    'கதைமுடிவைத் தெரிந்து கொண்டு
    கதை படித்தால் சரிவருமா?'ன்னு ஏற்கெனெவே சொல்லியாச்சே:-)

    நாம் இது வரை பார்த்திருக்கும் கேட்டிருக்கும் மகான்களில்,சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அவர்கள் இருவருமே அழுத்தம் திருத்தமாகச் சொல்வது, கடவுள் இந்த ஸ்ருஷ்டியைத் தொடங்கும் போது விளையாட்டாகவே, விளையாடுவதற்காகவே தொடங்கினானாம்!அவனுடன் விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வது தான் படைப்பின் ஒரே வேலை!

    வள்ளலார் கூட இதைக் கொஞ்சம் சீரியசான வார்த்தைகளில்,
    "முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்,
    சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்"
    என்று சொல்கிறார்.

    விளையாடும் போது விளையாட்டிலேயே லயிக்கப் பழக்கினால், விளையாடும் போது ஏற்படுகிற வலி தெரியாது. வலியை மட்டும் பார்க்கப் போனால் விளையாட்டு ருசிக்காது! அப்படி விளையாட்டு ருசிக்காமல் போகிறவர்கள் மட்டுமே எனக்கு இதிலிருந்து விடுதலை-பிறவா வரம் தாரும் என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று உத்தேசம்?!

    ReplyDelete
  8. சுருக்கமா சொல்லணும்னா, விளையாட்டு போதும் போதும்னு ஆனவங்கள்ல நானும் ஒருத்தி :)

    மீள் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  9. /விளையாடச் சொல்லுபவள் அன்னைதான் என்கையிலே
    விளையாட்டை மறுப்பது யார் மறப்பதும் யார் சொல்லேன்!
    நினைவே தவமாகும் நிலை சேர்க்கும் வரமாகும்
    மறவாத வரமென்றால் பிறவாத நிலைதானே?/

    முன்னால் ஒரு பாட்டுக்கு எசப் பட்டா எழுதினது தான்! இங்கே ராமனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ராவணனும் வேண்டியிருக்கிறது.

    நடப்பதெல்லாமோர் நாடகமே
    நடிப்பதுதான் இங்கே நம்வேலை!
    நடப்பதை அவன் செயல் என்றே
    நடக்கட்டும் அவன் செயல் என்றே
    நடிக்கச் சொல்லிக் கொடுத்தபடி
    நடிப்பது மட்டும் நம் வேலை
    திரைக்குப் பின்னால் பார்க்கையிலே
    ராமனோடு ராவணனும் ஒன்றே என்று தெரியவரும்!

    ReplyDelete
  10. //நடப்பதை அவன் செயல் என்றே
    நடக்கட்டும் அவன் செயல் என்றே
    நடிக்கச் சொல்லிக் கொடுத்தபடி
    நடிப்பது மட்டும் நம் வேலை//

    அந்த தெளிவும் பக்குவமும் எனக்கு இன்னும் கைவரவில்லை :(

    ReplyDelete