Monday, November 16, 2009

அண்டியவர்க்கவள் அன்னை!




அண்டியவர்க் கவள் அன்னை!
அல்லாதவர்க் கவள் சண்டி!
உன்னுபவர்க் கவள் அருள்வாள்!
உன்னா திருப்பினும் வருந்தாள்!

துண்டாய் அசுரரைத் துணிப்பாள்!
வெண்டா மரையிலும் இருப்பாள்!
கண்டா மணியெனச் சிரிப்பாள்!
செண்டாய் மலர்ந்துள் ளிருப்பாள்!

கண்ணாய் மணியெனக் காப்பாள்!
கரம்பிடித்தே கரை சேர்ப்பாள்!
விண்ணே வீழ்ந்திடும் போழ்தும்
பெண்ணே துணைநமக் கருள்வாள்!

எந்தன் அன்னை அவளே!
எதுவரினும் இனித் துவளேன்!
புதுமலர்ப் பாதம் பணிந்தே
மதுவன்பினில் முழுகிக் களிப்பேன்!

--கவிநயா

17 comments:

  1. அது என்ன கண்டா மணி? புரியவில்லை?
    எட்டுகை அம்மன் அழகாக முறைக்கிறாள். நானும் பதிலுக்கு முறைத்து வைத்தேன்.
    இப்பொழுதெல்லாம் காளியை பார்த்தா கூட பயம் இல்லை.

    ReplyDelete
  2. கண்டாமணின்னா பெரீசா கோவில்களில் இருக்குமே, அந்த மணி.

    எனக்கும் பிடிச்ச படம்.

    அம்மாவை பார்த்து எதுக்கு பயம்? She is sooo sweet :) பாவம், அவளை முறைக்காதீங்க ப்ளீஸ்! :)

    வருகைக்கு நன்றி ராதா.

    ReplyDelete
  3. 'உன்னா' அப்படின்னா என்னா? :)

    ReplyDelete
  4. 'பத்துடை அடியவர்க்கு எளியவன்; மற்றவர்களுக்கு அரியவன்' என்றார் நம்மாழ்வார். 'அண்டியவர்க்கு அவள் அன்னை! அல்லாதவர்க்கு அவள் சண்டி!' என்கிறார் நம்மக்கா.

    'டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா' என்றான் ஒரு காதலன். 'கண்டா மணி எனச் சிரிப்பாள்' என்றார் ஒரு மகள்.

    நல்லா இருக்கு அக்கா ஒவ்வொரு வரியும்.

    ReplyDelete
  5. இராதா, பாருங்க அக்காவும் பழைய தமிழ்ச் சொற்களைப் புழங்கத் தொடங்கிட்டாங்க. இனிமே அவங்க பாட்டெல்லாம் என் பாட்டை விட எளிமையா இருக்குன்னு சொல்ல முடியாது; என் பாட்டை விட ரொம்ப அழகா இருக்குன்னு வேணும்னா சொல்லலாம்! :-)

    ReplyDelete
  6. அட, கண்டாமணிச் சத்தம் கேட்டிருச்சா, வராத தம்பீ(ஸ்)லாம் வந்திருக்கீங்க? :)

    //'உன்னா' அப்படின்னா என்னா? :)//

    'உன்னுதல்'னா 'நினைக்கிறது'ன்னு பொருள்.

    'உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே' அப்படிம்பார், பட்டர்.

    வெகு நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சியும், வருகைக்கு நன்றியும், மௌலி.

    ReplyDelete
  7. //நல்லா இருக்கு அக்கா ஒவ்வொரு வரியும்.//

    நன்றி குமரா :) அதுவும் நீங்க இப்படில்லாம் விளக்கம் சொல்லும் போது இன்னுமே நல்லாதான் இருக்கு :)

    //இனிமே அவங்க பாட்டெல்லாம் என் பாட்டை விட எளிமையா இருக்குன்னு சொல்ல முடியாது; என் பாட்டை விட ரொம்ப அழகா இருக்குன்னு வேணும்னா சொல்லலாம்! :-)//

    அடக் கடவுளே! பாவம் நான், இப்படில்லாம் வார வேணாம் என்னை! என்னமோ தப்பித் தவறி இப்படி ஒரு பாட்டு வந்து குதிச்சிருச்சு. எப்பவும் இப்படியே இருக்கும்னு சொல்ல முடியுமா என்ன? :)

    வருகைக்கு மிக்க நன்றி குமரா!

    ReplyDelete
  8. Kumaran said...
    //இராதா, பாருங்க அக்காவும் பழைய தமிழ்ச் சொற்களைப் புழங்கத் தொடங்கிட்டாங்க. //

    அக்கா பல நாட்களாக உங்க பதிவுகளைப் படிச்ச தாக்கமோ என்னவோ. :-)

    ReplyDelete
  9. /அண்டியவர்க் கவள் அன்னை!
    அல்லாதவர்க் கவள் சண்டி!/

    அண்டாதவர்க்கும் அவள் அன்னை தான்!அண்டியவருக்குத் தீம்பு செய்ய நினைக்கும் சண்டியர்களுக்கு மட்டுமே சண்டி!

    யாராவது கவனித்துச் சொல்கிறார்களாஎன்பதற்காகக் காத்திருந்தேன்!

    ReplyDelete
  10. கிருஷ்ணமூர்த்தி ஐயா. நீங்கள் சொல்வது சரி தான். அண்டாதவர்க்கும் அவள் அன்னை தான். நீங்கள் சொன்ன சண்டியர்களைத் தான் அக்கா 'அல்லாதவர்' என்று குறித்தார் போலும். அதனால் 'அல்லாதவர்க்கு அவள் சண்டி' என்பதும் 'சண்டியர்களுக்கு அவள் சண்டி' என்பது ஒரே பொருள் தான் - என்று கொண்டேன்.

    உன்னாதிருப்பினும் வருந்தாள் என்று சொன்னது அண்டாதவர்க்கும் அவள் அன்னை என்பதால் தானே.

    'மற்றவர்களுக்கு அரியவன்' என்று மாறன் அருளிச்செயலில் வரும் 'மற்றவர்கள்' அந்த சண்டியர்கள் தான் போலும்.

    ReplyDelete
  11. /அண்டியவர்க் கவள் அன்னை!
    அல்லாதவர்க் கவள் சண்டி!/
    இந்த வரிகளை நான் வேறு மாதிரி பொருள் கொண்டு இருந்தேன். (அக்கா ! என்ன அநியாயம். பல பொருள்கள் தரும் வகையில் ரொம்ப பிஸ்தாக கவிதை எழுதறீங்க. :-))

    என்னுடைய புரிதல்:
    தூரத்தில் இருந்து பார்த்தா பயங்கரமா தெரியறா. கிட்ட போயி பார்த்தா அப்படி இல்லைன்னு புரியுது.

    சண்டியும் அன்னை தானே? அம்மா நம்மையோ, நம் சகோதர சகோதரிகளையோ அடிக்கும் பொழுது சண்டி என்று சொல்கிறோம்.
    அதனால் அவள் அன்னை இல்லை என்று ஆகிவிடுமா? நம்மை திருத்த தானே அடிக்கிறாள் ?
    There is a famous saying by Sarada Devi. "I am the mother of the virtous as well as the wicked."

    ReplyDelete
  12. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். அன்னை அனைவருக்கும் அன்னைதான். நீ வேண்டாம் என்போரை அவர் போக்கில் விட்டு விட்டு பேசாமல் இருப்பாள். அடம் பிடித்தால் கண்டிப்பாள். தவறு செய்தால் தண்டிப்பாள்.

    குமரன் சொன்ன பொருளே நான் எழுதுகையில் மனதில் இருந்தது. நன்றி குமரா. உங்களை மாதிரி என்னால் விளக்க முடிஞ்சிருக்காது :) அந்த கருத்து பாடலில் தெளிவாக இல்லையானால் என் தவறுதான்.

    இந்த பாட்டு முழுதுமே யோசிக்க தேவையில்லாம கடகடன்னு வந்தது. அப்படியே நல்லாயிருக்கு தோன்றியதால, மாற்றாம எழுதிட்டேன்.

    //தூரத்தில் இருந்து பார்த்தா பயங்கரமா தெரியறா. கிட்ட போயி பார்த்தா அப்படி இல்லைன்னு புரியுது.//

    ராதாவின் புரிதலும் அருமை :) அதில் உண்மையும் இருக்கு.

    நன்றி, அனைவருக்கும்!

    ReplyDelete
  13. //அக்கா பல நாட்களாக உங்க பதிவுகளைப் படிச்ச தாக்கமோ என்னவோ. :-)//

    :))) இருக்கும்... இருக்கும்!

    ReplyDelete
  14. //எந்தன் அன்னை அவளே!
    எதுவரினும் இனித் துவளேன்!
    புதுமலர்ப் பாதம் பணிந்தே
    மதுவன்பினில் முழுகிக் களிப்பேன்!//

    ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி

    ReplyDelete
  15. வாருங்கள் கைலாஷி!

    ReplyDelete
  16. பாடலை எழுதியவருக்கும், அம்மனின் படத்தை பதிவு செய்தவருக்கும் கோடி நன்றிகள் . அம்மா எனது குலதெய்வம் ,

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் கழித்து எனக்கே பிடித்த இந்தப் பாடலை மீண்டும் நினைவுறுத்தியமைக்கு நன்றிகள் பல, திரு.ராமகிருஷ்ணன்.

      Delete