Monday, December 27, 2010

பார்வதி பஞ்சகம்


காரமர் மேனியன் கற்பக கணபதி
கனிவுடன் காருமய்யா
வானவர் வினைகளை விரட்டவே உதித்திட்ட
வேலவா வாருமய்யா
காமனைக் கண்ணினால் எரித்திட்ட பரமனே
கண்கொண்டு பாருமய்யா
அறியாத பிள்ளைக்கு வழிகாட்டும் சத்குரு
உன்னருள் தாருமய்யா!

அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்ட நாயகியை
அனுதினமும் பாட வேண்டும்
அகத்திலே பொங்கிவரும் அளவிலா அன்பதனை
அவள்பாதம் சேர்க்க வேண்டும்
இகத்திலும் பரத்திலும் அவள்நாமம் ஒன்றேதான்
இன்பமாய் இருக்க வேண்டும்
சுகத்திலும் குறையாத சோகத்திலும் அவளை
சிக்கெனப் பிடிக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

சிந்தையில் அவள்நினைவே கல்பதித்த சிற்பம்போல்
கலையாமல் இருக்க வேண்டும்
மந்தையென வருகின்ற எண்ணங் களைவிரட்டி
மங்கைதனை துதிக்க வேண்டும்
கந்தையென துயரங்கள் பிழிகின்ற போதினிலும்
கலங்கா திருக்க வேண்டும்
விந்தையெனும் இவ்வுலகில் உழலாமல் உறுதியுடன்
விரைந்தவளைப் பற்ற வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

காணும்பொருள் யாவிலும் கன்னிஉன் திருமுகமே
கணந்தோறும் காண வேண்டும்
வானம்நிலம் மாந்தரும் வஞ்சிஉன் இன்னருளால்
வளம்பெற்று வாழ வேண்டும்
கோள்வென்று குறைதீர்க்க நாளெல்லாம் நலமாக
நாயகியே அருள வேண்டும்
வீணென்று இப்பிறவி ஆகாமல் எப்போதும்
உன்நினைவாய் இருக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

நின்றாலும் நடந்தாலும் கிடந்தாலும் உன்நினைவே
என்துணையாய் ஆக வேண்டும்
சென்றாலும் இருந்தாலும் வென்றாலும் தோற்றாலும்
என்றும்உடன் இருக்க வேண்டும்
ஒன்றான ஓர்பொருளாய் என்நெஞ்சில் நீயேதான்
பொன்றா திருக்க வேண்டும்
குன்றாத ஒளியாக குறையாத நிதியாக
இறைவிநீ அருள வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

காலனைக் கால்கொண்டு கடிந்தவர்க்கு ஒருபாகம்
தந்தவளே போற்றி போற்றி!
வேலனவன் வென்றிடவே வேல்தந்து வரமளித்த
வேல்விழியாள் அடிகள் போற்றி!
மலையரசன் மகளாக வந்துதித்த மாமணியின்
மலர்ப்பதங்கள் போற்றி போற்றி!
நிலையான அன்பதனை உன்மீது பொழியும்வரம்
தரவேண்டும் தேவி போற்றி!
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!

11 comments:

  1. வழக்கம் போல நல்லா இருக்கு.

    எம் கே டி பாடின 'அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்' பாட்டு ஞாபகம் வருது.

    ஒரு சின்ன யோசனை. தப்பா தோனுச்சுன்னா கண்டுக்காம உட்டுடுங்க:))

    ஒவ்வொரு பாடலிலும் மையக் கருத்து ஒண்ணா இருக்கிற மாதிரி பாடினா இன்னும் நல்லா இருக்கும்.

    உதாரணத்துக்குக் கடைசி பாட்டு. முதல் இரண்டு அடி பரமனின், வேலனின் வீரம் \ பராக்கிரமம் பற்றிப் பேசுகிறது. அது போலவே அடுத்த இரண்டு அடியும் கொண்டு போனால் நல்லா இருக்கும்.
    உதாரணம் சிவனுக்குப் பார்வதி தேரோட்டுவது அந்த மாதிரி ஏதாவது.

    இரண்டாவது, மூன்றாவது பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு. ஒரே மாதிரி மையக் கருத்து.

    நானும் ஒரு பாட்டாவது எழுதிடனும்னு பாக்குறேன். இந்தக் கவிதை வரவே மாட்டேங்குது எனக்கு:(

    ReplyDelete
  2. வாங்க கோபி.

    //ஒரு சின்ன யோசனை. தப்பா தோனுச்சுன்னா கண்டுக்காம உட்டுடுங்க:))//

    அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டேன்; அதனால இந்த disclaimer இல்லாமலே இனிமேல் சொல்லுங்க :)

    உங்க யோசனை நல்லாருக்கு. சில சமயங்களில் நானும் அப்படி யோசிச்சு எழுதறதுண்டு. இனி எழுதும் போது நீங்க சொன்னதை நினைவு வச்சுக்கறேன்.

    //நானும் ஒரு பாட்டாவது எழுதிடனும்னு பாக்குறேன். இந்தக் கவிதை வரவே மாட்டேங்குது எனக்கு:(//

    இப்ப நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லட்டுமா? :) உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு பாடலை எடுத்துகிட்டு அந்த மெட்டில் சில வார்த்தைகளை கோர்த்துப் பாருங்க. அப்படி செய்யறது கொஞ்சம் சுலபம்னு நினைக்கிறேன்.

    வாசித்தமைக்கும் யோசனைகளுக்கும் மிக்க நன்றி கோபி!

    ReplyDelete
  3. நன்றாக வந்து இருக்கிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும் பார்வதி தேவி போற்றி//


    தங்களுக்கும் மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் அந்த பனி மலையில் பரமனுடன் வீற்றிருக்கும் மலையரையன் தன் பொற்பாவை பார்வதி தேவியின் அருளால் புத்தாண்டு நலமான வளமான ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //நன்றாக வந்து இருக்கிறது//

    நன்றி திகழ்!

    ReplyDelete
  6. //தங்களுக்கும் மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் அந்த பனி மலையில் பரமனுடன் வீற்றிருக்கும் மலையரையன் தன் பொற்பாவை பார்வதி தேவியின் அருளால் புத்தாண்டு நலமான வளமான ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete
  7. //http://www.youtube.com/watch?v=ajavVEvMs4Y//

    பெரிய பாடலை பொறுமையாக, அருமையாக 5 ராகங்களில் பாடி அளித்த சுப்பு தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  8. கவி...

    உங்க எழுத்து திறமையை என்னவென்று சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை...

    உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. வாங்க ஆர்.கோபி. ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    //உங்க எழுத்து திறமையை என்னவென்று சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை...//

    அப்படில்லாம் இல்லை; எத்தனை பேரை துணைக்கு கூப்பிட்டிருக்கேன் பாருங்க முதல் பத்தியில் :) அதோட அவள் மனசு வச்சிருப்பதால் கொஞ்சம் எழுதிகிட்டிருக்கேன்...

    அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. அப்படியே நானும் உங்களுக்கு அதை ரிப்பீட்டிக்கிறேன்!

    ReplyDelete
  10. பல முறை படித்தேன். அருமை அருமை.

    ReplyDelete
  11. //பல முறை படித்தேன். அருமை அருமை.//

    ரொம்ப நன்றி ராதா. எனக்கே பிடித்த ஒருசில பாடல்களில் இதுவும் ஒண்ணு.

    ReplyDelete