Monday, December 13, 2010

உன் அன்பொன்றே வேண்டும்!



மனிதரும் வலிதரும் யாதொன்றும் வேண்டாம்
அம்மாஉன் அன்பொன்றே வேண்டும்
களிதரும் கன்னியே என்னுள்ளே நீயே
என்றென்றும் ஒளிவீச வேண்டும்

பனிதரும் பிறைசூடன் இடப்பாகம் கொண்டாய்
அவனுக்குன் வலப்பாகம் தந்தாய்
ஆதியே பரமனில் பாதியாய் ஆனாய்
சோதியென ஒன்றாகி நின்றாய்

நஞ்சுண்ட சிவனையே கருநீல கண்டனாய்
ஆக்கியே காத்திட்டாய் அம்மா
வினையென்னும் உரவினை உண்டுண்டு வீழ்ந்தேன்
எனையும்நீ காக்கவே வேண்டும்

என்இதயக் கோவிலில் நீஇருக்க வேண்டும்
உன்னைத்தினம் பூஜிக்க வேண்டும்
பண்பாடி புகழ்பாடி அருள்நாடி அதுவே
வாழ்வெனவே வாழ்ந்திருக்க வேண்டும்!


--கவிநயா

8 comments:

  1. சூப்பர்.

    திருச்செங்கோடு, சுருட்டப்பள்ளி எல்லாம் மானசீகமாகத் தரிசித்தேன்.

    \\என்இதயக் கோவிலில் நீஇருக்க வேண்டும்\\

    பூசலார் நாயனார் புராணம் நினைவுக்கு வருகிறது.

    'நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம்...'

    'பண்பாடி புகழ்பாடி அருள்நாடி அதுவே
    வாழ்வெனவே வாழ்ந்திருக்க வேண்டும்!'

    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்...அவன் (அவள்?!) தாள் வணங்கி...

    அருமையான பாடல். எனக்கும் இது போல எழுத சொல்லிக் கொடுங்கள்!

    ReplyDelete
  2. நல்ல பாடல். நானும் ரீபீட் அடிச்சி வேண்டிக்கறேன். :-)

    ReplyDelete
  3. //திருச்செங்கோடு, சுருட்டப்பள்ளி எல்லாம் மானசீகமாகத் தரிசித்தேன்.//

    நல்லது கோபி :) நான் அங்கெல்லாம் போனதில்லை :(

    //அருமையான பாடல்.//

    மிக்க நன்றி.

    //எனக்கும் இது போல எழுத சொல்லிக் கொடுங்கள்!//

    சொல்லித் தரக் கூடிய விஷயம்னா சொல்லித் தந்துடலாம்தான் :)

    ReplyDelete
  4. //நல்ல பாடல். நானும் ரீபீட் அடிச்சி வேண்டிக்கறேன். :-)//

    நன்றி ராதா :)

    ReplyDelete
  5. உரவினை என்றால் என்ன பொருள் அக்கா? எனக்கு புதிய சொல்லாக இருக்கிறது.

    ReplyDelete
  6. //உரவினை என்றால் என்ன பொருள் அக்கா? எனக்கு புதிய சொல்லாக இருக்கிறது.//

    உரவு=நஞ்சு=விஷம்

    உங்களுக்குத் தெரியாமலா? அறிவினாதானே குமரா? :)

    ReplyDelete
  7. அரவு தெரியும். உரவும் அதற்கு உறவு தானா? சரி தான். :-)

    ReplyDelete
  8. அரவு, உரவு. நல்ல உறவுதான், இல்லை? நீங்க சொன்னதை ரசித்தேன் :)

    ReplyDelete