
ஆற்று வெள்ளம், நாளை வரத்
தோற்றுதே குறி - அம்மா
கண்ணில் வெள்ளம், நித்தம் வரக்
குறி சொல்வாயோ?
தாயி என்று, கால் பிடித்துக்
கெஞ்சும் பிள்ளையை - இன்று
நோக வைத்து, நொங்க வைத்து
நடம் புரிவாயோ?
--------------------------------------
பிறந்த வீட்டில், பட்டாம் பூச்சி
போலப் பறந்தேன் - என்னைப்
பிடித்து வந்துன், பிள்ளை வீட்டில்
வளர்த்த ஈஸ்வரி...
குன்றில் உந்தன் பிள்ளை யவன்
கோவித்துக் கொண்டால் - மனம்
கொஞ்சமும் இரங்கான் இதைச்
சொல்ல வில்லையே!
--------------------------------------
மக மாயி உன்னை நம்பி வந்த
பெண்ணைப் பாரடி!
குக தாயி எந்தன் கண் துடைக்க
கை வரல்லையோ?
அரங்க நகர் அப்பன் அங்குச்
சோறு ஊட்டுவான் - இங்கே
இரங்க யாரும் எனக்கில்லை
அஞ்சொல் நாயகீ!
------------------------------------
ஆதி மூலம், என்றே அன்று
ஆனை பிளிற - அப்பா
ஓடி வந்தார், அங்குச் சொல்ல
மனம் வரல்லையே!
ஏது பிழை செய்திடினும்
இந்த வீட்டிலே - அம்மா
பக்கத் துணை நீ ஒருத்தி
நீ ஒருத்தியே!
-------------------------------
ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்!
கந்தன் மனக் கல் உருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே! - அம்மா....
தோளே கதி, தாளே கதி...
கற்பகாம்பிகே!!!