Monday, March 26, 2012

கனக தாரை - 7,8,9

Lord Vishnu and Goddess Laxmi

சுப்பு தாத்தா யதுகுல காம்போதியில் தொடங்கி கானடாவில் முடித்திருக்கும் அழகை இங்கே கேட்கலாம். மிக்க நன்றி தாத்தா!

7.
விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ-
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)-
மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:


நீலத்தா மரைகள் அனைய நிகிலத்தைக் காக்கும் விழிகள்
நிமிடத்தைக் கோர்க்கும் சின்ன நொடியேனும் மேலே பட்டால்
சுவர்க்கத்தை ஆளும் வாழ்வும் சுலபத்தில் வந்தே சேரும்
மதுவென்னும் அசுரனை வென்ற மாதவனை மகிழச் செய்யும்
சுரபதியைக் காத்த விழிகள் சற்றேனும் என்னைப் பார்த்தால்
எண்ணில்லாச் செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்வேன் தாயே!


8.
இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்
த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே
த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


பக்தர்கள் போற்றிப் பணியும் பெருநிதி ஆன தேவீ
பரிவோடு கனிவும் மிகுந்து பொங்கிடும் பார்வை யாலே
எத்தனை தவம் செய்தாலும் எளிதினில் கிட்டா சுவர்க்கம்
இகபர சுகம் எல்லாமே அடியார்க்கு அருள்வாய் நீயே
மலர்ந்திட்ட பதுமம் ஒத்த மங்கையுன் விழிகள் பட்டால்
உலகத்தில் யாவும் பெற்று உவப்பேன்நான் கமலத்தாயே!

9.
த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்
அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்
நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:


அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல
பாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்
சாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்
அன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்
நாரணன் நங்கை உன்றன் கார்மேக விழிகள் பட்டால்
வினையெல்லாம் நிமிடம் கூட நிற்காமல் ஓடும் தாயே!

--கவிநயா

(தொடரும்)

5 comments:

  1. கவிநயா ,

    சுப்பு ஐயா பாடிக்கொடுத்ததும் மீண்டும் வருவேன்.

    இன்றைய பகுதியில் நான் தினமும் மிகவும் ரசித்துச்சொல்லும் ஒன்பதாம் பதத்தின் தமிழாக்கம் வாசித்ததும் தோன்றியதை எழுதிவிடுகிறேன் .

    ஒன்பதாம் பதத்தின் இரண்டாவது வரியில் வரும் 'விஹங்க சிசு'
    அதாவது சாதகப்பறவைக்குஞ்சு பற்றி பரமாச்சார்யார் கூறிய
    தகவல் அம்மன் பாட்டு அன்பர்களுக்காக:

    சாதகப்பறவைக்குத் தொண்டையில் ஓட்டை உண்டு!
    எப்படி சாப்பாடு உள்ளே போகும்?அலகினால் எதைச்சாபிட்டாலும்
    தொண்டைஓட்டைவழியாகவெளியில்வந்துவிடுமே!அதனால்
    இந்தப்பறவைக்குஆகாரம், வானத்திலிருந்து தொண்டை ஓட்டையில்நேராக விழக்கூடிய மழைத்துளி மட்டுந்தானாம்!அதனால்தான்'மழைக்காக ஏங்கும் சாதகம்போல் 'என்று சொல்கிறோம்.

    முந்தின வரியில்"பொருள்மழை பொழியவேண்டும்"என்ற
    பொருள்பட "தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்"என்று
    திருமகளை வேண்டிய குழந்தைக் கவிக்கு"மழைக்காக ஏங்கும்
    இந்தப்பக்ஷிக்குஞ்சை, லக்ஷ்மியின் அருள்/பொருள் மழைக்காக
    ஏங்கும் இந்தப்பெண்ணுக்கு ரூபகமாகப் சொல்லணும் "என்று தோன்ற அப்படியே இரண்டாவது வரியில் பாடிவிட்டார்!

    வாயால் சாப்பிடுவது கர்மாவை அனுபவிப்பது மாதிரி ;கர்மா பிரதிகூலமாய் இருப்பதால்,வாயால் சாப்பிட்டது தொண்டை ஓட்டை வழியாக ஒழுகிப்போயவிடுகிறது.அதாவது இவள் எவ்வளவு உழைத்து சம்பாதித்தாலும் வேறு எதோ விதத்தில் செலவாகிவிடுவதால்
    செல்வம் சேராமல் நழுவ,வறுமை ஒழியாமல் இருக்கிறது.லக்ஷ்மி
    க்ருபைமழை பெய்கையில் நேரே தொண்டை ஓட்டைக்குள் ஆகாரம்
    போட்டு உள்ளே சேர்வதுபோல் செல்வம் நழுவாமல் சேர்ந்துவிடும்!
    எப்படி பால சங்கரரின் கவித்துவம் ?

    ReplyDelete
  2. அருமையான விளக்கத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அம்மா. சுப்பு தாத்தா பாடித் தந்ததை இட்டிருக்கிறேன். கேளுங்கள்.

    ReplyDelete
  3. Lalithhmittalin vilakkam migavum alagaga ullathu.
    Tjangal thamil aakkamum miga sirappu.Ith ellorukkum varaathu.
    Natarajan

    ReplyDelete
  4. கவிநயா ,

    சுப்புஐயா 'பவதிபிக்ஷாந்தேகி 'என்று ஆரம்பித்து குழந்தை சங்கரனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திப் பாட வைத்துவிட்டார்!இந்தப் பகுதி மெய் சிலிர்க்க வைத்தது உண்மை !உங்க இருவருக்கும் மனமார்ந்த நன்றி !

    ReplyDelete
  5. நடராசன் ஜி ,

    விளக்கியது பரமாச்சார்யார்; நான் வெறும் மீடியம் தான் !உங்கள் பின்னூட்டத்தை அந்த மகானின் மலர்ப் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete