Friday, March 2, 2012

கண்டேன் அன்னையை !

சிலமாதங்கள் முன்  எனது "சர்வம் நீயே "வலையில் பதிவிட்ட அன்னை
பாட்டு  அம்மன் பாட்டு அன்பர்களுக்காக கீழே:



கண்டேன் அன்னையை !

தாயே அபிராமி!உன்னிரு
தாளினைப் பூஜை செய்ய ,
தேனிறை வண்ணமலர் தேடி
தோட்ட மெங்குந்திரிந்தேன்.

பொன்னிற சாமந்திப்பூ பறிக்க
எண்ணி நெருங்கிய நான்
அன்னையே!உன் வதனம் அதிலே
கண்டு  மயங்கி  நின்றேன்!


கண்ணைக் கவர்ந்திழுக்கும் இளஞ்
செந்நிற ரோஜாவிலும்
உன்னதரம் காட்டிக்குறும்புப்
புன்னகை புரிந்து நின்றாய்!


மலயத்வஜன் மகளே!மீனாட்சி!
மனோரஞ்சிதத்திலுமுன்
மேனியின் நிறம் காட்டி என்னை
மெய்சிலிர்க்க வைத்தாய்!


தேனருந்தத் தவிக்கும் வண்டினம்
தங்கிடுந்தாமரையில்
தேவி! நின்னருள் தவழும் நயனம்
தோன்றத் தொழுது நின்றேன் !


பூவிலுனைக்காட்டி அனைத்துப்
படைப்பிலும் உனைக்காணல்
'பக்குவ நிலை' என்ற தத்துவப்
பாடம் புரிய வைத்தாய்!


பன்னிற மலர்களில் நீ ! இளஞ்சிசு
சிந்திடும் மழலையில் நீ!
சந்திர ஒளியிலும் நீ! ஓதிடும்
மந்திர ஒலியிலும் நீ!


நின்னருள் நீர் பாய்ச்சிச் செழித்த
என்மனப் பூம்பொழிலில்
மலர்ந்த இப்பாமலரால் உந்தன்
மலரடி பூஜிக்கிறேன்!

1 comment:

  1. உங்க பாடல்களில் எனக்கு ரொம்பப் பிடித்தது அம்மா. மிகவும் நன்றி.

    ReplyDelete