Monday, February 27, 2012

பலப் பலவாய் இருப்பாள்!


வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்
செந்தா மரைமீதில் சிரித்திருப்பாள்
சிம்மத்தின் மீதேறி வலம் வருவாள் – தன்னை
சொந்தம் எனக் கொண்டவர்க்கு நலம் தருவாள்

நா வினில் குடியிருப்பாள் நாத வடி வாயிருப்பாள்
நான்முகனின் அருகிருந்து நல்லறிவு நல்கிடுவாள்

பூ வினில் குடியிருப்பாள் பூ வுல கைக்காப்பாள்
புங்கவனின் மார்பினிலே பூவிதென மலர்ந் திருப்பாள்

இமயத்தில் குடியிருப்பாள் ஈசனின் இட மிருப்பாள்
இதயத்தில் கொலுவிருப்பாள் இமையெனக் காத்திருப்பாள்

கலைமகளாய் இருப்பாள் கன்னல்கவி தருவாள்
அலைமகளாய் இருப்பாள் ஆக்கமெல்லாம் அருள்வாள்
மலைமகளாய் இருப்பாள் மாந்தர்தம்மைக் காப்பாள்
பலப்பலவாய் இருப்பாள் பக்திசெய்தால் மகிழ்வாள்

அடியவர் விரும்பிடும் வடிவினிலே வருவாள்
கொடியவை களைந்திடுவாள் கொடியென படர்ந்திடுவாள்
மழையெனப் பொழிந்திடுவாள் மலரென மலர்ந்திடுவாள்
மனமெலாம் நிறைந்திடுவாள் மணம்கமழச் செய்திடுவாள்!


--கவிநயா

2 comments:

  1. அருமை !

    பாரதியார் பாட்டின் மெட்டிலேயே பாடிப் பார்த்தேன் ;மிகவும் நன்றாகப் பொருந்தி இருக்கு;சுப்பு ஐயாவின் பாட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கேன்

    ReplyDelete
  2. நன்றி லலிதாம்மா!

    ReplyDelete