Friday, March 22, 2013

அரைநொடி போதும்!



அரைநொடி போதும்!
(subbusir sings:
http://www.youtube.com/watch?v=x4kVi3DGo84&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=2 )

அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
          அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
         ஆனந்தக் கூத்தாடுமே!
*1) சிறுமி வடிவில்வந்து அரசன் அணிந்திருந்த
                     வெண்முத்துமாலைதனைக் கழற்றி
       அருமைப் பிள்ளைத்தமிழ் ஆக்கிய குமரனுக்குப்
                    பரிசளித்தப் பாண்டி இளவரசி!
அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
         அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
        ஆனந்தக் கூத்தாடுமே!
*2) வேந்தனின் ஐயத்திற்காளான 'ஐயா' தன்
                 திருஷ்டியைத் தீயிட்டுத் த்யாகம் செய்ய '
     "ஆனந்த ஸாகரம் " பாடுகையில் அவர்க்குப்
              பார்வையளித்த அருட்கடலே!
அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
              அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
              ஆனந்தக் கூத்தாடுமே!
*3) பக்தியில் மூழ்கி "பாசமோசனி ..."எனப்
                   பாடித்தன்னை மறந்திருந்த
       முத்துப்பாடகர்க்கு முக்தியளித்த
               உத்தமியே!மீனலோசனி!
அழகியே !அங்கயற்கண்களால் எனை நீ
           அரைநொடி நோக்கினால் போதுமே!
மழைமுகில் கண்ட மயில்போல் என்மனம்
         ஆனந்தக் கூத்தாடுமே!
------------------------------------------------------------------------------------------------------

*1) அர்ச்சகரின் மகள்வடிவில் வந்த மீனாக்ஷி ,பிள்ளைத்தமிழ் பாடக்கேட்டு குமரகுருபரருக்கு திருமலைநாயகரின்
முத்துமாலையைப் பரிசளித்த கதை .

*2) 'ஐயாதீக்ஷிதர்'என்றழைக்கப்பட்ட நீலகண்ட தீட்சிதரிடம்
அரண்மனைச்சிற்பி ராணியின் சிலையின் வலது
முழங்காலுக்குமேல் சில்லு தெறித்து விட்டதாகச்சொல்லி
வருந்த ,அங்கு ஒருமச்சம் இருப்பதை திவ்யத்ருஷ்டியால்
அறிந்த ஐயா "தவறில்லை "என்று கூற,சிலையைக்கண்ட
மன்னர் விஷயம் அறிந்ததும் ,ஐயா மீது சந்தேகங்கொண்டு
கைது செய்து அழைத்துவர ஆளனுப்ப,மீனாக்ஷி பூஜையில்
ஆழ்ந்திருந்த ஐயா திவ்யத்ருஷ்டியால் நடந்ததைஅறிந்து
தீபாராதனைக்கற்பூரத்தால்கண்களைச்சுட்டுக்கொண்டு
பார்வை இழந்தார்.அவரது தூய்மையை உணர்ந்த
மன்னன் வருந்தி மன்னிப்பு கேட்க ,ஐயா ஆனந்த சாகர ஸ்தவம்
என்ற துதிபாடுகையில் பார்வை மீண்டதாகப்படித்தேன் !

*3) முத்துசாமி தீட்சிதர் மீனாட்சியின் முன் அமர்ந்து
"மீனலோசனி !பாசமோசனி !.."என்று பாடியவண்ணம்
பக்தியில் தன்னைமறந்து அமர்ந்திருக்கையில் அவள்
பதத்தில் இணைந்துவிட்டதாகப்படித்தேன்

நன்றி:அமரர் ர .கணபதியின் "தெய்வத்தின் குரல்"







6 comments:

  1. வரலாற்று நிகழ்வுகளோடு இணைந்த அருமையான பாடல். தன் பிள்ளை (முருகன்) அருளால் பேசும் திறம் பெற்ற குமரகுருபரரைத் தன் மேல் பிள்ளைத் தமிழ் பாட வைத்தாள் அன்னை. நீலகண்ட தீக்ஷிதர் ஒரு பெரும் மகான். அவர் அருளிய 108 ஸ்லோகங்களை உடைய ஆனந்த ஸாகர ஸ்தவத்தைப் பாராயணம் செய்தால் கண் பார்வைக் குறைபாடுகள் நீங்குவது கண்கூடு. அது போல், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர், தாம் இயற்றிய‌ 'மீனாட்சி மேமுதம் தேஹி....' என்று துவங்கும் கீர்த்தனையில் வரும், 'மீன லோசனி, பாச மோசனி...' என்ற வரிகளை, அவரது சீடர்களைத் திரும்ப திரும்ப பாடச் சொல்லிக் கேட்டவாறே அம்பிகையின் திருவடிகளைச் சேர்ந்தார். பக்தியின் மேன்மை உரைக்கும் மிக நல்ல பாடலைத் தந்தமைக்கு தங்களுக்கும் பாடிய சுப்புத் தாத்தாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. 1)தனபாலன் ஜி

    வருகைக்கு நன்றி


    2)பார்வதிஜி,

    பரமாச்சார்யார் முத்துசாமி தீக்ஷிதரைப்பற்றி :
    தீபாவளிஅமாவாசையன்று"பச்சைப்பசேல் என்று பரமகுளிர்ச்சியாகப்
    பிரகாசிக்கிற அம்பாளின் ஸ்வரூபத்தை 'மரகதச்சாயே' என்று சொல்லி 'மீனலோசனீ ,பாசமோசனீ 'என்ற வார்த்தைகளை அவர் கானம்பண்ணிக் கொண்டிருக்கிறபோதே அவருடைய சம்ஸார பாசத்தை அம்பாள் நீக்கித்
    தன் பாதாரவிந்தத்தில் சாச்வதமாகச் சேர்த்துக்கொண்டு விட்டாள் "-என்று
    எழுதியிருப்பதைபடித்ததுமே இப்படிப்பட்ட மகான்களைப்பற்றி ஒரு பாட்டு எழுத ஆசை பிறந்தது;.மூன்று முத்துக்களைக்கோர்த்து அம்பாளுக்கு ஒரு சின்ன முத்துப்பாமாலை.

    ரசித்ததற்கு நன்றி





    ReplyDelete
  3. கதைகளைக் கவிதைகளாகக் கோர்த்த முத்துப் பாமாலை அழகு அம்மா! சுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி தாத்தா!

    ReplyDelete
  4. ////பரமாச்சார்யார் முத்துசாமி தீக்ஷிதரைப்பற்றி :
    தீபாவளிஅமாவாசையன்று"பச்சைப்பசேல் என்று பரமகுளிர்ச்சியாகப்
    பிரகாசிக்கிற அம்பாளின் ஸ்வரூபத்தை 'மரகதச்சாயே' என்று சொல்லி 'மீனலோசனீ ,பாசமோசனீ 'என்ற வார்த்தைகளை அவர் கானம்பண்ணிக் கொண்டிருக்கிறபோதே அவருடைய சம்ஸார பாசத்தை அம்பாள் நீக்கித்
    தன் பாதாரவிந்தத்தில் சாச்வதமாகச் சேர்த்துக்கொண்டு விட்டாள் "-என்று ////

    அம்மா, தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன். தவறாக நினைக்கவேண்டாம். தாங்கள் சொன்னதும் சரியே. கீர்த்தனையின் குறிப்பிட்ட வரிகளை, தீக்ஷிதர் பாடி விட்டு, அதை அவரது சீடர்கள் தொடர்ந்து பாடும்(அக்காலத்தில் பின்பாட்டு என்று சொல்வார்களே அது போல்) போதே இறைவியை அடைந்து விட்டார் என்பதையே தெரிவிக்க விரும்பினேன். நான் தெளிவாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். தங்களின் கனிவான வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete