Monday, February 24, 2014
அன்னைக்கொரு அந்தாதி - 4
அன்பினிய சுப்பு தாத்தாவின் குரலில்... மிக்க நன்றி தாத்தா!
காப்பு
உன்னை, உறுவினை தன்னைக் களைந்திடும் ஐங்கரனை
கன்னல் மொழிபகர் வள்ளிக் குறமகள் சண்முகனை
மன்னும் இறையொளி தன்னில் மிளிர்ந்திடும் சத்குருவை
முன்னே அடிபணிந் தன்னை மலரடி போற்றுவனே!
நூல்
உன்னும் அடியவர்க் கென்றும் அருளிடும் உத்தமியே
மன்னும் மறைபுகழ் மங்கை எனத்திகழ் மாதவியே
இன்னல் பலப்பல என்னைத் தொடரினும் ஈஸ்வரியே
உன்னை அனுதினம் உள்ளம் உருகிட ஏத்துவனே! (1)
ஏத்தும் உளந்தனில் பூத்துப் பொலிந்திடும் ஏந்திழையே
பூத்திவ் வுலகினைக் காத்துக் கரந்திடும் பூவிழியே
கூத்தன் நடமிடப் பார்த்துக் களித்திடும் பைங்கிளியே
சாத்தும் நறுமலர் ஏற்றுன் அருள்கொடு சங்கரியே! (2)
சங்கில் சுதியுடன் ஓமென் றொலித்திடும் சங்கவியே
அங்கம் பரனிடம் பங்காய் அளித்திட்ட அம்பிகையே
சிங்கந் தனிலொரு வேங்கை எனவரும் சூலினியே
மங்கா விளக்கென எங்கும் விளங்கிடும் மாலினியே! (3)
மார்பில் மணம்மிகும் மாலை துலங்கிடும் மங்கலையே
போர்வில் எனப்புரு வங்கள் விளங்கிடும் பூங்கொடியே
தார்கொள் மலர்களைச் சூழ்வண் டெனவிழி கொண்டவளே
பார்வந் தடிதொழத் தான்வந் தருளிடும் பைங்கிளியே! (4)
பையப் பதம்பணிந் துன்றன் பெயரினைப் பார்வதியே
மையல் தொலைந்திடத் துய்ய உளமுடன் மந்திரமாய்த்
தையல் அடிநிழல் தங்கும் தவப்பயன் வேண்டுமென
வையம் தொழுதிடும் பொய்யில் மறைவழி வாழ்த்துவனே! (5)
வாழ்த்தும் அடியவர் போற்றிப் பணிந்திடும் வான்மதியே
வீழ்த்தும் வினையினை ஓட்டிப் புகல்கொடு வைஷ்ணவியே
சூழ்த்த நறுமலர் சாற்றிப் பதமலர் சென்னியினால்
தாழ்த்திப் பணிந்துனை வாழ்த்தும் பணிகொடு அம்பிகையே! (6)
அம்மை யுனையுளம் ஒன்றித் தொழுதிட அத்தனவன்
செம்மை நிறமுடன் உன்றன் வலப்புறம் சேர்ந்தொளிர
எம்மை வருத்திடும் வெம்மை மிகுதுயர் போக்கிடவே
இம்மை இடர்கெட வந்துன் அருள்தர வேண்டுமம்மா! (7)
வேண்டிக் கொடுவினை தோண்டித் துவண்டிடும் நாளிதிலே
ஆண்டிற் பலகழிந் தேகிக் கரைந்திடும் போழ்தினிலே
மாண்டிப் புவியிதை நீங்கும் பொழுதினில் நீவரவே
யாண்டும் உனதருள் வேண்டித் திருவடி ஏத்துவனே! (8)
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
அம்பிகையே அனைவருக்கும் அருள் தருவாய் அம்பிகையே...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deletedivine ecstasy.
ReplyDeletelisten here:
https://soundcloud.com/meenasury/annaiandhathi25214
subbu thatha
மிக்க நன்றி தாத்தா. சுட்டியை இடுகையிலும் சேர்த்திருக்கிறேன்.
Deleteஅந்தாள அந்தாதி!!
Deleteஅன்புடன்
திவாகர்
வாங்க திவாகர் ஜி. நீங்க சொல்றது புரியலையே...
Delete