Monday, May 12, 2014

கண்ணம்மா!


சுப்பு தாத்தா நாட்டைக்குறிஞ்சி, அபோகி, மற்றும் செஞ்சுருட்டி ராகங்களில் பாடி அசத்தியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!



கால நேரம் ஏதுமில்லை கண்ணம்மா
கனிந்து உன்னைப் பாடிடவே கண்ணம்மா
கோலவிழி கோகிலமே கண்ணம்மா
கொஞ்சுதமிழ் கேட்டிட வா கண்ணம்மா!

சோலை மலர் போல நெஞ்சில் கண்மணியே
சொந்தமெனப் பூத்தவளே கண்மணியே
நீலகண்டன் மேனியிலே கண்ணம்மா
நிலையாய் இடம் கொண்டவளே கண்ணம்மா!

மாலவனின் சோதரியே கண்ணம்மா
மாதுளம்பூ நிறத்தவளே கண்ணம்மா
வேலவனின் தாயவளே கண்ணம்மா
வேதங்களின் நாயகியே கண்ணம்மா!

விஞ்சுகின்ற அன்பினாலே கண்ணம்மா, உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடுகிறேன் கண்ணம்மா
கஞ்ச மலர்ப் பாதங்களே கண்ணம்மா
தஞ்சமென்று கொண்டு விட்டேன் கண்ணம்மா!


-கவிநயா

No comments:

Post a Comment