ஆரபி ராகத்தில் அன்பினிய சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
எந்தன் கண்மணியே
எதிலும் உன் முகமே!
எந்தன் மனதினிலே, இன்றும்
என்றும் உன் நினைவே!
(எந்தன் கண்மணியே)
விண்ணவர் போற்றும் வேல்விழியே
மண்ணவர் போற்றும் மாமணியே
சின்னவள் நானும் போற்றுகின்றேன்
என்னவளே என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)
சடைமுடியானவன் அருகிருக்க
விடையினில் அவனுடன் கொலுவிருக்க
மடையென அருள் மழை பொழிந்திருக்க
கடை விழியால் என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)
கண்ணுதலான் இடம் அமர்ந்தவளே
கண்ணொளி யதனால் காப்பவளே
பண்ணெடுத்து உன்னைப் பாடுகின்றேன்
கண்ணெடுத்து என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)
கரமலர் மீதினில் மலரம்பும்
கருப்புச் சிலையும் தரித்தவளே
பிறைமதி முடியினில் அணிந்தவளே
கருவிழியால் என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)
--கவிநயா
No comments:
Post a Comment