Monday, December 8, 2014

அருள்வாய் அம்மா!


சுப்பு தாத்தா கல்யாணியில் கலக்கலாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



எண்ணிப் பார்த்தும் எண்ணித் தீரா

  செல்வம் தந்தாயே!

சொல்லிப் பார்த்தும் சொல்லித் தீரா

  சொந்தம் தந்தாயே!

அள்ளிப் பார்த்தும் அள்ளித் தீரா

  இன்பம் தந்தாயே!

செல்வம், சொந்தம், இன்பம் எல்லாம்

  நீயாய் வந்தாயே!



உலகம் எல்லாம் ஒன்றாய்ப் பெற்ற

  அம்மா நீயம்மா!

உன்னைக் கண்ணாய்ப் போற்றிக் காக்கும்

  பிள்ளை நானம்மா!

நாளும் உன்னைத் தொழவும் அழவும்

  அருள்செய் வாயம்மா!

அதுவே போதும், காலன் வரினும்

  அஞ்சேன் நானம்மா!



பச்சைக் கிளிபோல் படித்துச் சொன்னேன்

  உந்தன் பெயரம்மா!

இச்சை எனக்காய் ஏதும் வேண்டாம்,

  காப்பாய் நீயம்மா!

பச்சைப் பிள்ளை சொல்லும் பாடல்

  கேட்பாயோ அம்மா?

உன் இச்சைப்படியே நானும் ஆக

  அருள்வாயே அம்மா!


--கவிநயா

4 comments: