Monday, May 26, 2014

என்னைப் பாராயோ?



ஆரபி ராகத்தில் அன்பினிய சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



எந்தன் கண்மணியே
எதிலும் உன் முகமே!
எந்தன் மனதினிலே, இன்றும்
என்றும் உன் நினைவே!
(எந்தன் கண்மணியே)

விண்ணவர் போற்றும் வேல்விழியே
மண்ணவர் போற்றும் மாமணியே
சின்னவள் நானும் போற்றுகின்றேன்
என்னவளே என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)

சடைமுடியானவன் அருகிருக்க
விடையினில் அவனுடன் கொலுவிருக்க
மடையென அருள் மழை பொழிந்திருக்க
கடை விழியால் என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)

கண்ணுதலான் இடம் அமர்ந்தவளே
கண்ணொளி யதனால் காப்பவளே
பண்ணெடுத்து உன்னைப் பாடுகின்றேன்
கண்ணெடுத்து என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)

கரமலர் மீதினில் மலரம்பும்
கருப்புச் சிலையும் தரித்தவளே
பிறைமதி முடியினில் அணிந்தவளே
கருவிழியால் என்னைப் பாராயோ?
(எந்தன் கண்மணியே)


--கவிநயா

Monday, May 19, 2014

என்று வருவாயோ?


நாதநாமக்ரியா மற்றும் ஸாரங்கா ராகங்களில் சுப்பு தாத்தா பாடித் தந்ததை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! கவிதை வடிவில் இருக்கும் இதனை பாட முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை! ஆனால் நம் தாத்தாவினால் இசையமைக்க முடியாததும் உண்டோ? :)



என்று வருவாயோ
எனை வாட்டும் வேதனை களைய?
என்று தருவாயோ
உன் தரிசனம் என் மனம் நிறைய?

என் விழி வழியும் நீர் உனக்கு வேடிக்கையானதோ?
என் மதி மயக்கும் கலக்கம் உனக்கு வாடிக்கையானதோ?
என் கேவல் உன் காதில் குழலோசை யானதோ?
என் பாடல் உனைச் சேராது தடம் மாறிப் போனதோ?

உனக்கான என் அன்பை உயிரூற்றி வளர்க்கின்றேன்
உன் நினைவின் போதையிலே எனை நானே மறக்கின்றேன்
கண்களும் கருக் கொள்ளும் உன் கனிவிலென அறிந்து கொண்டேன்
புன்னகையில் பூப் பூக்கும் உன் இதழால் புரிந்து கொண்டேன்!

என் மனதை நீ அறிவாய் என்றேனும் நீ வருவாய்
என் ஏக்கம் உணர்ந்திடு்வாய் கருணையுடன் தீர்த்திடுவாய்
வைகறையின் விடியலுக்கு புள்ளினம்போல் காத்திருப்பேன்
வாசலிலே தென்றல் வரும் வழி பார்த்து தவமிருப்பேன்!


--கவிநயா

Monday, May 12, 2014

கண்ணம்மா!


சுப்பு தாத்தா நாட்டைக்குறிஞ்சி, அபோகி, மற்றும் செஞ்சுருட்டி ராகங்களில் பாடி அசத்தியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!



கால நேரம் ஏதுமில்லை கண்ணம்மா
கனிந்து உன்னைப் பாடிடவே கண்ணம்மா
கோலவிழி கோகிலமே கண்ணம்மா
கொஞ்சுதமிழ் கேட்டிட வா கண்ணம்மா!

சோலை மலர் போல நெஞ்சில் கண்மணியே
சொந்தமெனப் பூத்தவளே கண்மணியே
நீலகண்டன் மேனியிலே கண்ணம்மா
நிலையாய் இடம் கொண்டவளே கண்ணம்மா!

மாலவனின் சோதரியே கண்ணம்மா
மாதுளம்பூ நிறத்தவளே கண்ணம்மா
வேலவனின் தாயவளே கண்ணம்மா
வேதங்களின் நாயகியே கண்ணம்மா!

விஞ்சுகின்ற அன்பினாலே கண்ணம்மா, உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடுகிறேன் கண்ணம்மா
கஞ்ச மலர்ப் பாதங்களே கண்ணம்மா
தஞ்சமென்று கொண்டு விட்டேன் கண்ணம்மா!


-கவிநயா

Monday, May 5, 2014

வாராயோ? தாராயோ?


சுப்பு தாத்தா வாலாஜி மற்றும் சிவரஞ்சனி ராகங்களில் அனுபவித்துப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



காலிரண்டில் சதங்கை கொஞ்ச
வாயிதழை முறுவல் மிஞ்ச
மானிதெனத் துள்ளித் துள்ளி வாராயோ? எந்தன்
கானகத்தில் கதிரொளியைத் தாராயோ?

சின்னஞ்சிறு அடியெடுத்து
செம்பவழ இதழ் விரித்து
அன்னமென நடை நடந்து வாராயோ? எந்தன்
அன்னையே நீ அன்பை அள்ளித் தாராயோ?

மேகலையோ கிணுகிணுக்க
மேனி வண்ணம் மினுமினுக்க
அஞ்சுகமே மெல்ல மெல்ல வாராயோ? வந்து
அஞ்சலென அபயம் எனக்குத் தாராயோ?

நூபுரங்கள் சிணுங்கி வர
நூலிடையோ ஒசிந்து வர
நேரிழையே நிலம் மகிழ வாராயோ? வந்து
கார்முகிலாய் கருணை மழை தாராயோ?

கைவளைகள் கலகலக்க
கண்டவரோ வியந்திருக்க
கண்மணியே பையப் பைய வாராயோ? வந்து
கன்னத்திலே முத்தம் ஒன்று தாராயோ?


--கவிநயா