Monday, June 15, 2015

மனமெல்லாம்...


மணிரங் ராகத்தில் சுப்பு தாத்தா மனமுருகி அனுபவித்துப் பாடியிருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!



மனமெல்லாம் உன்பதமே நடனமிட வேண்டும்

சிலம்பொலியே சிந்தையெல்லாம் நிறைந்திட வேண்டும்

மென்னடிகள் மெல்ல வைத்து நீ வர வேண்டும், உன்

பொன்னடிகள் தரும் சுகம் நான் உணர்ந்திட வேண்டும்
(மனமெல்லாம்)



காலினில் பொற் சிலம்பு கல் கல் என ஒலிக்கும்

மெட்டி ஒலி மெட்டமைத்து அதனுடன் சிந்து படிக்கும்

கைவளைகள் தாம் கலந்து தாளங்கள் இசைத்திருக்கும்

காதணிகள் உடன் இசைந்து கருத்துடன் ரசித்திருக்கும்
(மனமெல்லாம்)



ஏழுலகமும் உன்னை இமையாமல் பார்த்திருக்க

எட்டும் திசைகளெல்லாம் ஏற்றி உன்னைப் போற்றி நிற்க

சிவனுடன் நடனமிடும் சிவகாமியே தாயே, என்

சித்தத்திலும் வந்திருந்து நடம் புரிவாய் நீயே!
(மனமெல்லாம்)


--கவிநயா

No comments:

Post a Comment