அன்னையென உனை அழைத்தேன் அஞ்சுகமே
பிள்ளையென உனை அணைத்தேன், கொஞ்சிக் கொஞ்சி
தினமே
தாயெனத் தாலாட்டி
தளிரெனச் சீராட்டி
வாஞ்சையுடன் அள்ளி உன்னை
வாரி மடி இருத்தி
கூந்தல் பின்னி முடித்து
கூட்டமாகப் பூக்கள் தைத்து
கன்னங்கரு விழியிரண்டில்
கயலைப் போல் மையெழுதி
செக்கச் சிவந்த வானைத்
தொட்டெடுத்துப் பொட்டு வைத்து
கன்னந் தொட்டு முறித்து
மை வழித்துத் திருஷ்டி வைத்து
பட்டுப் பாவாடை கட்டி
பளபளக்கும் அணிகள் பூட்டி
நீ நடந்து வரும் அழகை
கண்கள் கொட்டாமல் பார்த்து
வான் நிலவை வரவழைத்து
வாயினிக்கச் சோறூட்டி
வானவில்லில் தொட்டில் கட்டி
வண்ணத் தமிழ் பாட்டுப் பாடி
அன்னையென உனை அழைத்தேன் அஞ்சுகமே
பிள்ளையென உனை அணைத்தேன், கொஞ்சிக் கொஞ்சி
தினமே
--கவிநயா
evvalavu alagu!
ReplyDelete