எல்லாச் செயலும் உன்னருளாலே
என்றறிந்தாலும் தாயே, என்
உள்ளம் ஏனோ சஞ்சலமாகுது
துன்பம் வந்தாலே தானே
கனிவைப் பொழியும் உன் பார்வையிலே
நனையத் தானே தாயே
நாளும் பொழுதும் அலைபோல் அலைந்தும்
நாடுகின்றேன் உனை நானே
நாயேனின் பிழை எதுவானாலும்
நீதான் பொறுத்திட வேணும்
சேயென என்னை அன்பால் அணைத்து
நீதான் காத்திட வேணும்
வேதம் போற்றும் தாயே உனக்கென்
வேதனை தீர்த்திடல் பெரிதோ?
நாதன் கண்டத்தில் விடத்தை நிறுத்திய
உனக்கெந்தச் செயலும் அரிதோ?
--கவிநயா
No comments:
Post a Comment