Monday, October 11, 2021

துர்க்கை அம்மா - நவராத்திரி பாடல்

மீனாட்சி அம்மை பாடல் நவராத்திரி முடிந்த பிறகு தொடரும்...


துர்க்கை உன்றன் பேரைச் சொன்னால்

    துன்பம் எல்லாம் தீரும்

தூரப் போகும் வினைக ளெல்லாம்

    இன்பம் வந்து சேரும்

சூலம் கொண்ட கோலம் கண்டால்

    கண்களிலே நீரும்

வழியுதடி துர்க்கை அம்மா

    தேடி வந்தேன் பாதம்

 

அசுர்ர்களை அழிக்கையிலே

    ஆங்காரத் தோற்றம்

அன்புடனே காக்கையிலே

    அன்னையென மாற்றம்

உன் நிழலில் தங்கிடவே

    எனக்கு என்றும் ஏக்கம்

உன் கமலத் திருப்பதமே

    எம்மை என்றும் காக்கும்

 

சங்குடனே சக்கரம் உன்

    சோதரனைப் போலே

சந்திரனைச் சூடிடுவாய்

    காதலனைப் போலே

தீயவற்றைக் கண்டு விட்டால்

    தீயதனைப் போலே

வேகங் கொண்டு வந்திடுவாய்

    சிம்மமதன் மேலே

 

பதினெட்டுக் கரங்களிலே

    ஆயுதங்கள் சொண்டாய்

ஈரெட்டுத் திசைகளிலும்

    அசுரர்களை வென்றாய்

ஆயிரமாம் கண்களினால்

    அன்பர்களைக் காப்பாய்

அண்டி வரும் அடியவரைத்

    திருவடியில் சேர்ப்பாய்

 

 

--கவிநயா


No comments:

Post a Comment