Monday, October 6, 2008

"தேவி திருக்கதை!" -- 6

"கதை முடிந்த கதை!"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


தேவிதிருக்கதையைத் தீர்க்கமுடன் சொல்லிவந்த சுமேதசரும்
மன்னனையும், வணிகனையும் வாழ்த்தியங்கு அனுப்பிவைத்தார்


திருக்கதையைச் செவிமடுத்த இருவருமே மனமுணர்ந்து
விஷ்ணுமாயை என்னுமிந்த அன்னையவள் தனைஎண்ணி


கண்மூடித் தியானித்து பலகாலம் தவமிருந்தார்
அன்னையவள் மனமிரங்கி அவர்முன்னே தோன்றிநின்று,


அவர் வேண்டும் வரமெல்லாம் அளித்தருளி மேலும் சொன்னாள்:


"என் கதையை எவரொருவர் பக்தியுடன் படிப்பவரோ
படிப்பவரைக் கேட்டவரோ, மனமொன்றி எனை நினைந்தால்


அவர்வேண்டும் வரம் யாவும் நானவர்க்கு வழங்கிடுவேன்
இகலோக, பரலோக இன்பமெல்லாம் யானளித்து நற்கதியும் நான் தருவேன் !"

என்றுரைத்து மறைந்திட்டாள் சர்வலோக ஜெகன்மாதா!
சகலருக்கும் வாழ்வளிக்கும் தேவி விஜயலக்ஷ்மி !


துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக தேவியிவள்
செய்திட்ட அற்புதத்தை இதுவரையில் பாடிவந்தேன்.


படித்தவரும் கேட்டவரும் இகத்தினிலும் பரத்தினிலும்
பாக்கியத்தைத் தானடைந்து பேரின்பம் பெற்றிடுவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!

**************************************************
[தொடரும்]

Sunday, October 5, 2008

"தேவி திருக்கதை" -- 5

"தேவி திருக்கதை" -- 5



முந்தைய பதிவு


"மூன்றாம் கதை"
"சும்ப-நிசும்ப வதம்"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


மூன்றாம் முறையாக அன்னையிவள் செய்திட்ட
அற்புதத்தைப் பாடிடுவோம் அவள் பெருமை கூறிடுவோம்

சண்ட முண்டன் எனுமரக்கர் பூதலத்தில் வாழ்ந்திருந்து
கொடுஞ்செயல்கள் செய்துவந்து விண்ணவரை வருத்தினரே

அவர்கொடுமை தாங்காது அலறிட்ட வானவரும்
உமையன்னை பதம் நாடி மலையெங்கும் தேடினரே

இமயத்துமலைகளிலே அலைந்திருந்த உமையன்னை
இவர்பாட்டைக் கேட்டதுமே அடக்கவொண்ணா சீற்றமுற்றாள்

குண்டலினியின் கண்ணினின்று புறப்பட்ட அன்னைசக்தி
காளியென்னும் கோரவுரு கொண்டங்கு வெளிவந்து

சண்ட முண்ட அரக்கர்களை அடியோடு சாய்த்துவிட்டு
அசுரர்களின் சிரம்கொய்து பீறிட்ட உதிரம் குடித்து,

சண்ட முண்ட அரக்கர்களின் தலைகொண்டு தேவியவள்
காலடியில் சமர்ப்பித்து சாமுண்டா எனும் பெயர் பெற்றாள்

இத்தோடு நில்லாது தொடர்ந்திருந்த போரினிலே
ரக்தபீஜன் எனுமரக்கன் மூர்க்கமாகச் சண்டையிட்டான்

இவன்பெற்ற பெருவரமோ எவரையுமே வியப்பிலாழ்த்தும்
தன்னுதிரம் ஒரு துளியும் பூமியிலே விழுமாயின்

அவற்றினின்று மற்றுமொரு ரக்தபீஜன் தோன்றிடுவான்
எனும்வரத்தைப் பெற்றதனால் தனைவெல்ல யாருமில்லை

என்கின்ற தலைக்கனத்தில் தாறுமாறாய்ச் சண்டையிட்டான்
கொடுமையான அரக்கனிவனை வெல்லும்வழி யாதெனவே

தேவியவள் சிந்தித்தாள் காளியெனச் சண்டையிட்டாள்
அகலமான வாயினிலே தொங்குகின்ற நாக்குடனே

அசுரனிவன் மார்பிளந்து உதிரமொரு துளியேனும்
நிலத்தடியில் வீழாமல் நாவெடுத்துக் குடித்திட்டாள்

பிறவரக்கர் தோன்றுவதை தன்மதியால் தடுத்திட்டாள்
ரக்தபீஜ அரக்கனவன் கொடுஞ்செயலை முறித்திட்டாள்

இவருக்கெல்லாம் அரசனான அண்ணன்தம்பி இருவருண்டு
சும்பன் எனும் ஒருவரக்கன் நிசும்பன் எனும் அவன் தம்பி

இருவருமே இப்போது அன்னையெதிர் தோன்றிட்டார்
நீண்டதொரு போர் நிகழ்த்த அன்னையவள் உளம் கொண்டாள்

தன்சக்தி அனைத்தையுமே பலமடங்காய்ப் பெருக்கியவள்
தனக்குதவி செய்யவென எட்டு சக்தி படைத்திட்டார்

நாராஷ்மி,வைஷ்ணவி,குமாரி, ப்ராஹ்மி, வராஹி, ஐந்த்ரீ
சாமுண்டா எனும் காளி, அம்பிகா
என்பதுவே அவர் பெயராம்

மாத்ரிகையர் எண்மருடன் தேவியவள் புடைசூழ
போர்க்களத்தில் நிசும்பனுடன் கோரமான போர்புரிய


பலகாலம் போர்புரிந்து நிசும்பனுமே மாண்டொழிந்தான்
எஞ்சிநிற்கும் சும்பனுடன் போர்புரியும் ஆற்றலுக்காய்

தான் படைத்த எண்மரையும் மீண்டும் உள்ளே சேர்த்திருந்தாள்
தனியளாக தேவியவள் சும்பனுடன் போர் செய்தாள்

கண்டவர்கள் அதிசயிக்க விண்ணவர்கள் வாழ்த்தொலிக்க
துர்க்கையவள் செய்த போரில் சும்பவதம் நிகழலாச்சு

கொடுமரக்கன் மாண்டுபட்டான் தேவி சிரம் கொய்திருந்தாள்
விண்ணவரும் மறையவரும் மண்ணவரும் வாழ்த்திநின்றார்

மூன்றாம் கதையிதுவே! முடிந்தவரை சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
*********************************************************

[தொடரும் ]

அடுத்த பதிவு

"தேவி திருக்கதை" -- 4

"தேவி திருக்கதை" -- 4


முந்தைய பதிவு

"இரண்டாம் கதை"

"மஹிஷாஸுர வதம்"


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!



மஹிஷன் என்னும் ஓர் அசுரன் மண்டலத்தை வாட்டி வந்தான்

தனக்கெனவே பல உருவம் கொண்டுவந்து பாழ்செய்தான்


அனைத்திலும் முதன்மையானது அவன்கொண்ட எருமைவடிவம்

அனைவரும் நடுங்கிடும் கொடியதோர் பேருருவம்


மனிதரையும் தேவரையும் தனதடிமையாய்க் கொண்டான்

தனை எதிர்த்த அனைவரையும் தரைமட்டம் ஆக்கிவிட்டான்


இந்திரனும் பயந்தொளிந்தான் தேவருமே மயங்கி நின்றார்

அண்டபகி ரண்டமெலாம் நடுங்கிடவே அவன் நடந்தான்


இதுவரையில் இவன்போல அசுரனிங்கு இருக்கவில்லை

எனவஞ்சி உலகோரும் நடுங்கிடவே அவன் வாழ்ந்தான்


முக்கடவுள் அடியினையே தேவருமே பணிந்து நின்றார்

அடைக்கலமே நீயென்று அவரடியில் தாள் பணிந்தார்


அசுர உடல் எருமைத்தலை குத்திவிடும் கொம்பிரண்டு

எவராலும் வெல்லவொண்ணா வரம்பெற்ற இறுமாப்பு


அதிகாரம் தலைக்கேற புரிந்திட்டான் அட்டகாசம்

மஹிஷன் பெற்ற வரமதனால் மூவருமே திகைத்திருந்தார்


தனிவரத்தின் மகிமையதால் மஹிஷனுமே பலம் பெற்றான்

இவ்வரத்தை அழித்திடவே தம்மால் முடியாதனவே


தம்முடைய சக்தியெலாம் ஒன்றாகச் சேர்த்தளித்துப்
பிரமன், திருமால் ஆதிசிவன் மூவருமே பணிந்திட்டார்


அன்னையவள் அடிபணிந்து அவரிடமே சமர்ப்பித்தார்

தானளித்த சக்தியெலாம் மீண்டுமங்கே தான்கொண்டு


சக்தியவள் கிளர்ந்தெழுந்தாள் தீதழிக்க மனம்கொண்டாள்

மஹிஷாசுர மர்த்தினியாக அவதாரம் செய்திட்டாள்


சிங்கத்தை வாகனமாய் சக்தியவள் கொண்டிருந்து

மஹிஷனுடன் போரிடவே பல கைகள் தான் சுமந்தாள்


போரினிலே வேகமதாய் பகைவனையே அழிக்கையிலே

மஹிஷனையும் கொன்றழித்து மனிதகுலம் காத்திட்டாள்


எருமைக்கிடா தலைவீழ எழுந்ததொரு தீயசக்தி

தன்பலத்தால் அதையுமழித்து தரணியதை வாழ்வித்தாள்


எருமையதன் உருத்தரித்த அசுரனையும் வதைத்திட்ட

அன்னையிவள் பெருங்கருணை சொல்லிடவும் எளிதாமோ!


'ரஜஸ்'என்னும் துர்க்குணத்தை அன்னையிவள் அழித்திட்டாள்

அனைத்துலகும் வாழ்ந்திடவே அன்னையிவள் அருள் செய்தாள்!


துர்க்கையிவள் மஹிஷாஸுர மர்த்தினியாய் வந்திட்ட

பெருமையினைப் போற்றிடுவோம்! ஜெயெஜெயெவெனப் பாடிடுவோம்!


இரண்டாம் கதையிதுவே! இன்பமுடன் சொல்லிவந்தேன்

உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


இரண்டாம் கதை முற்றிற்று.
*********************************
[தொடரும்]

அடுத்த பதிவு

Friday, October 3, 2008

"தேவி திருக்கதை" -- 3

"தேவி திருக்கதை" -- 3

முந்தைய பதிவு

" முதல் கதை"
"மது-கைடப வதம்!"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


ஆதியிலே பரந்தாமன் ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்தான்

ஆதிசேஷன் படுக்கையிலே அமைதியாகத் துயிலிருந்தான்


பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் துயிலிருந்தான்

அன்னைபரா சக்தியவள் அருட்செயலால் துயிலிருந்தான்


அகிலமெல்லாம் ஆளுபவள் ஆணையினால் துயிலிருந்தான்

அண்டமெலாம் காப்பவளின் சொல்லுக்காகத் துயிலிருந்தான்


யோகத்துயில் ஆழ்ந்தவனின் லீலைகளும் துயிலுற்றன

துயிலிருந்தவன் செவியினின்று பிறந்திட்டார் இருவரக்கர்


மது என்னும் ஓர் அரக்கன் கைடபன் என்னும் மறு அரக்கன்

திருமாலின் தன்னினின்று தோன்றியதால் கொண்டிட்டார்


தான் என்னும் அகங்காரம் தமதென்ற மமகாரம்

அகங்காரம் தலைக்கேற ஏறிட்டார் தம் பார்வை


நாபியின் கமலத்தில் தானாக முளைத்திட்ட

பிரமனின் உருமீது பட்டதவர் பார்வையங்கு


படைப்பினைப் பிறப்பிக்கப் பிரமனவன் முனைகின்ற

நேரத்தில் மதுகைடபர் தொந்தரவு செய்திட்டார்


தன்தொழிலைச் செய்யவிடாது தடுக்கின்ற அரக்கர்களைத்

தன்னால் இயன்றவரை தடுத்துக் களைத்திட்டார்


இனிமேலும் படைப்பிதனைச் செய்திடலும் ஆகாது

எனவுணர்ந்த பிரமனவன் திகைத்திட்டார் விழித்திட்டார்


நடப்பதெல்லாம் நாயகியின் லீலையெனப் புரிந்திட்ட

பிரமனவன் தேவியவள் திக்கை நோக்கித் துதித்திட்டார்


என்பணியை யான் செய்ய எனக்கிங்கே உதவிடுக

எனச்சொல்லிப் பலவாறு துதிகளினால் வேண்டிட்டார்


விஷ்ணுமாயா மனமகிழ்ந்தாள் அப்படியே எனவென்றாள்

திருமாலின் துயில்விட்டுத் தான்நீங்கிச் சென்றிட்டாள்


துயில்கலைந்த திருமாலும் தேவிதனை வணங்கிவிட்டு

தானெழும்பிச் சென்றிட்டார் அரக்கர் வதம் செய்திட்டார்


மது கைடப அரக்கருடன் ஆயிரம் ஆண்டு போர் செய்தபின்

அரக்கர்தமை அழித்திட்டார் படைப்பினையே தொடரச் செய்தார்


'தமஸ்' எனும் குணத்தை அரக்கரிவர் கொண்டதனால்

தானுமந்த குணம் கொண்டு அன்னையிவள் வதம்செய்தாள்!


முதலாம் கதையிதுவே! முழுதுமாகச் சொல்லிவந்தேன்

உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


முதலாம் கதை முற்றிற்று!
************************

[விஷ்ணுமாயை எழுப்பிய விஷ்ணுவின் தோற்றம்]

[தொடரும்]

அடுத்த பதிவு

Thursday, October 2, 2008

"தேவி திருக்கதை" -- 2

"தேவி திருக்கதை" -- 2


"கதை பிறந்த கதை!"


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


முதலாக இக்கதையை மார்க்கண்டேய மாமுனிவர்

இதைக் கேட்க ஆவலுடன் மரக்கிளையில் வந்திருந்து


பறவையென வீற்றிருந்த ஜைமினி முனிவருக்கும்

அவர்தம் சீடருக்கும் அன்புடனே சொல்லிவைத்தார்


சுரதனென்னும் ஓரரசன் தான் சுற்றம் செய்த துரோகத்தால்

நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான்


வழியிலொரு வாணிகனைக் கண்டு செல்வதெங்கே எனக்கேட்டான்

தன் மனைவி மக்களாலே தானுமிங்கே துரத்தப்பட்ட


தன்சோகக் கதையொன்றை சமாதியெனும் அவ்வணிகன்

சொன்னதனைக் கேட்ட மன்னன் ஆதரவாய் அவன் தோளில்


கைபோட்டு நடந்தபடி அடுத்தொன்று சொல்லலானான்

'இத்தனையும் எம்மக்கள் எமக்கிங்கு செய்திடினும்


இன்னுமிங்கு என் மனமும் அவர்நலனே நாடிடுதே!

ஏனென்று தெரியவில்லை! எப்படியெனப் புரியவில்லை'


அதுகேட்ட வணிகனுமே 'எனக்குமிங்கு அந்நிலையே!

எதுவென்று ஆராய என்னாலும் முடியவில்லை' என்றான்


அப்போது காட்டினிடை தவமிருந்த சுமேதசர் என்கின்ற

முனிவரைக் கண்டவுடன் 'இவரிடமே கேட்டிடுவோம்!'


எனவிருவரும் முடிவுசெய்து அவரடியைப் பணிந்தனராம்

'ஐயமொன்று ஐயனே! தீர்த்துவைக்கணும் மெய்யனே!'


என்றபடி அடிபணிந்த இருவரையும் அமரவைத்து

'கேளப்பா! இதுவெல்லாம் 'விஷ்ணுமாயை' என்னுமொரு


இறையவளின் லீலையப்பா! நடப்பதெல்லாம் மாயையென

நீயுணர வேண்டித்தான் அன்னையவள் செய்கின்றாள்!


அவளாடும் நாடகத்தை நானுரைக்கக் கேட்டிடுவாய்!

மூன்றுவகை அரக்கரையே மாயையிவள் அழித்திட்டாள்!


'ஒவ்வொன்றாய்ச் சொல்லிடுவேன்! ஒருமையுடன் கேட்டிடுக!'

எனச்சொல்லி விரிவாக திருக்கதையைத் தொடங்கலானார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! .
**********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு