"தேவி திருக்கதை!" -- 6
"கதை முடிந்த கதை!"
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
தேவிதிருக்கதையைத் தீர்க்கமுடன் சொல்லிவந்த சுமேதசரும்
மன்னனையும், வணிகனையும் வாழ்த்தியங்கு அனுப்பிவைத்தார்
திருக்கதையைச் செவிமடுத்த இருவருமே மனமுணர்ந்து
விஷ்ணுமாயை என்னுமிந்த அன்னையவள் தனைஎண்ணி
கண்மூடித் தியானித்து பலகாலம் தவமிருந்தார்
அன்னையவள் மனமிரங்கி அவர்முன்னே தோன்றிநின்று,
அவர் வேண்டும் வரமெல்லாம் அளித்தருளி மேலும் சொன்னாள்:
"என் கதையை எவரொருவர் பக்தியுடன் படிப்பவரோ
படிப்பவரைக் கேட்டவரோ, மனமொன்றி எனை நினைந்தால்
அவர்வேண்டும் வரம் யாவும் நானவர்க்கு வழங்கிடுவேன்
இகலோக, பரலோக இன்பமெல்லாம் யானளித்து நற்கதியும் நான் தருவேன் !"
என்றுரைத்து மறைந்திட்டாள் சர்வலோக ஜெகன்மாதா!
சகலருக்கும் வாழ்வளிக்கும் தேவி விஜயலக்ஷ்மி !
துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக தேவியிவள்
செய்திட்ட அற்புதத்தை இதுவரையில் பாடிவந்தேன்.
படித்தவரும் கேட்டவரும் இகத்தினிலும் பரத்தினிலும்
பாக்கியத்தைத் தானடைந்து பேரின்பம் பெற்றிடுவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
**************************************************
[தொடரும்]
[தொடரும்]
No comments:
Post a Comment