Sunday, October 5, 2008

"தேவி திருக்கதை" -- 5

"தேவி திருக்கதை" -- 5



முந்தைய பதிவு


"மூன்றாம் கதை"
"சும்ப-நிசும்ப வதம்"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


மூன்றாம் முறையாக அன்னையிவள் செய்திட்ட
அற்புதத்தைப் பாடிடுவோம் அவள் பெருமை கூறிடுவோம்

சண்ட முண்டன் எனுமரக்கர் பூதலத்தில் வாழ்ந்திருந்து
கொடுஞ்செயல்கள் செய்துவந்து விண்ணவரை வருத்தினரே

அவர்கொடுமை தாங்காது அலறிட்ட வானவரும்
உமையன்னை பதம் நாடி மலையெங்கும் தேடினரே

இமயத்துமலைகளிலே அலைந்திருந்த உமையன்னை
இவர்பாட்டைக் கேட்டதுமே அடக்கவொண்ணா சீற்றமுற்றாள்

குண்டலினியின் கண்ணினின்று புறப்பட்ட அன்னைசக்தி
காளியென்னும் கோரவுரு கொண்டங்கு வெளிவந்து

சண்ட முண்ட அரக்கர்களை அடியோடு சாய்த்துவிட்டு
அசுரர்களின் சிரம்கொய்து பீறிட்ட உதிரம் குடித்து,

சண்ட முண்ட அரக்கர்களின் தலைகொண்டு தேவியவள்
காலடியில் சமர்ப்பித்து சாமுண்டா எனும் பெயர் பெற்றாள்

இத்தோடு நில்லாது தொடர்ந்திருந்த போரினிலே
ரக்தபீஜன் எனுமரக்கன் மூர்க்கமாகச் சண்டையிட்டான்

இவன்பெற்ற பெருவரமோ எவரையுமே வியப்பிலாழ்த்தும்
தன்னுதிரம் ஒரு துளியும் பூமியிலே விழுமாயின்

அவற்றினின்று மற்றுமொரு ரக்தபீஜன் தோன்றிடுவான்
எனும்வரத்தைப் பெற்றதனால் தனைவெல்ல யாருமில்லை

என்கின்ற தலைக்கனத்தில் தாறுமாறாய்ச் சண்டையிட்டான்
கொடுமையான அரக்கனிவனை வெல்லும்வழி யாதெனவே

தேவியவள் சிந்தித்தாள் காளியெனச் சண்டையிட்டாள்
அகலமான வாயினிலே தொங்குகின்ற நாக்குடனே

அசுரனிவன் மார்பிளந்து உதிரமொரு துளியேனும்
நிலத்தடியில் வீழாமல் நாவெடுத்துக் குடித்திட்டாள்

பிறவரக்கர் தோன்றுவதை தன்மதியால் தடுத்திட்டாள்
ரக்தபீஜ அரக்கனவன் கொடுஞ்செயலை முறித்திட்டாள்

இவருக்கெல்லாம் அரசனான அண்ணன்தம்பி இருவருண்டு
சும்பன் எனும் ஒருவரக்கன் நிசும்பன் எனும் அவன் தம்பி

இருவருமே இப்போது அன்னையெதிர் தோன்றிட்டார்
நீண்டதொரு போர் நிகழ்த்த அன்னையவள் உளம் கொண்டாள்

தன்சக்தி அனைத்தையுமே பலமடங்காய்ப் பெருக்கியவள்
தனக்குதவி செய்யவென எட்டு சக்தி படைத்திட்டார்

நாராஷ்மி,வைஷ்ணவி,குமாரி, ப்ராஹ்மி, வராஹி, ஐந்த்ரீ
சாமுண்டா எனும் காளி, அம்பிகா
என்பதுவே அவர் பெயராம்

மாத்ரிகையர் எண்மருடன் தேவியவள் புடைசூழ
போர்க்களத்தில் நிசும்பனுடன் கோரமான போர்புரிய


பலகாலம் போர்புரிந்து நிசும்பனுமே மாண்டொழிந்தான்
எஞ்சிநிற்கும் சும்பனுடன் போர்புரியும் ஆற்றலுக்காய்

தான் படைத்த எண்மரையும் மீண்டும் உள்ளே சேர்த்திருந்தாள்
தனியளாக தேவியவள் சும்பனுடன் போர் செய்தாள்

கண்டவர்கள் அதிசயிக்க விண்ணவர்கள் வாழ்த்தொலிக்க
துர்க்கையவள் செய்த போரில் சும்பவதம் நிகழலாச்சு

கொடுமரக்கன் மாண்டுபட்டான் தேவி சிரம் கொய்திருந்தாள்
விண்ணவரும் மறையவரும் மண்ணவரும் வாழ்த்திநின்றார்

மூன்றாம் கதையிதுவே! முடிந்தவரை சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
*********************************************************

[தொடரும் ]

அடுத்த பதிவு

2 comments:

  1. இங்கும் தமோ, ரஜோ குணம் பற்றி சொல்லி இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஏமாற்றம் தான் !
    :(

    ReplyDelete
  2. என்னங்க பண்றது? சொல்லியிருப்பதைத் தான் சொல்ல முடியும்! இனி அடுத்து வரும் விளக்கங்களில் ஏதேனும் ஏமாற்றம் தீர்ந்து தெளிவு கிடைக்க அந்த தேவியை வேண்டுகிறேன்.

    ReplyDelete