Sunday, October 5, 2008

"தேவி திருக்கதை" -- 4

"தேவி திருக்கதை" -- 4


முந்தைய பதிவு

"இரண்டாம் கதை"

"மஹிஷாஸுர வதம்"


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!



மஹிஷன் என்னும் ஓர் அசுரன் மண்டலத்தை வாட்டி வந்தான்

தனக்கெனவே பல உருவம் கொண்டுவந்து பாழ்செய்தான்


அனைத்திலும் முதன்மையானது அவன்கொண்ட எருமைவடிவம்

அனைவரும் நடுங்கிடும் கொடியதோர் பேருருவம்


மனிதரையும் தேவரையும் தனதடிமையாய்க் கொண்டான்

தனை எதிர்த்த அனைவரையும் தரைமட்டம் ஆக்கிவிட்டான்


இந்திரனும் பயந்தொளிந்தான் தேவருமே மயங்கி நின்றார்

அண்டபகி ரண்டமெலாம் நடுங்கிடவே அவன் நடந்தான்


இதுவரையில் இவன்போல அசுரனிங்கு இருக்கவில்லை

எனவஞ்சி உலகோரும் நடுங்கிடவே அவன் வாழ்ந்தான்


முக்கடவுள் அடியினையே தேவருமே பணிந்து நின்றார்

அடைக்கலமே நீயென்று அவரடியில் தாள் பணிந்தார்


அசுர உடல் எருமைத்தலை குத்திவிடும் கொம்பிரண்டு

எவராலும் வெல்லவொண்ணா வரம்பெற்ற இறுமாப்பு


அதிகாரம் தலைக்கேற புரிந்திட்டான் அட்டகாசம்

மஹிஷன் பெற்ற வரமதனால் மூவருமே திகைத்திருந்தார்


தனிவரத்தின் மகிமையதால் மஹிஷனுமே பலம் பெற்றான்

இவ்வரத்தை அழித்திடவே தம்மால் முடியாதனவே


தம்முடைய சக்தியெலாம் ஒன்றாகச் சேர்த்தளித்துப்
பிரமன், திருமால் ஆதிசிவன் மூவருமே பணிந்திட்டார்


அன்னையவள் அடிபணிந்து அவரிடமே சமர்ப்பித்தார்

தானளித்த சக்தியெலாம் மீண்டுமங்கே தான்கொண்டு


சக்தியவள் கிளர்ந்தெழுந்தாள் தீதழிக்க மனம்கொண்டாள்

மஹிஷாசுர மர்த்தினியாக அவதாரம் செய்திட்டாள்


சிங்கத்தை வாகனமாய் சக்தியவள் கொண்டிருந்து

மஹிஷனுடன் போரிடவே பல கைகள் தான் சுமந்தாள்


போரினிலே வேகமதாய் பகைவனையே அழிக்கையிலே

மஹிஷனையும் கொன்றழித்து மனிதகுலம் காத்திட்டாள்


எருமைக்கிடா தலைவீழ எழுந்ததொரு தீயசக்தி

தன்பலத்தால் அதையுமழித்து தரணியதை வாழ்வித்தாள்


எருமையதன் உருத்தரித்த அசுரனையும் வதைத்திட்ட

அன்னையிவள் பெருங்கருணை சொல்லிடவும் எளிதாமோ!


'ரஜஸ்'என்னும் துர்க்குணத்தை அன்னையிவள் அழித்திட்டாள்

அனைத்துலகும் வாழ்ந்திடவே அன்னையிவள் அருள் செய்தாள்!


துர்க்கையிவள் மஹிஷாஸுர மர்த்தினியாய் வந்திட்ட

பெருமையினைப் போற்றிடுவோம்! ஜெயெஜெயெவெனப் பாடிடுவோம்!


இரண்டாம் கதையிதுவே! இன்பமுடன் சொல்லிவந்தேன்

உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


இரண்டாம் கதை முற்றிற்று.
*********************************
[தொடரும்]

அடுத்த பதிவு

2 comments:

  1. எருமை மகிஷன் என்னும் அசுரன் தான் 'ரஜஸ்'என்னும் துர்க்குணமா ?

    அல்லது மகிஷன் என்னும் அசுரன் உண்மையில்யே இருந்தானா ?

    ReplyDelete
  2. புராணங்களில் சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாம் நடந்ததாக நம்புகிறோம்.

    நடந்ததா எனக் கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

    அவர்களுக்காக, இந்தக் கதைகள் சொல்வது என்ன எனவும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

    நிகழ்வை உணர்ந்து, அது சொல்லும் கருத்தையோ,
    அல்லது,
    நிகழ்வை நம்பவில்லை எனினும், அது சொல்லும் கருத்தையோ
    உணர்வது சிறந்த வழி.

    வெறும் கேள்வியோடு நிறுத்திவிட்டுச் செல்பவரும் இருக்கிறார்கள்!

    கதை சொல்லும் கதை என இப்பதிவின் இறுதியில் கொடுக்க எண்ணியிருக்க்கிறேன் கோவியாரே!
    நன்றி.

    ReplyDelete