Friday, October 10, 2008

"தேவி திருக்கதை" -- 10

"தேவி திருக்கதை" -- 10
"கதை சொல்லும் கதை"
முடிந்தால் முந்தைய இரு பதிவுகளையும் படித்துவிட்டு இங்கு வந்து படியுங்கள்!"

இதென்ன புதுக்கதை?

ஏதோ ஒரு கதையைச் சொன்னீங்க .. சரி!
அதுக்குள்ளே சில செய்திகள் இருக்குன்னு சொன்னீங்க.. அதுவும் சரி!
இப்ப தோத்திர வரிகளே மந்திரங்கள்னு சொல்றீங்களே!
அது எப்படீன்னு கேக்கறீங்கதானே!


இது நான் சொல்வதல்ல!
இதை நன்கு கற்றுணர்ந்து, பயின்று, அனுபவித்த ஆன்றோர்கள் சொன்னதைத்தான் இங்கே தொகுத்தளிக்கிறேன் என முதலிலேயே சொல்லியிருக்கிறேன்.
அதைத்தான் இங்கு உங்களுக்கும் சொல்கிறேன்.

தேவி மஹாத்மியம் என்னும்புனித நூலின் ஒவ்வொரு ஸ்லோகமுமே மந்திர அர்த்தங்கள் நிறைந்த ஒன்று.

மாதிரிக்கு ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் காட்டுகிறேன்.
ஆனால், இது உங்களில் யாரையாவது உலுக்கினால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேர்ந்த சக்தி உபாசகரை நாடி, அக்கறையுடனும், ஆர்வத்துடனும் கேட்டுத் தெரிந்து கொள்ளணும்.


வெறும் புத்தக அறிவுக்காக மட்டும் இதைத் தேடவோ, நாடவோ வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு தொடர்கிறேன்.

தேவி மஹாத்மியத்தின் முதல் ஸ்லோகம் இப்படி வருகிறது.

Markandeya Uvacha:
Savarni Surya thanayo yo Manu Kadyatheshtama,
Nisamaya Thad uthpathim vistharath gadatho mama., 1


Makandeya told: - Please hear from me about the origin of Savarni who is the son of Sun god and the eighth Manu in detail. (There were fourteen Manus who ruled the world. The seven before Savarni were Swayambhuva, Swarochisha, Uthama, Thapasa, Raivatha, Chakshusha and Vaiwaswatha. Markandeya was the son of Sage Mrukandu and was telling this story to another sage called Bagoori. Some versions have two additional slokas regarding the announcement of Sage Sootha that Jaimini the disciple of Vyasa approached Sage Markandeya and requested him to tell the story of Devi Mahatmya)

மார்க்கண்டேய உவாச:

ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம:
நிசாமய ததுத்பத்திம் விஸ்தராத் கததோ மம


இதன் நேரடிப் பொருள் பின்வருமாறு:


"மார்க்கண்டேயர் சொன்னார்:
சூரியக் கடவுளின் புத்திரனும், எட்டாவது மனுவுமாகிய ஸாவர்ணி என்கிறவரின் வரலாறை நான் விவரமாகச் சொல்லுவதைக் கேள்."


இப்போது இதன் மந்திர விளக்கத்தைப் பார்ப்போம்!

சூரியன் என்பது ஒரு நெருப்புக் கோளம்.
'ஸூர்ய தனயன்' என்றால் சூரியனின் மகன் அல்லது சூரியனிலிருந்து பிறந்தது எனப் பொருள்.

சூரியனில் இருந்து என்ன பிறக்கிறது?
'ர' என்னும் விதை, பீஜம் அக்னியில் இருந்து பிறக்கிறது.

தந்திர சாஸ்த்திரங்களின் கருத்துப்படி, 'ராம்' என்ற சொல் அக்னியின் பீஜ மந்திரம்.

'ஸா வர்ணி' என்பதில், 'வர்ணி' என்றால் ஒரு கொக்கி.
இப்போது 'ராம்' எனும் பீஜமந்திரத்தில் ஒரு கொக்கி சேர்ப்போம்.
'ராம்' இப்போது 'ரீம்' ஆகிறது.

'யோ மனு: கத்யதே அஷ்டம:' = எட்டாவது எழுத்து.
எதனுடைய எட்டாவது எழுத்து?
'மனு' என்பது ஒரு வடமொழிச் சொல் [ஸம்ஸ்கிருதச் சொல்]
ஸம்ஸ்கிருதத்தில் எட்டு எழுத்துகள் எவை?
'ய, ர, ல, வ, ஸ்ய, ஷ, ஸ, ஹ'
இதில் எட்டாவது எழுத்து?
'ஹ'

இப்போது இந்த வரி இதுவரை சொன்னது என்ன?
'ஹ' ''ராம்' என்னும் இரு எழுத்துகளுடன் தலா ஒரு கொக்கி போட்டுக்கொள் என்!
'ஹ', ''ராம்''+ கொக்கி= 'ஹ்ரீம்' என ஆகிறது!

'நிசாமய ததுத்பத்திம்'= இதன் பெருமையைக் கேள்!

'விஸ்தராத் கததோ மம' = விவரமாக நான் உரைப்பதை

'ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம: நிசாமய ததுத்பத்திம்' = 'ஹ்ரீம்' என்னும் சொல்லின் பெருமையை நான் விவரமாக இப்போது சொல்வதைக் கேள்!

'ஹ்ரீம்' என்பது தேவியின் பீஜம்.

மேலெழுந்தவாரியாக வேறு பொருள் சொன்னாலும், இந்த ஸ்லோகம் சொல்லும் மந்திரப் பொருள் இதுதான்!

இது போலவே அனைத்து மந்திரங்களும் ஒவ்வொரு மறைபொருளைச் சொல்கிறது என கற்றுணர்ந்த ஆன்றோர் சொல்லுவர்.

ஒவ்வொரு செயலுக்கும் தேவையான மந்திரங்களைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து பயன் பெற்றவர் அநேகம்.

எந்தவொரு மனவேதனையின் போதும், அல்லது நாட்டு நடப்புகள் மனம் வருத்தச் செய்யும் போதும் இதனைப் பாராயணம் செய்வது பலனளிக்கும் என்பது அறிந்தவர் சொல்லும் உண்மை!

இந்த உண்மைகளை உள்வாங்கி உலகம் உய்ய நாமும் உய்ய வேண்டும் என இடைவிடாது இந்த புண்ணிய நூலைப் பாராயணம் செய்து அனைத்துயிரும் உய்ய அன்னையை வேண்டி, இந்த விளக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் தவறே எனச் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் தேவி நலம் சூழ்க எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.


"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

Thursday, October 9, 2008

"தேவி திருக்கதை" -- 9

"தேவி திருக்கதை" -- 9


"கதை சொல்லும் கதை" -- [தொடர்ச்சி]
முடிந்தால் முந்தையப் பதிவையும் சேர்த்துப் படியுங்கள்!

மூன்றாம் நிலை:

அனைத்துக்கும் உயரிய சக்தியான, அறிவுக்கடவுள் மஹா சரஸ்வதி வந்துதான் நல்லறிவு என்னும் பேரொளியால், இந்த அறியாமை என்னும் மாயையை வெல்லவேண்டும்.


அவளை வேண்டித் துதிக்க வேண்டும்!
அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமும் அல்ல.
முதலில் சொன்ன இரு வழிகளையும்.... விடாமுயற்சி, உபாசனை.... விடாமல் இன்னும் தீவிரமாகப் பயின்று அவளைத் தேட வேண்டும்.
தேடினால் கிடைப்பாள்!



இந்தத் தேடலுக்கும், முதல் இருநிலைத் தேடல்களுக்கும் ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது!


முதல் இரு நிலைகளில் [தமஸ், ரஜஸ்] சாதகன் தனக்காகத்தான் தேடி நின்றான்.
இப்போது ஸத்வ குணம் உள்ளோங்கி நிற்கும் வேளையில், தான் இதில் தனியன் அல்லன்; தன்னுடன் இந்தப் பிரபஞ்சமே இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்த சாதகன் இப்போது அகில உலக நலனுக்காகவும் இதைத் தேடுகிறான்!



எப்படி ஒரே நூலால் இழைக்கப்பட்ட ஆடை இருக்கிறதோ அது போல நாம் எல்லாருமே ஒரே நூலால் பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணரும் சாதகன், தன் அடையாளத்தைத் துறக்கிறான்.



அதனால்தான் யோகிகள் இந்த உலகத்தையே தமதெனக் கருதி அன்பு செலுத்துகிறார்கள்!


இறையை எதிரில் காணும் சாதகன் அந்த இறையில் இந்த அண்டத்தையே பார்க்கிறான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனம் இதுதான்!



இறை என்பவன் எங்கோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து நின்று அருள் செய்கிறான் என்னும் மாயை அகன்று, அவன் எங்கும், எல்லா உயிர்களிலும், இடங்களிலும் வியாபித்து நிறைகிறான்; அவன் இல்லாத இடமே இல்லை என்னும் பேருண்மை இப்போது அவனுக்குப் புலப்படுகிறது!



வெல்வது... விடுதலை பெறுவது எளிதாகிறது!



தன் அனைத்து சக்திகளையும் வெளிக் கொணர்ந்து 8 மாத்ரிகையர் துணையுடன் நிசும்பனை வென்ற அன்னை, பிறகு, அதே சக்திகளை தனக்குள்ளே இழுத்துக் கொண்டு தனியளாய் சும்பனை வெல்கிறாள்!


சாதகனும் இதை உணரத் தொடங்கி, தன் சக்திகள் மூலம், சில காட்சிகளை, நிகழ்வுகளை நிகழ்த்தி, பிறகு அத்தனை சக்திகளையும் தனக்குள் உள்வாங்கி, தன்னையே வெல்கிறான்!
இனி, இவன் செய்யும் அனைத்துச் செயல்களும் இறைக்கே அர்ப்பணிக்கப் படுகின்றன.
இதுதான் சும்ப- நிசும்ப வதம்!!! …

யோகவழியில் இதனை உணரும் சாதகன், தனது தமஸ், ரஜஸ், ஸத்வம் என்னும் மூன்று குணங்களையும் துறந்து இறையை உணர்ந்து அண்டத்துடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதே தேவி மஹாத்மியம் சொல்லும் கருத்து!



அநேகமாக எல்லாப் புராணங்களுமே இந்த அடிப்படைத் தத்துவத்தை ஒட்டியே அமைகின்றன என்றால் மிகையில்லை.


தன்னை உணர்ந்தவன், நிகழும் எல்லாச் செயல்களிலும் இறையைக் காண்கிறான்.
எந்தவொரு அற்பச் செயலும் அற்பமில்லை; ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது எனும் உண்மையைப் புரிந்து கொள்கிறான்.
தடை எனப் பொதுவாக நாம் எல்லாரும் கருதும் நிகழ்வுகள் அவனை வருத்துவதில்லை.
மாறாக அதையும் இறையின் ஒரு லீலையாகவே கொண்டு அவற்றைக் கண்டு அஞ்சாது முன்னோக்கி நடக்கிறான்.



வழிப்பயணம் செல்கையில் பாதை தவறிய பயணி, 'அடடா! தொலைந்து விட்டோமே!' என அஞ்சுவது போல் இவன் அஞ்சுவதில்லை.
தலையை உயர்த்திப் பார்க்கிறான்.
மேலே தெரியும் ஆகாயமும், சூரியனும், வீசும் காற்றும் இவனுக்கு நாம் இங்கு தொலையவில்லை; நாம் தனியாள் இல்லை எனப் புரிய, ஒரு புதுத் தெம்புடன் முன்னோக்கிச் செல்கிறான்.
இயற்கை என்னும் இறைசக்தியிடம் இருந்து தான் பிரியாமல் இணைந்தே இருக்கிறோம் என்னும் உண்மை அளித்த பலத்தில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.



மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களை வணங்கி, வழிபட்டு, இவர்கள் மூலம் ஆதி சக்தியுடன் தான் ஒன்றுவதை உணரும் பயிற்சியே ஒவ்வொரு சாதகனும் செய்ய முயல்வது.
முதல் நிலையில், தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் மலங்களை அகற்ற கடினமான பயிற்சிமுறைகளைச் செய்கிறான்.
மஹா காளி உபாசனை மூலம், தன்னைப் பிணைத்திருக்கும் தடைகளை உடைத்தெறிகிறான்.



இதன் மூலம் ஒரு நல்வாழ்வு தனக்கு வருவதை உணர்கிறான். எல்லா சக்திகளையும் அடக்கித் தன் கைக்குள் கொண்டு வந்து, தனக்கு வேண்டிய எதையும் பெறக்கூடிய சக்திகளை அடைகிறான்.


மலங்களின் ஆளுமையால், தான் ஒரு கைதியாகவும், பலமற்றவனாகவும் உணர்ந்த இவன், இப்போது அந்த 'தமஸ்' என்னும் சோம்பலை வெற்றி கொண்டு பெருமை பெறுகிறான்.



ஒரு சொடக்கில் தான் விரும்பும் அனைத்தையும் பெறக் கூடிய வல்லமை மஹா லக்ஷ்மியின் அருளால் இவனுக்குக் கிட்டுகிறது.
முதல் நிலையில் நரகமெனத் தெரிந்த உலகம் இப்போட்து சொர்க்கமாகத் தெரியத் தொடங்குகிறது இவனுக்கு!
இதனை கொஞ்ச காலம் அனுபவித்த இவனுக்கு, சொர்க்கம் அல்ல தான் வேண்டுவது எனப் புரியத் துவங்குகிறது!
'பேருண்மை' என்னும் உயரிய நிலை தனக்குக் கைவர வேண்டும் எனப் புரிகிறது... தொடர்ந்து பயிற்சி செய்பவனுக்கு!



ஆம்! உண்மையில், சில சாதகர்கள் இரண்டாம் நிலையிலேயே தமது தேடலை நிறுத்திவிட்டு, இயல் வாழ்க்கையில் பயணம் செய்யும் காட்சியும் நாம் இங்கு பார்க்கிறோம்!
ஆனால், உண்மையான சாதகன் தன் இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தை விடாது தொடர்கிறான்.



பேருண்மை புலப்பட மாயை அகல வேண்டும் எனத் தெளிகிறான்.
மஹா சரஸ்வதியைத் தேடி அலைந்து, அவளைத் துதித்து இந்தத் தடையையும் அகற்றி, உண்மையான விடுதலை என்பது என்ன எனப் புரிகிறான்.
நிகழும் அனைத்தையும் அப்படியே பார்க்கக் கற்றுக் கொள்கிறான்.
இன்பம், துன்பம், வளமை, செல்வம் என ஒன்றும் இல்லை என்பதை நன்கு உணர்கிறான்.
எல்லாம் இழந்த அநுபூதி நிலையில், இந்த உண்மையுடன் தான் எப்போதுமே பிணைக்கப்பட்டிருந்தோம்; பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புரிந்த 'தன்நிலை' அறிகிறான்.



இந்த உண்மையைச் சொல்வதுதான் மந்திரங்களை உள்ளடக்கிய தேவி மஹாத்மியம் விழைபவர்க்குச் சொல்வது! !!


இதென்ன புதுக்கதை?
**************

[நாளை நிறைவுறும்!]

Wednesday, October 8, 2008

"தேவி திருக்கதை" -- 8

"தேவி திருக்கதை" -- 8


முதல் கதையின் கருத்து:

மது-கைடப வதம்:

திருமாலின் காது அழுக்கிலிருந்து மது, கைடபர் என்னும் அரக்கர் தோன்றியதாகக் கதை சொல்லுகிறது.

நம்மில் இருக்கும் அழுக்குகளிலேயே மோசமான மலங்கள் காமம், குரோதம் லோபம் என்னும் மும்மலங்களே!

ஆசை, கோபம், சிறுமை இவை மூன்றும் ரஜஸ் என்னும் குணத்தின் வெளிப்பாடுகள். தவறுகள் செய்யத் தூண்டி நம்மைப் பாவக்குழிக்கு அழைத்துச் செல்லும் இவை மூன்றும்!

இந்த மூன்றும் ஆத்மா என்னும் ஒரு மெல்லிய கண்ணாடியின் மேல் பலமாக தங்களைத் தீட்டிக் கொண்டு விடுகின்றன.

தானறிந்த பரம்பொருளை மீண்டும் காணமுடியா வண்ணம் இவற்றால் இப்போது ஆன்மா மறைக்கப் பட்டு விடுகிறது.
இதை அகற்றுவதே சாதகன் செய்ய வேண்டிய முதல் வேலை.
கடினமான பயிற்சி தேவை இதற்கு. இடையில் நிகழும் பல கடுமையான சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிவரும்.
திட மனதுடன் முயன்றால் குருவருளால் இது சித்திக்கும்.

நம்மிடம் இருக்கும் சோம்பலைத் துறந்து,'எழுமின்; விழிமின்' என விவேகனந்தர் சொன்ன மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்தல் விஷ்ணுமாயை அருள் செய்து நம்மை இந்த மது-கைடபர்களை அழிக்கத் துணை புரிவாள்.

இரண்டாம் கதை:

மஹிஸாஸுர, சண்ட முண்ட, ரக்த பீஜ வதம்:

மேலே சொன்ன மூன்று மலங்களையாவது நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனல், கண்ணுக்குத் தெரியாமல் நம்மிடம் இருக்கும் மலங்கள் தாம் மிகவும் மோசமானவை!

சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பான், ஆசை காட்டி மோசம் செய்பவன், வலிக்காமல் அடிப்பவன், வணங்கிக் கொண்டே கத்தியால் [ இந்தக் காலத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு] குத்துபவன் என இப்படி எத்தனையோ விதங்களில் இது வெளிப்படும். கிட்டத்தட்ட இப்போது நிகழ்கின்ற தீவிரவாதத்துடன் ஒப்பிடலாம்.

தம் நிறங்களையும் குணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள்!
யாரெனத் தெரிந்தால் தானே அழிக்க முடியும்?
தன்னிடம் இதெல்லாம் இருப்பதையே உணராமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும்.

மகிஷனும் இதைத்தான் செய்கிறான்!

எருமை வடிவில் வருவான்; திடீரென யானை வடிவில்; தேவி அவனை அழிக்க முற்படுகையில், உருமாறி ஒரு காளை வடிவில் என!

இப்படித்தான் நமகு கண்ணுக்குத் தெரியாதா ஆசைகளும் நம்மை அலைக்கழிக்கின்றன.

இதை விக்ஷேப சக்தி எனச் சொல்வர்கள். அலைக்கழிக்கும் ஆசைகள் எனப் பொருள் சொல்லலாம்.

சண்ட முண்டாசுரர்கள் கதையும் இது போலவே!
இடையில் வரும் எண்ணற்ற ஆசைகளின் வடிவங்கள்!

ரக்தபீஜன் நிலை இன்னும் மோசம்!
இவனது ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான ரக்தபீஜர்கள் தோன்றுவார்கள்!

இப்படித்தான், ஒரு ஆசையில் இருந்து பலவித தீய எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி முடிவே இல்லாமல் நம்மை இங்கும் அங்குமாய்ப் புரட்டி அடிக்கும். இதன் சுழலில் ஆட்பட்டு, சாதகன் திணறும் நிலை!

இதையெல்லாம் வெல்ல என்ன வழி!?

நம்மால் மட்டுமே முடியக் கூடிய செயல் அல்ல இது!

நீயே கதி என அன்னையின் பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறுவதுதான் ஒரே வழி!

அம்மா! என்னைக் காப்பாற்று என அலற வேண்டும்!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கணும்!
'உனக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோர்' எனக் கத்தணும்!
நின்னைச் சரணடைந்தேன் என அழணும்!

அபயக்குரல் கேட்டு, அன்னை ஓடி வருவாள்!
அண்டியவரைக் காப்பாள்!

கர்ம யோகத்தினால் மட்டுமே மும்மலங்களையும் அழித்த நாம் இப்போது பக்தி யோகத்தின் மூலம் அவளைச் சரணடைந்து அவளை உபாசனை செய்தால், இந்தத் தீய எண்ணங்களும் நம்மை விட்டு அகலும்.
தமஸை அழித்து, ரஜஸைக் கொன்று அடுத்த நிலைக்குச் செல்லமுடியும் சாதகனால்!

மூன்றாம் நிலை:
சும்ப-நிசும்ப வதம்


தமஸ்,[ஆணவம்] ரஜஸ் [கன்மம்] என்னும் இரு குணங்களையும்,[மலங்களையும்] கர்மயோகம், பக்தி யோகத்தின் மூலம் முறியடித்த சாதகன் இப்போது அமைதியாக ஸத்வ குணத்தில் திளைக்கிறான்.
மூன்று குணங்களிலுமே, இது ஒரு உயரிய நிலை எனப் பொதுவாகச் சொல்வதுண்டு.

ஆனால், இதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது!

ஆன்மா என்னும் கண்ணாடியை மறைத்த மலங்களையெல்லாம் தன்னுடைய சாதனையாலும், தெய்வ அருளாலும் விலக்கிய சாதகன் இப்போது ஒரு தெளிந்த கண்ணாடியாகத் திகழ்கிறான்.

தனக்கு எதிரே தெரிகின்ற பரம்பொருளின் வெளிச்சத்தைக் கூடப் பார்க்க முடிகிறது இவனால்!

ஆனால், என்ன பிரயோஜனம்?

இவன் இந்தப் பக்கத்தில் அன்றோ நிற்கிறான்.
கண்ணுக்கு எதிரே ஒரு நல்ல மாம்பழம் தெரிகிறது; அதை ஒரு கண்ணாடி மறைக்கிறது!
மாம்பழத்தைப் பெற இவன் இப்போது இந்தக் க்ண்ணாடியையும் உடைக்க வேண்டும்!

இத்தனை தடைகளைத் தாண்டி வந்து விட்டோமே என்னும் பெருமிதம் உள்ளில் எழ, எதிரில் தெரியும் பரம்பொருளைக் கண்ட திருப்தியில், இடையில் ஒரு கண்ணாடி தடுக்கிறது என்பதை அறியவிடாமல் மாயை தடுக்கும் இப்போது!

அண்ட சராசரத்தையும் அடக்கிவிட்டோம் என்கிற பெருமிதமும், தன்னை ஆட்கொள்ள அன்னையே எதிரில் நிற்கிறாள் எனப் புரியாமல் அவளையே சண்டைக்கு அழைக்கின்ற அறியாமையும் மாயை வடிவில் மறைத்த கதைதான் சும்ப நிசும்பர் கதை!

இந்த மாயையை எங்ஙனம் வெல்வது?
கல்விக் கடவுள் மஹா சரஸ்வதி இப்போது உதவிக்கு வருகிறாள்!
*****************************************************************************************
[தொடரும்]

Tuesday, October 7, 2008

மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள்?

சரஸ்வதி-ன்னா என்னாங்க பொருள்? ஏன் அவள் கல்விக் கடவுள்? தேவி நவராத்திரி-ன்னு பொதுவாச் சொன்னாலும், பார்வதி பூஜை, இலக்குமி பூஜை என்றெல்லாம் சொல்லாது, அது என்ன இவளுக்கு மட்டும் தனியாகச் சரஸ்வதி பூஜை?

அதற்கு முன்பு, அனைத்து அன்பர்களுக்கும் இனிய சரஸ்வதி பூசை, விஜயதசமி, நவராத்திரி வாழ்த்துக்கள்.
சுசீல்லாம்மா குரலே ஒரு மோகன ராகம். அவங்களே மோகன ராகத்தில் பாடினால்? அந்தப் பாட்டில் இருந்து தொடங்குவோம்.

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி அருமையான வீணை இசைப்பாடல்! கலைமாமணி K.சோமு எழுதி, இசையமைத்து, சுசீலாம்மா பாடியது!
அருள்வாய் நீ, இசை தர வா நீ, வா நீ, வாணீ, கலை வாணி என்று நல்ல சொற்கள் அருவி போல் வந்து விழும் சுகம்.
இதோ கேட்டு மகிழுங்கள்!



மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்


அருள்வாய் நீ
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ
லயம் தரும் வேணி - அம்மா
(மாணிக்க)

நா மணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

(மாணிக்க)

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளம் இல்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே

வாணி சரஸ்வதி மாதவி பார்கவி
வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கு இனிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி


அருள்வாய் நீ
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ
லயம் தரும் வேணி - அம்மா
(மாணிக்க)

வீணை இசையில் மாணிக்க வீணை:


மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன? பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :)

"தேவி திருக்கதை" -- 7

"தேவி திருக்கதை" -- 7



"கதை சொல்லும் கதை"


இதுவரையில் மேலெழுந்தவாரியாக "தேவி மஹாத்மியம்" என்னும் அரிய நூல் சொன்ன கதையைப் பார்த்தோம். இதை இப்படியே படிப்பதும் கேட்டதும் மட்டுமே கூட அநேக விசேஷ பலன்களைக் கொடுக்க வல்லது.
இருந்தாலும் இக்கதையின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் பொருள் என்ன?

எதைச் சொல்லவென இக்கதை சொல்லப்பட்டது?


வெறும் சிலா அசுரர்களை தேவி எப்படி அழித்துக் கொன்றாள் என்பதையா?

இதையெல்லாம் அறிய, கற்றுத் தேர்ந்த பெரியவர்கள் சொல்லுவது போல, ஒரு தகுந்த குருவின் வழிகாட்டலுடனானத் தேடலும், பயிற்சியும் செய்ய வேண்டும்.

இந்த அற்புதமான கதை சொல்லும் உட்பொருளைப் பெரியவர்கள் சொன்ன வண்ணம் இங்கே அளிக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஆன்றோர், அறிந்தோர் சொல்லிச் சென்றது. என் பணி தொகுத்து அளிப்பது மட்டுமே! அவர்களுக்கெல்லாம் வணக்கம் சொல்லி உரைநடையாகவே இதனைத் தொடங்குகிறேன்!


"மனித வாழ்வின் நோக்கமே ஒரு தேடலை நோக்கித்தான்! சில சமயங்களில் அது அன்றாடத் தேவைகளுக்காகவும், கிட்டாத எட்டாப் பொருள்களுக்காகவும், இருந்தாலும், இவையேல்லாம் கூட ஒரு விடுதலையை நோக்கித்தான் எனப் புரியும். இன்றையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை, நாளையத் தேவைகளை அடைய விரும்பும் விடுதலை என இதை வகைப் படுத்தலாம்.

இந்த விடுதலை வேட்கை என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் புலப்படும் உண்மை இதுதான்..... இது ஆத்மாவின் தேடல்!

ஆச்சரியமாக இருக்கலாம் இந்த உண்மை!

ஆத்மாவுக்கு பிறப்பிலிருந்து விடுதலை எனத்தானே படித்திருக்கிறோம். அது ஏன் இதையெல்லாம் விரும்புகிறது என!

ஆனால், கற்றுத் தெளிந்தவர் சொல்வது என்னவென்றால், இது போன்ற எளிய ஆசாபாசங்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தன்னிலை மறந்த ஆத்மா, இந்த 'விடுதலை' என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, எதிலிருந்து விடுதலை என்னும் பொருளை மறந்து போய்விடுவதாலேயே இது நிகழ்கிறதாம்!

இந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, இப்போது 'தேவி மஹாத்மியம்' சொல்வது என்னவெனப் பார்க்கலாம்!

"தன்னிலை மறந்த ஆத்மா, தன் தேடலை மட்டும் விடாமல் நிகழ்த்திக் கொண்டு, படிப்படியாகத் தன்னிடம் இருக்கும் அழுக்குகளைக் களைந்து "உண்மையான விடுதலை" எது என்பதை அறிய நடத்தும் போராட்டமே ஒரு ஒன்பது நாட்களுக்குள் நிகழ்வதாகச் சொல்லப் பட்டிருக்கும் கதையே தேவி மஹாத்மியம்!"

இந்தப் போராட்டம் ஒன்றும் ஒரு அலுப்புத் தட்டக்கூடிய போராட்டமல்ல! ஒரு உன்னதமான விடுதலைப் போரை இது ஒக்கும். இதைப் படிக்கின்ற சாதகனுக்கு ஒரு தெளிவைத் தந்து, அவரது எழுச்சியை அதிகப்படுத்தி, அடைய வேண்டிய 'விடுதலையை' விரைவாக்கும் உன்னதமே தேவியின் திருக்கதை நமக்கெல்லாம் காட்டுவது!

பதின்மூன்று அத்தியாயங்களைக் கொண்ட தேவி மஹாத்மியம் ஒரு மூன்று கதை வடிவில் பிரிக்கப்பட்டுத் தொகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. பகவத் கீதை, திருக்குறள் போன்ற உண்மை நூல்களும் இதே வகையில் என்பதை உணர்ந்த பெரியோர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

ஆத்மாவின் விடுதலைத் தேடலுக்கான பயணம் மூன்று முக்கிய நிலைகளைத் தண்டிச் செல்லுகிறது. இடையில் இன்னும் பல சின்னச் சின்னத் தடைகள்! இவை அனைத்தையும் முறியடித்து, உண்மைப் பொருளை எப்படி அடைகிறது ஆத்மா என்பதே இதன் மையக் கருத்து எனச் சொல்லலாம்.

மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களின் உதவி, ஆளுமை மூலம் என்னவெல்லாம் ஒரு சாதகனுக்குள் நிகழ்கிறது என்பதை விழைபவர்க்குப் புரிய வைப்பதே இதன் நோக்கம்!

தான், தனக்கு என வாழும் ஒரு மனிதன் எப்படி தனது உறவுகளைப் புரிந்து, அவர்களுடன் கூடியிருந்து, குலாவி, பின் ஒவ்வொன்றாய் எப்படி அவர்களும் நிலை அல்லர் எனப் புரிந்து அவற்றினின்று விடுபட்டு, திடீரென, தான் இப்போது எவருக்கும் உறவல்ல; ஆனால், அதே சமயத்தில் இந்த மொத்த உலகமே தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்னும் பேருண்மையை அறிந்து தானே ஒன்றாகவும், பலவாகவும் இருக்கும் அதிசய அனுபவத்தில் திளைத்து, ஆன்மாவை விடுவிக்கிறான் எனச் சொல்ல வருவதே இதன் மையப் பொருள்!

இதன் முதல் நிலை, ஆதிசக்தியான விஷ்ணுமாயா திருமாலை ஆழ்துயிலில் இருந்து எழுப்பி மது-கைடபர்களை அழிப்பதைச் சொல்கிறது.

இரண்டாம் நிலையில்,இதே சக்தி தன்னை மஹாலக்ஷ்மியாக மாற்றிக் கொண்டு மகிஷாஸுர வதம் செய்ய விரைகிறது. கூடவே, சண்ட, முண்ட வதம், ரக்தபீஜ வதம் எனச் சில நிகழ்வுகளும்!

மூன்றாம் நிலையில், மஹா சரஸ்வதி சும்ப-நிசும்ப வதம் நிகழ்த்துகிறாள்!

மூன்று, மூன்று தினங்களாக இது இந்த ஒன்பது நாட்களிலும் கொண்டாடப் படுகிறது.

இறுதி வெற்றியாக விஜயதசமி, பத்தாம் நாளன்று!

இயற்கையின் சக்திகளை முறியடித்த சாதகன், தன் விடுதலையை வெற்றிக்கனியாக அடைகின்ற நாள்.

எண்கள் அனைத்தையுமே இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட முடியும். அப்படி எல்லாவற்றையும் அடக்கியபின், பத்தாவதாக வெற்றிதானே!

**********************************************************************
[தொடரும்]