Tuesday, October 7, 2008

"தேவி திருக்கதை" -- 7

"தேவி திருக்கதை" -- 7"கதை சொல்லும் கதை"


இதுவரையில் மேலெழுந்தவாரியாக "தேவி மஹாத்மியம்" என்னும் அரிய நூல் சொன்ன கதையைப் பார்த்தோம். இதை இப்படியே படிப்பதும் கேட்டதும் மட்டுமே கூட அநேக விசேஷ பலன்களைக் கொடுக்க வல்லது.
இருந்தாலும் இக்கதையின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் பொருள் என்ன?

எதைச் சொல்லவென இக்கதை சொல்லப்பட்டது?


வெறும் சிலா அசுரர்களை தேவி எப்படி அழித்துக் கொன்றாள் என்பதையா?

இதையெல்லாம் அறிய, கற்றுத் தேர்ந்த பெரியவர்கள் சொல்லுவது போல, ஒரு தகுந்த குருவின் வழிகாட்டலுடனானத் தேடலும், பயிற்சியும் செய்ய வேண்டும்.

இந்த அற்புதமான கதை சொல்லும் உட்பொருளைப் பெரியவர்கள் சொன்ன வண்ணம் இங்கே அளிக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஆன்றோர், அறிந்தோர் சொல்லிச் சென்றது. என் பணி தொகுத்து அளிப்பது மட்டுமே! அவர்களுக்கெல்லாம் வணக்கம் சொல்லி உரைநடையாகவே இதனைத் தொடங்குகிறேன்!


"மனித வாழ்வின் நோக்கமே ஒரு தேடலை நோக்கித்தான்! சில சமயங்களில் அது அன்றாடத் தேவைகளுக்காகவும், கிட்டாத எட்டாப் பொருள்களுக்காகவும், இருந்தாலும், இவையேல்லாம் கூட ஒரு விடுதலையை நோக்கித்தான் எனப் புரியும். இன்றையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை, நாளையத் தேவைகளை அடைய விரும்பும் விடுதலை என இதை வகைப் படுத்தலாம்.

இந்த விடுதலை வேட்கை என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் புலப்படும் உண்மை இதுதான்..... இது ஆத்மாவின் தேடல்!

ஆச்சரியமாக இருக்கலாம் இந்த உண்மை!

ஆத்மாவுக்கு பிறப்பிலிருந்து விடுதலை எனத்தானே படித்திருக்கிறோம். அது ஏன் இதையெல்லாம் விரும்புகிறது என!

ஆனால், கற்றுத் தெளிந்தவர் சொல்வது என்னவென்றால், இது போன்ற எளிய ஆசாபாசங்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தன்னிலை மறந்த ஆத்மா, இந்த 'விடுதலை' என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, எதிலிருந்து விடுதலை என்னும் பொருளை மறந்து போய்விடுவதாலேயே இது நிகழ்கிறதாம்!

இந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, இப்போது 'தேவி மஹாத்மியம்' சொல்வது என்னவெனப் பார்க்கலாம்!

"தன்னிலை மறந்த ஆத்மா, தன் தேடலை மட்டும் விடாமல் நிகழ்த்திக் கொண்டு, படிப்படியாகத் தன்னிடம் இருக்கும் அழுக்குகளைக் களைந்து "உண்மையான விடுதலை" எது என்பதை அறிய நடத்தும் போராட்டமே ஒரு ஒன்பது நாட்களுக்குள் நிகழ்வதாகச் சொல்லப் பட்டிருக்கும் கதையே தேவி மஹாத்மியம்!"

இந்தப் போராட்டம் ஒன்றும் ஒரு அலுப்புத் தட்டக்கூடிய போராட்டமல்ல! ஒரு உன்னதமான விடுதலைப் போரை இது ஒக்கும். இதைப் படிக்கின்ற சாதகனுக்கு ஒரு தெளிவைத் தந்து, அவரது எழுச்சியை அதிகப்படுத்தி, அடைய வேண்டிய 'விடுதலையை' விரைவாக்கும் உன்னதமே தேவியின் திருக்கதை நமக்கெல்லாம் காட்டுவது!

பதின்மூன்று அத்தியாயங்களைக் கொண்ட தேவி மஹாத்மியம் ஒரு மூன்று கதை வடிவில் பிரிக்கப்பட்டுத் தொகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. பகவத் கீதை, திருக்குறள் போன்ற உண்மை நூல்களும் இதே வகையில் என்பதை உணர்ந்த பெரியோர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

ஆத்மாவின் விடுதலைத் தேடலுக்கான பயணம் மூன்று முக்கிய நிலைகளைத் தண்டிச் செல்லுகிறது. இடையில் இன்னும் பல சின்னச் சின்னத் தடைகள்! இவை அனைத்தையும் முறியடித்து, உண்மைப் பொருளை எப்படி அடைகிறது ஆத்மா என்பதே இதன் மையக் கருத்து எனச் சொல்லலாம்.

மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களின் உதவி, ஆளுமை மூலம் என்னவெல்லாம் ஒரு சாதகனுக்குள் நிகழ்கிறது என்பதை விழைபவர்க்குப் புரிய வைப்பதே இதன் நோக்கம்!

தான், தனக்கு என வாழும் ஒரு மனிதன் எப்படி தனது உறவுகளைப் புரிந்து, அவர்களுடன் கூடியிருந்து, குலாவி, பின் ஒவ்வொன்றாய் எப்படி அவர்களும் நிலை அல்லர் எனப் புரிந்து அவற்றினின்று விடுபட்டு, திடீரென, தான் இப்போது எவருக்கும் உறவல்ல; ஆனால், அதே சமயத்தில் இந்த மொத்த உலகமே தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்னும் பேருண்மையை அறிந்து தானே ஒன்றாகவும், பலவாகவும் இருக்கும் அதிசய அனுபவத்தில் திளைத்து, ஆன்மாவை விடுவிக்கிறான் எனச் சொல்ல வருவதே இதன் மையப் பொருள்!

இதன் முதல் நிலை, ஆதிசக்தியான விஷ்ணுமாயா திருமாலை ஆழ்துயிலில் இருந்து எழுப்பி மது-கைடபர்களை அழிப்பதைச் சொல்கிறது.

இரண்டாம் நிலையில்,இதே சக்தி தன்னை மஹாலக்ஷ்மியாக மாற்றிக் கொண்டு மகிஷாஸுர வதம் செய்ய விரைகிறது. கூடவே, சண்ட, முண்ட வதம், ரக்தபீஜ வதம் எனச் சில நிகழ்வுகளும்!

மூன்றாம் நிலையில், மஹா சரஸ்வதி சும்ப-நிசும்ப வதம் நிகழ்த்துகிறாள்!

மூன்று, மூன்று தினங்களாக இது இந்த ஒன்பது நாட்களிலும் கொண்டாடப் படுகிறது.

இறுதி வெற்றியாக விஜயதசமி, பத்தாம் நாளன்று!

இயற்கையின் சக்திகளை முறியடித்த சாதகன், தன் விடுதலையை வெற்றிக்கனியாக அடைகின்ற நாள்.

எண்கள் அனைத்தையுமே இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட முடியும். அப்படி எல்லாவற்றையும் அடக்கியபின், பத்தாவதாக வெற்றிதானே!

**********************************************************************
[தொடரும்]

6 comments:

 1. நன்றாக எழுதி இருக்கிங்க, மற்ற பகுதிகளை விட இது நன்றாக தெளிவாக, இருக்கிறது.

  ReplyDelete
 2. நன்றி கோவியாரே!
  அது சொல்லப்படும் கதை!
  இது அந்தக் கதை என்ன சொல்கிறது என்பதைச் சொல்லும் சாரம்!

  ReplyDelete
 3. //நன்றி கோவியாரே!
  அது சொல்லப்படும் கதை!
  இது அந்தக் கதை என்ன சொல்கிறது என்பதைச் சொல்லும் சாரம்!//

  அது நன்றாகவே தெரியும். இல்லை என்றால் இங்கு பின்னூட்டி இருக்க மாட்டேன். :)

  ReplyDelete
 4. நவராத்திரிப் பதிவுகளில் தேவி மகாத்மியம் மிக அருமையாகச் சென்றது SK.

  ஒவ்வொரு நாளும் வாசித்துக் கொண்டிருந்தேன். திருக்கடையூரிலும் கூட! அதன் பின்னர் திருவானைக்காவிலும் கூட! பின்னூட்டத் தான் முடியவில்லை!

  தேவியின் திருக்கதைச் சாரத்தைச் சாரமாகச் சொல்லி நிறைவு செய்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 5. //எண்கள் அனைத்தையுமே இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட முடியும்//

  தம்முள் எண்ணை அடக்கியவள், என்னையும் அடக்கி,
  எம்மையும், நம்மையும், அவள் ஆனந்த லஹரியில் அடக்கி அருள வேண்டுகிறேன்!

  இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. //தேவியின் திருக்கதைச் சாரத்தைச் சாரமாகச் சொல்லி நிறைவு செய்தமைக்கு நன்றி!//
  //தம்முள் எண்ணை அடக்கியவள், என்னையும் அடக்கி,
  எம்மையும், நம்மையும், அவள் ஆனந்த லஹரியில் அடக்கி அருள வேண்டுகிறேன்!

  இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்//

  நன்றி ரவி.
  நீங்கள் படித்திருப்பீர்கள் எனவே நினைத்தேன்.
  இன்னமும் தொடர் நிறைவடையவில்லை. இன்னும் 2 பதிவுகள் இருக்கின்றன.
  அதையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
  இந்தியப் பயணம் நிறைவாக நடந்தேறியிருக்கும் என நம்புகிறேன்.
  அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள்.

  ReplyDelete