"தேவி திருக்கதை" -- 9
"கதை சொல்லும் கதை" -- [தொடர்ச்சி]
முடிந்தால் முந்தையப் பதிவையும் சேர்த்துப் படியுங்கள்!
மூன்றாம் நிலை:
அனைத்துக்கும் உயரிய சக்தியான, அறிவுக்கடவுள் மஹா சரஸ்வதி வந்துதான் நல்லறிவு என்னும் பேரொளியால், இந்த அறியாமை என்னும் மாயையை வெல்லவேண்டும்.
அவளை வேண்டித் துதிக்க வேண்டும்!
அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமும் அல்ல.
முதலில் சொன்ன இரு வழிகளையும்.... விடாமுயற்சி, உபாசனை.... விடாமல் இன்னும் தீவிரமாகப் பயின்று அவளைத் தேட வேண்டும்.
தேடினால் கிடைப்பாள்!
இந்தத் தேடலுக்கும், முதல் இருநிலைத் தேடல்களுக்கும் ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது!
முதல் இரு நிலைகளில் [தமஸ், ரஜஸ்] சாதகன் தனக்காகத்தான் தேடி நின்றான்.
இப்போது ஸத்வ குணம் உள்ளோங்கி நிற்கும் வேளையில், தான் இதில் தனியன் அல்லன்; தன்னுடன் இந்தப் பிரபஞ்சமே இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்த சாதகன் இப்போது அகில உலக நலனுக்காகவும் இதைத் தேடுகிறான்!
எப்படி ஒரே நூலால் இழைக்கப்பட்ட ஆடை இருக்கிறதோ அது போல நாம் எல்லாருமே ஒரே நூலால் பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணரும் சாதகன், தன் அடையாளத்தைத் துறக்கிறான்.
அதனால்தான் யோகிகள் இந்த உலகத்தையே தமதெனக் கருதி அன்பு செலுத்துகிறார்கள்!
இறையை எதிரில் காணும் சாதகன் அந்த இறையில் இந்த அண்டத்தையே பார்க்கிறான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனம் இதுதான்!
இறை என்பவன் எங்கோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து நின்று அருள் செய்கிறான் என்னும் மாயை அகன்று, அவன் எங்கும், எல்லா உயிர்களிலும், இடங்களிலும் வியாபித்து நிறைகிறான்; அவன் இல்லாத இடமே இல்லை என்னும் பேருண்மை இப்போது அவனுக்குப் புலப்படுகிறது!
வெல்வது... விடுதலை பெறுவது எளிதாகிறது!
தன் அனைத்து சக்திகளையும் வெளிக் கொணர்ந்து 8 மாத்ரிகையர் துணையுடன் நிசும்பனை வென்ற அன்னை, பிறகு, அதே சக்திகளை தனக்குள்ளே இழுத்துக் கொண்டு தனியளாய் சும்பனை வெல்கிறாள்!
சாதகனும் இதை உணரத் தொடங்கி, தன் சக்திகள் மூலம், சில காட்சிகளை, நிகழ்வுகளை நிகழ்த்தி, பிறகு அத்தனை சக்திகளையும் தனக்குள் உள்வாங்கி, தன்னையே வெல்கிறான்!
இனி, இவன் செய்யும் அனைத்துச் செயல்களும் இறைக்கே அர்ப்பணிக்கப் படுகின்றன.
இதுதான் சும்ப- நிசும்ப வதம்!!! …
யோகவழியில் இதனை உணரும் சாதகன், தனது தமஸ், ரஜஸ், ஸத்வம் என்னும் மூன்று குணங்களையும் துறந்து இறையை உணர்ந்து அண்டத்துடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதே தேவி மஹாத்மியம் சொல்லும் கருத்து!
அநேகமாக எல்லாப் புராணங்களுமே இந்த அடிப்படைத் தத்துவத்தை ஒட்டியே அமைகின்றன என்றால் மிகையில்லை.
தன்னை உணர்ந்தவன், நிகழும் எல்லாச் செயல்களிலும் இறையைக் காண்கிறான்.
எந்தவொரு அற்பச் செயலும் அற்பமில்லை; ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது எனும் உண்மையைப் புரிந்து கொள்கிறான்.
தடை எனப் பொதுவாக நாம் எல்லாரும் கருதும் நிகழ்வுகள் அவனை வருத்துவதில்லை.
மாறாக அதையும் இறையின் ஒரு லீலையாகவே கொண்டு அவற்றைக் கண்டு அஞ்சாது முன்னோக்கி நடக்கிறான்.
வழிப்பயணம் செல்கையில் பாதை தவறிய பயணி, 'அடடா! தொலைந்து விட்டோமே!' என அஞ்சுவது போல் இவன் அஞ்சுவதில்லை.
தலையை உயர்த்திப் பார்க்கிறான்.
மேலே தெரியும் ஆகாயமும், சூரியனும், வீசும் காற்றும் இவனுக்கு நாம் இங்கு தொலையவில்லை; நாம் தனியாள் இல்லை எனப் புரிய, ஒரு புதுத் தெம்புடன் முன்னோக்கிச் செல்கிறான்.
இயற்கை என்னும் இறைசக்தியிடம் இருந்து தான் பிரியாமல் இணைந்தே இருக்கிறோம் என்னும் உண்மை அளித்த பலத்தில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.
மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களை வணங்கி, வழிபட்டு, இவர்கள் மூலம் ஆதி சக்தியுடன் தான் ஒன்றுவதை உணரும் பயிற்சியே ஒவ்வொரு சாதகனும் செய்ய முயல்வது.
முதல் நிலையில், தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் மலங்களை அகற்ற கடினமான பயிற்சிமுறைகளைச் செய்கிறான்.
மஹா காளி உபாசனை மூலம், தன்னைப் பிணைத்திருக்கும் தடைகளை உடைத்தெறிகிறான்.
இதன் மூலம் ஒரு நல்வாழ்வு தனக்கு வருவதை உணர்கிறான். எல்லா சக்திகளையும் அடக்கித் தன் கைக்குள் கொண்டு வந்து, தனக்கு வேண்டிய எதையும் பெறக்கூடிய சக்திகளை அடைகிறான்.
மலங்களின் ஆளுமையால், தான் ஒரு கைதியாகவும், பலமற்றவனாகவும் உணர்ந்த இவன், இப்போது அந்த 'தமஸ்' என்னும் சோம்பலை வெற்றி கொண்டு பெருமை பெறுகிறான்.
ஒரு சொடக்கில் தான் விரும்பும் அனைத்தையும் பெறக் கூடிய வல்லமை மஹா லக்ஷ்மியின் அருளால் இவனுக்குக் கிட்டுகிறது.
முதல் நிலையில் நரகமெனத் தெரிந்த உலகம் இப்போட்து சொர்க்கமாகத் தெரியத் தொடங்குகிறது இவனுக்கு!
இதனை கொஞ்ச காலம் அனுபவித்த இவனுக்கு, சொர்க்கம் அல்ல தான் வேண்டுவது எனப் புரியத் துவங்குகிறது!
'பேருண்மை' என்னும் உயரிய நிலை தனக்குக் கைவர வேண்டும் எனப் புரிகிறது... தொடர்ந்து பயிற்சி செய்பவனுக்கு!
ஆம்! உண்மையில், சில சாதகர்கள் இரண்டாம் நிலையிலேயே தமது தேடலை நிறுத்திவிட்டு, இயல் வாழ்க்கையில் பயணம் செய்யும் காட்சியும் நாம் இங்கு பார்க்கிறோம்!
ஆனால், உண்மையான சாதகன் தன் இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தை விடாது தொடர்கிறான்.
பேருண்மை புலப்பட மாயை அகல வேண்டும் எனத் தெளிகிறான்.
மஹா சரஸ்வதியைத் தேடி அலைந்து, அவளைத் துதித்து இந்தத் தடையையும் அகற்றி, உண்மையான விடுதலை என்பது என்ன எனப் புரிகிறான்.
நிகழும் அனைத்தையும் அப்படியே பார்க்கக் கற்றுக் கொள்கிறான்.
இன்பம், துன்பம், வளமை, செல்வம் என ஒன்றும் இல்லை என்பதை நன்கு உணர்கிறான்.
எல்லாம் இழந்த அநுபூதி நிலையில், இந்த உண்மையுடன் தான் எப்போதுமே பிணைக்கப்பட்டிருந்தோம்; பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புரிந்த 'தன்நிலை' அறிகிறான்.
இந்த உண்மையைச் சொல்வதுதான் மந்திரங்களை உள்ளடக்கிய தேவி மஹாத்மியம் விழைபவர்க்குச் சொல்வது! !!
இதென்ன புதுக்கதை?
**************
[நாளை நிறைவுறும்!]
No comments:
Post a Comment