Monday, August 25, 2008

சிவகாமி அம்மை பஞ்சகம்


அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழையாவும்
பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

--கவிநயா

படத்துக்கு நன்றி: கீதாம்மா

Monday, August 18, 2008

மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி!


மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி
தஞ்சமென் றுனைப்பணிந்தேன்
இக்கணம் வாடி!

ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி
ஓடோடி வந்தேன்நான்
உன்நிழல் தேடி!

இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி
அருள்எனும் ஒளியேற்றி
மருள்நீக்க வாடி!

விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி
பரிந்தென்னைக் காத்திடவே
விரைந்திங்கு வாடி!

இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி
கருங்காட்டில் அலைகின்றேன்
வழிகாட்ட வாடி!

தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளி
என்னிதய மேடையிலே
பதம்பதிக்க வாடி!

குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளி
குழைந்துன்னை அழைக்கின்றேன்
மகிழ்ந்திங்கு வாடி!

அலைபாயும் கூந்தலுடை ஆங்கார காளி
ஆசையாய் அழைக்கின்றேன்
அன்னையே வாடி!

கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி
கர்மவினை களைந்திடவே
கருணைகொண்டு வாடி!

திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி - உன்
திருவடிகள் சிந்தையிலே
நிறுத்தும் வரம் தாடி!!

--கவிநயா

Sunday, August 17, 2008

"அம்மன் தரிசனம்"

"அம்மன் தரிசனம்"

கவிநயா ஒரு அற்புதமான மீனாக்ஷி அம்மன் படத்தைப் போட்டிருந்தார்.
ரோகிணியும் எனது "ஆடித்தேர் வருகுதம்மா" பதிவில் ஒரு தொடர்கவிதை இப்படி ஆரம்பித்து வைத்தார்.

"ஆடி ஆடி வருகுதம்மா
ஆடித்தேர் வருகுதம்மா

தேடித் தேடி வந்து நின்றோம்
தேவி உன்னைக் காண‌ வந்தோம்

வாடி வாடி அழுத முகம்
வாட்டம் தீர வணங்கி நின்றோம்

ஓடி ஓடி களைத்து விட்டோம்
உன் மடியில் சாய வந்தோம்

இடி இடியாய் வருவதெல்லாம்
பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்

இன்னல் என்று வந்ததெல்லாம்
இன்னிசையாய் மாறக் கேட்டோம்"


இன்று[08/16/08] காலை வரலக்ஷ்மி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள்.
பூஜை மரியாதைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டாள்.
அதைத் தொடர்ந்து என் மனத்தில் எழுந்த வரிகள் இவை!



வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனம் செய்வது இங்கே சிறப்பாகும்!

வடிவுடையாளின் வண்ணமுகத்தைக் காண்பது மனதுக்கு இனிதாகும்!

நுதலில் துலங்கும் குங்குமச்சிவப்பில் குற்றங்கள் யாவும் மறைந்தோடும்!

மீன்விழியாளின் மருளும் விழிகள் கண்டிட இங்கே கலிதீரும்!

மூக்குத்தி அழகைக் கண்டால்போதும் மனதில் மகிழ்ச்சி மிகவாகும்!

செவ்விதழ் காட்டும் சிரிப்பில் கவலைகள் எம்மைவிட்டு விரைந்தோடும்!

செவ்வாய்மொழிகள் கேட்டிடக் கேட்டிட களிப்பும் நெஞ்சில் குடியேறும்!

பட்டுக்கன்னம் காட்டும் செம்மையில் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!

செவிமடல் ஆடும் குண்டலவொலியில் செய்தன யாவும் கழிந்துவிடும்!

அலையாய் விரியும் கூந்தல் அழகினில் அலைபோல் துன்பம் நீங்கிவிடும்!

அல்லிக்கைகள் அருளும் அழகில் அன்பே இங்கு அணைந்தேறும்!

கைவளை குலுங்க அசைந்திடும் அழகில் ஆசைகள் உள்ளில் மிகவாகும்!

குலுங்கும் கொங்கைகள் சுரக்கும் அமுதினில் பசியும் இங்கே பறந்தோடும்!

இடையில் திகழும் மேகலை ஒலியில் இன்னிசைக் கீதம் செவிமடுக்கும்!

கட்டுடல்மேனி கண்டதும் மனதில் கசடுகள் எல்லாம் கரைந்தோடும்!

பிஞ்சுப்பாதம் மிஞ்சும் மிஞ்சில் நெஞ்சம் இங்கே தள்ளாடும்!

மாவிலைவிரல்கள் முன்னே வருகையில் மோஹனம் எதிரே நடமாடும்!

முன்னழகில் மனம் தடுமாறும்! பின்னழகில் மனம் தள்ளாடும்!

அம்மன் தரிசனம் அழகாய்க் கண்டதில் ஆனந்தம் இங்கே மிகவாச்சு!

அம்மா உந்தன் அருளைக் காட்டி அடியேன் வாழ்வில் விளக்கேற்று!
***********************

Thursday, August 14, 2008

"ஆடித் தேர் வருகுதம்மா!" -- ஆடிவெள்ளி 5-ம் பதிவு

"ஆடித் தேர் வருகுதம்மா!"
ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே
அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா
வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!

அழகுமிகு தொம்பைகளும் அந்தரத்தில் ஆடிவர
வாழை, தெங்கு குலைகளுமே அடுக்கடுக்காய் அசைந்துவர
குழைந்திருக்கும் பக்தர்கூட்டம் வடமெடுத்து இழுத்துவர
அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!

ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்
மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்
இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்
சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......
காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!

அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது
என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது
கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்
பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!

சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி
திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!

இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்
தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்
தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!

ஊரிருக்கும் இடமெல்லாம் தாயாரே நீயிருப்பாய்
உன்பிள்ளை கணபதியை உன்னுடனே வைத்திருப்பாய்
தடையேதும் வாராமல் உனைக்காண அவன் அருள,
தயவெல்லாம் தந்திடவே நீயென்றும் அருளிடுவாய்!

ஆற்றங்கரை மணலெடுத்து ஆடியிலே தவமிருந்தாய்
கூற்றுவனை உதைத்திட்ட இடக்காலாய் நீயிருந்தாய்
குற்றமிலா பட்டருக்கு நிலவொளியாய் நீ வந்தாய்
ஏற்றிடுவாய் என் துதியை! எல்லார்க்கும் அருளிடுவாய்!

தேரோட்டம் கூட்டிவந்து ஊர்நிலையைக் காட்டுகின்றோம்
வேறோட்டம் இல்லாது கூழூற்றிக் குளிர்கின்றோம்
ஏரோட்டம் நடப்பதற்கு நீர்நிலையைத் தந்திடுவாய்
பாரெட்டும் புகழ்பாடும் பத்தினியே பொழிந்திடுவாய்!

ஆதவனைக்கண்டதுபோல் என்மனமும் மலர்கிறது
திங்களைக் கண்டதுபோல் என்னுள்ளம் குளிர்கிறது
செவ்வாயில் சிரிப்பெல்லாம் காட்டியெனை மகிழ்த்திடுவாய்
பொன்புதனாய் என்வாழ்வில் புத்தொளியை ஊட்டிடுவாய்
குருவாக நீவந்து திருவருளைக் காட்டிடுவாய் - விடி
வெள்ளியென நம்பிக்கை எனக்கூட்டி நிறைத்திடுவாய் - வி
சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்
நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!

****************************

Monday, August 11, 2008

மதுரையிலே அவள் மீனாக்ஷி


வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி
துள்ளிச் செல்லும் மானழகி
அள்ளித் தரும் அன்பழகி
தங்கத் தமிழ்ப் பேரழகி

வைகைநதிக் கரை யோரம்
வாகாய்நீ வீற்றி ருப்பாய்
பொய்கையிலே தாமரை போல்
பூத்துச் சிரித்தி ருப்பாய்

மலையத் துவச னுக்கு
மகளாய் பிறந்து வந்தாய்
திக்விஜயம் செய்து வந்தாய்
திக்கெட்டும் வென்று வந்தாய்

சுந்தரரைக் கண்ட பின்னே
சொக்கிப்போய் காதல் கொண்டாய்
மனம்போல் மணம் முடித்தாய்
மதுரையை ஆண்டு வந்தாய்

மீனாள் உன்பெயர் சொன்னால்
தேனாறு ஓடுதடி
தானாக வினைகளெல்லாம்
காணாமல் போகுதடி

பூவை உன்னைப் பார்த்திருந்தால்
பூவுலகம் மறக்குதடி
பாவை யுன்னைப் பாடிவந்தால்
பாவமெல்லாம் கரையுதடி

நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?

--கவிநயா

மீனாக்ஷி அம்மையின் படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/tamilnadu/madurai/meenakshi_en.htm