Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, January 10, 2011

எட்டி உதைத்தாலும்...



எட்டி உதைத்தாலும் உன்னை
ஒட்டிக் கொள்ளுவேனே
கட்டுக் கடங்காத அன்பால்
கட்டிக் கொள்ளுவேனே

விட்டுப் பிரியாமல் உன்னை
ஒட்டிக் கொள்ளுவேனே
சுற்றிச்சுற்றி வந்து உனையே
கட்டிக் கொள்ளுவேனே

பட்டுப்பாதங்களை என்தலைமேல்
இட்டுக் கொள்ளுவேனே
பற்றனைத்தும் மறந்து உன்னையே
பற்றிக் கொள்ளுவேனே!


--கவிநயா

Monday, September 29, 2008

துர்கா தேவி சரணம்!

அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துகள்!

துர்க்கை அம்மன் மீது சுசீலாம்மா பாடிய இந்த பாடலை அறியாதவர்கள் இருப்பது அரிது. அப்படி இருந்த போதிலும், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதானே?




ஒலி வடிவம் இங்கே...

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)

துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்களம் கூடும்(ஜெய )

பொற் கரங்கள் பதினெட்டும்
நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும்
வெற்றி பாதையை காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதிசக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)

சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா...
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கயற்கண்ணியும் அவளே (ஜெய..)

***

அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/indianimages/832115886/in/set-72157600860832813/

Monday, September 1, 2008

காடென்றால் வேற்காடு!

சமீப காலமாக நான் எழுதின பாடல்களையே படிச்சிக்கிட்டிருக்க உங்க மேல இரக்கப்பட்டு, ஒரு மாறுதலுக்காக பாடகி சித்ரா அவர்களோட "சர்வம் சக்தி மயம்" என்கிற தொகுப்பிலிருந்து "காடென்றால் வேற்காடு" என்கிற பாடலை தந்திருக்கேன் :)

அதன் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.


வேத நதி மூலமே வேதாந்த ரூபியே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி மதி மீதிலே நாத வடிவாகினை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சௌந்தர்ய லஹரி நீ சுந்தர ஜடாதரி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
எங்கெங்கு காணினும் தேவி உன் ரூபமே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

காடென்றால் வேற்காடு
மரமென்றால் வேப்ப மரம்
ஊரென்றால் கொல்லூரு
உறவெல்லாம் உன்னோடு

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்

மாங்காட்டு மீனாக்ஷி
மதுரையிலே மகமாயி
காஞ்சியிலே கருமாரி
தில்லையிலே கோலவிழி
சமயபுர காமாக்ஷி
மயிலையிலே ஸ்ரீகாளி
எப்படி நான் அழைத்தால் என்ன
நீதாண்டி என் தாயி

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்

சூலமேந்தி ஆடுகின்ற மாரியம்மா
காலமெல்லாம் காவலாக வாடியம்மா

சடையாண்டி கோபிப்பான்
முருகனுக்கும் கோபம் வரும்
கணபதிக்கோ பிடிவாதம்
மாயவனோ பாராமுகம்
நாளெல்லாம் சோதனையோ
தாயுன்னை நோகவிடும்
வாடியம்மா வாவா உந்தன்
நிம்மதிக்கே பூலோகம்

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்

பரமசிவன் மேனியிலே
நாகரூபம் ஆனவளே
வேற்காட்டுப் புற்றினிலே
படமெடுத்து நின்றவளே
குழந்தையம்மா நான் இங்கே
பாலூட்ட வருகின்றேன்
மகுடி ஒலி போலே எந்தன்
உள்மூச்சை விடுகின்றேன்

சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்!

Monday, August 25, 2008

சிவகாமி அம்மை பஞ்சகம்


அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழையாவும்
பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

--கவிநயா

படத்துக்கு நன்றி: கீதாம்மா

Monday, August 18, 2008

மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி!


மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி
தஞ்சமென் றுனைப்பணிந்தேன்
இக்கணம் வாடி!

ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி
ஓடோடி வந்தேன்நான்
உன்நிழல் தேடி!

இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி
அருள்எனும் ஒளியேற்றி
மருள்நீக்க வாடி!

விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி
பரிந்தென்னைக் காத்திடவே
விரைந்திங்கு வாடி!

இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி
கருங்காட்டில் அலைகின்றேன்
வழிகாட்ட வாடி!

தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளி
என்னிதய மேடையிலே
பதம்பதிக்க வாடி!

குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளி
குழைந்துன்னை அழைக்கின்றேன்
மகிழ்ந்திங்கு வாடி!

அலைபாயும் கூந்தலுடை ஆங்கார காளி
ஆசையாய் அழைக்கின்றேன்
அன்னையே வாடி!

கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி
கர்மவினை களைந்திடவே
கருணைகொண்டு வாடி!

திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி - உன்
திருவடிகள் சிந்தையிலே
நிறுத்தும் வரம் தாடி!!

--கவிநயா

Monday, August 11, 2008

மதுரையிலே அவள் மீனாக்ஷி


வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி
துள்ளிச் செல்லும் மானழகி
அள்ளித் தரும் அன்பழகி
தங்கத் தமிழ்ப் பேரழகி

வைகைநதிக் கரை யோரம்
வாகாய்நீ வீற்றி ருப்பாய்
பொய்கையிலே தாமரை போல்
பூத்துச் சிரித்தி ருப்பாய்

மலையத் துவச னுக்கு
மகளாய் பிறந்து வந்தாய்
திக்விஜயம் செய்து வந்தாய்
திக்கெட்டும் வென்று வந்தாய்

சுந்தரரைக் கண்ட பின்னே
சொக்கிப்போய் காதல் கொண்டாய்
மனம்போல் மணம் முடித்தாய்
மதுரையை ஆண்டு வந்தாய்

மீனாள் உன்பெயர் சொன்னால்
தேனாறு ஓடுதடி
தானாக வினைகளெல்லாம்
காணாமல் போகுதடி

பூவை உன்னைப் பார்த்திருந்தால்
பூவுலகம் மறக்குதடி
பாவை யுன்னைப் பாடிவந்தால்
பாவமெல்லாம் கரையுதடி

நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?

--கவிநயா

மீனாக்ஷி அம்மையின் படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/tamilnadu/madurai/meenakshi_en.htm