Monday, August 18, 2008

மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி!


மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி
தஞ்சமென் றுனைப்பணிந்தேன்
இக்கணம் வாடி!

ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி
ஓடோடி வந்தேன்நான்
உன்நிழல் தேடி!

இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி
அருள்எனும் ஒளியேற்றி
மருள்நீக்க வாடி!

விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி
பரிந்தென்னைக் காத்திடவே
விரைந்திங்கு வாடி!

இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி
கருங்காட்டில் அலைகின்றேன்
வழிகாட்ட வாடி!

தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளி
என்னிதய மேடையிலே
பதம்பதிக்க வாடி!

குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளி
குழைந்துன்னை அழைக்கின்றேன்
மகிழ்ந்திங்கு வாடி!

அலைபாயும் கூந்தலுடை ஆங்கார காளி
ஆசையாய் அழைக்கின்றேன்
அன்னையே வாடி!

கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி
கர்மவினை களைந்திடவே
கருணைகொண்டு வாடி!

திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி - உன்
திருவடிகள் சிந்தையிலே
நிறுத்தும் வரம் தாடி!!

--கவிநயா

21 comments:

 1. திரிசூலம் கையில் ஏந்தி
  தீயவரைத் தண்டித்து
  திக்கெட்டும் காத்திடும் காளிமாதாவின்
  திருவடிகளைச் சிந்தையிலே
  நிறுத்தி விட்டீர் கவிநயா!

  ReplyDelete
 2. 'டி' இல்லாம எழுதியிருக்கலாமோ?...என்னதான் உரிமை எடுட்த்து எழுதறது என்றாலும்...'வாம்மா' என்பது போல இல்லையே 'வாடி' என்பது.

  ReplyDelete
 3. //திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி - உன்
  திருவடிகள் சிந்தையிலே
  நிறுத்தும் வரம் தாடி!!//

  ஆம் எப்போதும் அவள் நினைவு மனதில் இருந்தால் குறைவு ஏதுமே இல்லை.

  நமது நாட்டின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக வங்காளத்தில் காளி வழிபாடு மஹா பிரசித்தம். தீபாவளியின் போது இரவு முழுவதும் சிறப்பாக காளி பூஜை நடைபெறும், ஒரு வருடம் அதில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறும் பாக்கியம் கிடைத்தது. அந்நினைவை உங்கள் இந்த பதிவு கொண்டு வந்து விட்டது.

  மிக்க நன்றி கவிநயா.

  ReplyDelete
 4. உரிமையுடன் அழைத்திட்ட அழகான கவிவரிகளுடன் அந்தக் கடைசி வரிகள்
  சரியாகப் பொருந்தவில்லை எனத் தோன்றுகிறது..... அந்த ""உன்"னால்.

  ReplyDelete
 5. கவிதையாகவே பின்னூட்டம் இட்டு விட்டீர்கள் :) நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 6. வாங்க மௌலி. (பாத்தீங்களா, உங்களுக்கு மரியாதை குடுத்துட்டேன் :) இந்த கவிதையோட தொனிக்கு அதுதான் சரி வந்தது. அதோட மனசுல நினைக்கும் போது இருக்கும் அதே உரிமை எழுத்துல வந்துடுச்சு.

  ReplyDelete
 7. வருக கைலாஷி. ஸ்ரீராமகிருஷ்ணரின் இஷ்ட தெய்வமான கல்கத்தா காளி என் மனதிலும் இருந்து கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலினால் பிறந்த கவிதையே இது. அன்னையின் அருள் குறித்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 8. நன்றி அண்ணா. கவிதையின் ஒவ்வொரு வரியும் பொருளுடன் இருப்பது எனக்கு முக்கியம். அதனால்தான் அப்படி.

  ReplyDelete
 9. பார்த்தேன்; படித்தேன்;
  பரவசமடைந்தேன்.
  பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 10. திரிசூலம் ஏந்திச் சிவனுடனாடி உன்
  திருவடி சிந்தைகொள்ளும்
  வரம் தாடி!~

  இப்பவும் அதே பொருள் வருமே!:)

  ReplyDelete
 11. நன்றி அண்ணா. எனக்கென்னவோ இப்போதிருப்பதே பிடிக்கிறது. மன்னிக்கவும்.

  ReplyDelete
 12. பவதாரிணி தேவியை மிக நன்றாக மனத்தில் நிறுத்தியிருக்கிறீர்கள் கவிக்கா. அப்படியே எங்கள் மனத்திலும் நிறுத்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 13. //பார்த்தேன்; படித்தேன்;
  பரவசமடைந்தேன்.
  பாராட்டுகிறேன்.//

  வருக ஜீவி ஐயா. மிக்க நன்றி.

  ReplyDelete
 14. //பவதாரிணி தேவியை மிக நன்றாக மனத்தில் நிறுத்தியிருக்கிறீர்கள் கவிக்கா. அப்படியே எங்கள் மனத்திலும் நிறுத்திவிட்டீர்கள்.//

  நல்லது குமரா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  ReplyDelete
 15. அலோ...மெளலி அண்ணா, SK ஐயா!

  இது காளியாத்தா பற்றிய கவிதை!
  காளி கவிதைல அழகு அப்படி இருக்கலாமோ இப்படி இருக்கலாமோ-ன்னு எல்லாம் ஒன்னுமில்லை!

  காளியம்மன் ஆடும் போது அழகு பாக்கக் கூடாது! அவ ஆட்டமே அழகாயிடும்! கவி அக்கா வச்சதே படையல்! கேரி ஆன் கவிக்கா! :))))

  ReplyDelete
 16. ஆபீஸ்ல சும்மா ஹம் பண்ணிப் பாத்தேன்! ரைமிங்கா தான் வருது!

  தத்தரி-தத்தரி-தத்தரி-தீம்தோம்!
  தத்தரி-தத்தரி-தீம்தரிகிட-தீம்தோம்!

  அச்சோ..அந்த இத்தாலியப் பொண்ணு எட்டிப் பாக்குது! மீ தி எஸ்கேப் :)

  ReplyDelete
 17. கண்ணா... ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! வருக வருக :)) நன்றிப்பா.

  ReplyDelete
 18. //காளியம்மன் ஆடும் போது அழகு பாக்கக் கூடாது! அவ ஆட்டமே அழகாயிடும்!//

  ஆடும்போது அழகு பார்த்து, காலைத் தூக்காமல் நின்றவள்தான் காளி. தெரியுமென நினைக்கிறேன் ரவி! சரி விடுங்க! நானும் பாராட்டிட்டு மட்டும் போயிடறேன் இனிமே!:))

  ReplyDelete
 19. அன்னையின் திருவுருவை என்றும் மனத்தில் வைத்து அவளது குணானுபவம் செய்தாலன்றி இப்படி எழுத இயலாது அக்கா. அருமையாக இருக்கிறது.

  என்னால் எண்ணிக் கூடப் பார்க்க இயலவில்லை இப்படி என்னால் எழுத முடியுமா என்று. :-)

  ReplyDelete
 20. // Hindu Marriages In India said...

  மிகவும் அருமை//

  வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete