Monday, May 25, 2009

என்று வருவாய்?


ஆத்தான்னு கூப்பிட்டாக்க
ஆசையோட வந்திடுவா
அம்மான்னு கூப்பிட்டாக்க
அன்போட அருள்புரிவா

ஆத்திரமாப் பேசினாலும்
ஆதரவாக் கேட்டுக்குவா
அழுதழுது கெஞ்சினாக்க
ஆறுதலத் தந்திடுவா

ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
ஆனந்தமா வருவாயேன்னு
ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
ஆத்தா ஒன்னக் காணலியே

தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
தெய்வமேநீ வருவாயேன்னு
தேடித் தவிச்சிருந்தேன்
தாயே ஒன்னக் காணலியே

கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
ஒத்தத்தாயி நீதானேடி
ஓடிவந்து என்னப்பாக்க
ஒருநொடியும் இல்லையோடி?


--கவிநயா

Friday, May 22, 2009

சகல கலா வாணியே சரணம் தாயே


சகல கலா வாணியே சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே (சகலகலாவாணியே)

இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக்கு அருள்வாய்- மங்களச் செல்வியே
(சகலகலாவாணியே)

அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
(சகலகலாவாணியே)

முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும் அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
(சகலகலாவாணியே)

இயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்
தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. தமிழ்த்தேனீயார் (நன்றி)

Wednesday, May 20, 2009

முத்து நகை வடிவழகி !

வருடா வருடம் சித்திரை மாதம் பிறந்து முதல் வியாழக்கிழமை, புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சு, செவ்வாய்க் கிழமை போய் சேருவது வழக்கம். நானும் இந்த வருடம் (இரண்டாவது முறையா) இந்த பாத யாத்திரையை அவளருளால் நல்லபடியா முடிச்சிட்டு வந்தேன். தினமும் பகலில் தூங்கிட்டு சாயந்திரம் வெயில் தணிஞ்சதும் நடக்க ஆரம்பிச்சு, மறுபடி காலைல சூரியன் சுடற வரை நடப்போம். வழியெல்லாம் அவள் நினைவும் பாடல்களும்தான் துணை. அந்த தையல் நாயகிக்காக ஒரு பாட்டு...



சித்திரை மாதத்திலே தையல்நாயகி - தங்க
சித்திரமாம் உன்னைக் காண தையல்நாயகி

தத்திநடை பழகி வந்தோம் தையல்நாயகி - எங்கள்
முத்து நகை வடிவழகே தையல்நாயகி

பாதையெல்லாம் கல்லும் முள்ளும் தையல்நாயகி - நாங்கள்
பாதம் நோக நடந்து வந்தோம் தையல்நாயகி

வாதையெல்லாம் தீர்த்திடுவாய் தையல்நாயகி - தாயின்
வாஞ்சையுடன் அரவணைப்பாய் தையல்நாயகி

காட்டுவழி வந்தோமடி தையல்நாயகி - நாங்கள்
காரிருளில் தடுமாறி தையல்நாயகி

கண்ணொளியால் இருளகற்றி தையல்நாயகி - நீதான்
காப்பாற்ற வேணுமடி தையல்நாயகி

சித்தமெல்லாம் நிறைஞ்சிருக்கு தையல்நாயகி - உந்தன்
சின்ன முல்லைச் சிரிப்பாலே தையல்நாயகி

பித்தமெல்லாம் தெளிய வைப்பாய் தையல்நாயகி - உந்தன்
பேரருளின் ஒரு துளியால் தையல்நாயகி

நித்திலமாம் உன் பெயரை தையல்நாயகி - நாங்கள்
நித்தம் நித்தம் பாடி வந்தோம் தையல் நாயகி

சொத்தெதுவும் வேண்டாமடி தையல்நாயகி - நீ
சொந்தமானால் போதுமடி தையல்நாயகி!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://vidursury.blogspot.com/

Wednesday, April 15, 2009

அன்னை மீனாட்சியின் மேல் ஒரு சௌராஷ்ட்ரப் பாடல்


madhuraapuri raaNi miinaakSii
monnum r:hanO maayii tora aaTchi
vedur rhii tuu mogo rakSi
vinayamkan mii mellarEsi


மது4ராபுரி ராணி மீனாக்ஷி
மொந்நும் ர:நோ மாயீ தொர ஆட்சி
வெது4ர் ர்ஹி தூ மொகொ3 ரக்ஷி
விநயம்கன் மீ மெல்லரேசி


மதுராபுரி ராணி மீனாட்சி
மனதில் வேண்டும் அம்மா உனதாட்சி
எதிரில் நின்று நீ என்னை காப்பாய்
பணிவுடனே நான் வேண்டுகிறேன்


chokkEsuk sompu karan maayii
sukhapaaNi shrii kalyaaNi
chokkaT vaaTum soDNO sriidEvii
sontOShkan mii jivlarEsi

சொ2க்கேசுக் சொம்பு கரன் மாயீ
சுக2பா2ணி ஸ்ரீ கல்யாணி
சொ2க்கட் வாடும் சொட்நொ ஸ்ரீதேவி
சொந்தோஷ்கன் மீ ஜிவ்லரேசி

சொக்கேசனுக்(கு) உவகை தரும் தாயே
சுகபாணி ஸ்ரீ கல்யாணி
நல்வழியில் என்னை நடத்து ஸ்ரீதேவி
மகிழ்வுடனே நான் வாழ்கின்றேன்

amirdu tamizh amko tuu diisi
ammaa miinaakSi paramEsi
amirdu thamizh hovDe madhuraapurim
sauraaShTra maataa tuu hoyisi

அமிர்து3 தமிழ் அம்கோ தூ தீசி
அம்மா மீனாக்ஷி பரமேசி
அமிர்து3 தமிழ் ஹொவ்டெ மது4ராபுரிம்
சௌராஷ்ட்ர மாதா தூ ஹொயிசி

அமுதத் தமிழ் எமக்கு நீ தந்தாய்
அம்மா மீனாட்சி பரமேசி
அமுதத் தமிழ் வளர்த்த மதுரையிலே
சௌராஷ்ட்ர அன்னை நீ ஆனாய்

பாடலை இயற்றியவர்: மொல்லின் குமரன் (மல்லி. குமரன்)
வருடம்: சௌராஷ்ட்ர விஜயாப்தம் 697 சித்திரை மாதம் முதல் நாள்


(சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 697: ஆங்கில ஆண்டு 2009; சக வருடம்: விரோதி)

Tuesday, April 7, 2009

மனசுக்குள் நடக்கும் மீனாட்சி கும்பாபிஷேகம்!

இது மதுரை அரசாளும் மீனாட்சிக் குழந்தையின் சிறப்பு கும்பாபிஷேகப் (குடமுழுக்கு) பதிவு!
ஊருக்கே மகாராணி என்றாலும் அன்பர்களுக்கு அவள் குழந்தை தானே!
குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் போலத் தானே குடமுழுக்குக் கொண்டாட்டங்களும்!

கேக்-க்குப் பதில் பிரசாத அப்பம்! கேண்டிலுக்குப் பதில் நெய் தீபம்!
தலைக் குளியலுக்குப் பதில் கோபுரத் தலைக் கலசங்களுக்குக் குளியல்! :)

(Added this actual picture of today's kumbabishekam. Thanks: Dinamalar)


அதான் இன்றைய சிறப்பு மீனாட்சிப் பாடல், பிள்ளைப் பாடல்! பார்ப்போமா? கேட்போமா? - பங்குனியில் ஒரு நவராத்திரி - 9!


மனசுக்குள் குடமுழுக்கு செய்து மகிழ்ந்தவர் பூசலார் நாயனார்! ஈசன் அந்தக் குடமுழுக்கைத் தான் முதலில் பெற்றுக் கொண்டானாம்!
அதே போல், மதுரை மீனாட்சி அன்பர்கள், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும்...

உங்க மனசுல நடப்பது தான் இந்த மீனாட்சி கும்பாபிஷேகம்! மனக் குடமுழுக்கு!
"கண்"ணார மட்டுமில்லாமல், "மன"மாரக் கண்டு களியுங்கள்!

ஈசனும் இப்படித் தான் மீனாட்சியை மனசுக்குள்ளாறவே வரைஞ்சி வரைஞ்சி பாக்குறாராம்! = ஒருவன் திருவுள்ளத்தில் அழகின் ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டு பல இலக்கிய மேடைகளிலும், இசை மேடைகளிலும் பிரபலம்! தொடுக்கும் கடவுள் என்று துவங்கும் பாட்டு!
கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! இசை அரசி எம்.எஸ். அம்மாவின் தேன் குரலில்!



மெல்ல மெல்ல அடி எடுத்து வச்சி வாம்மா! வருகவே வருகவே என்று குழந்தை மீனாளுக்கு நடை காட்டுகிறார் கவிஞர்! அப்படியே நைசா நடத்தி நடத்தி, அவளை நம்மிடம் அழைத்து வந்து விடுகிறார்! யார்? = "குமர" குருபரர்!
* இன்று தான் மீனாட்சிக்கு ஒரு பதிவர். குமரன் என்றால்,
* அன்றும் மீனாட்சிக்கு ஒரு பதிவர். குமர-குருபரன் இருந்திருக்கிறார்! :)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
தொடையின் பயனே! நறை பழுத்த
துறைத் தீந் தமிழின் ஒழுகு நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து


தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே =
தொடையல்-ன்னா மாலை என்ற பொருளும் உண்டு! எப்படி மாலைக்கு நார், பூக்கள், இலை, சரிகை, நூல் என்று பலதும் தேவைப்படுதோ,
அதே போல் பாட்டுக்கும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை-ன்னு பலதும் தொடுக்கத் தேவைப்படுகிறது! அதுல தொடை என்பது இன்னும் சிறப்பு!

எதுகைத் தொடை, மோனைத் தொடை-ன்னு பாட்டுக்கு அழகு சேர்க்கும்! ஆனால் அது மட்டுமே இருந்து, பாட்டில் பொருள் இல்லீன்னா?
அதே போல, தொடை நிரம்பிய பல கடவுள் பாடல்களுக்கு எல்லாம், உள்ளுறைப் பொருளாய் இருக்கிறாள் குழந்தை மீனாட்சி!

என்ன தான் விதம் விதமா தொடுத்தாலும், இறைவன் தோளில் போய் அமர்ந்தால் அல்லவோ மாலைக்கு அழகு?
பழம் பாடலும் இறைவனுக்குப் பயனாய் அமர்ந்தால் தான் அழகு! அதான் தொடையின் பயனே!

நறை பழுத்த துறைத் தீந் தமிழின் ஒழுகு நறுஞ் சுவையே =
ந"றை"-ன்னா தேன்! ந"ரை"-ன்னா தான் வெள்ளை முடி! :)
ஆனா நறையைத் தலையில் தடவினா, தலை நரை ஆயிடும்-ன்னு சில பேரு வீட்டுல இன்னும் சொல்லுவாய்ங்க! :)

நறை பழுத்த = தேன் பழுத்த = தேன் எப்படிங்க பழுக்கும்?
பூ தான் காயாகி, அப்புறம் கனி ஆகுது இல்லையா? அந்தப் பூவில் இருக்கும் தித்திப்பான தேன் தானே பழத்தின் ருசிக்குக் காரணம்!
அந்த மகரந்தமே, ஒட்டு மொத்தமா பழுத்தா எப்படி இருக்கும்? சும்மா வண்டு போல உறிஞ்சிக் குடிச்சிற மாட்டோம்? :) அதான் நறை பழுத்த என்கிறார்!

துறைத் தீந் தமிழின் ஒழுகு நறும் சுவை! பல திணை/துறைகளில் ஊறிக் கிடக்கும் தமிழ்த் தேன்! தீம்பால், தீஞ்சுவை-ன்னு சொல்றோம்-ல்ல? அதே தான் தீம்+தமிழ் = தீந்தமிழ்!

அந்தத் தமிழை ஆசை ஆசையாக் கடிச்சித் தின்னும் போது...ஒழுகு நறும் சுவை!
மல்கோவா மாம்பழத்தைக் கடிச்சித் தின்னும் போது, விரலிடுக்கில் ஒழுகும் பாருங்க!
வெட்கம் மானம் பார்ப்போமா வீட்டுக்குள்ள? சப்பு கொட்டி மாம்பழச் சாறை வழித்துச் சாப்பிட்டு விட்டு தானே மறு வேலை? அதே போல் தான் ஒழுகு தமிழ்ச் சுவை! :)



எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே! வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இள மென் பிடியே! எறி தரங்கம்

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் = கிழங்கை வெட்ட முடியாது, அரிய முடியாது! நாரோட ஒட்டிக்கிட்டு தான் வரும்! பனங்கிழங்கு சாப்பிட்டிருந்தா தெரியும்! கிழங்கைப் பல்லால் அகழ்ந்து தான் எடுக்கணும்! அதே போலத் தான் அகந்தை என்னும் கிழங்கு!
தான்-தான்-தான் = இதையும் நம்ம மனசுக்குள்ள நாமே போய், அகழ்ந்து எடுத்தாத் தான் முடியுமே தவிர, எம்புட்டு சாத்திரம் பேசினாலும் ஒன்னும் முடியாது! :)

தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! = ஆனா அகழ்ந்துட்டா அதுல குழி விழுந்துருமே! அதனால் என்ன? குழியில் அன்பு என்னும் நெய்யை உற்றி அதையே விளக்கு ஆக்கிருவாங்களாம் அடியவர்கள்! தொழும்பர்கள்!
அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாக, இன்பு உருகு சிந்தை இடு திரியாய்-ன்னு பாடினாரே ஆழ்வார்! அது போல, தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! தாயே மீனாட்சி!

வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே = பிடி-ன்னா பெண் யானை! களிறு=ஆண் யானை!
இமயமலைச் சிகரங்கள் வளருதாம்! எப்படி? பனி உருகினாப் பிறகு ஒரு உசரம்! பனி மூடி இருக்கும் போது அதை விட உசரம்! அதான் "வளர்" சிமய-ன்னு சொல்றாரு!
அந்த மலைச் சிகரங்களில் பெண் யானையைப் போல் ஓடி விளையாடியவள், இமவான் மகள்! பார்வதி!



உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
உயிர் ஓவியமே! மதுகரம் வாய்


இது தான் சிறப்பு வர்ணனை! பாட்டுக்கே மகுடம்!

காதலன் எப்படி அழகாத் தெரியறான் காதலிக்கு?
காதலுக்கு முன்னாடி அவனை லூசு என்கிறாள்! கல்யாணம் ஆன பிறகு சரியான வெத்து வேட்டு என்கிறாள்! :))
ஆனால் காதலின் போது மட்டும், அவன் அழகாத் தெரியக் காரணம் என்ன?
இருங்க அக்கம் பக்கத்துல கேட்டுட்டு வந்து சொல்லுறேன்! :))

ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!
ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!

மனசு தாங்க அழகுக்கு காரணம்! சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் சும்மா கொஞ்ச நாளு தான்! அப்புறம் நம்மளயே பேக் பண்ணி அனுப்பிச்சிருவாங்க! :)
ஆனால் மனசை அழகா வச்சிக்கிட்டா, சிரிப்பும் அழகா வரும்! சிரிப்பும் அழகா வந்தா, முக அழகு தானே வரும்! - சரி தானே டார்லிங் நான் சொல்றது? :)

இப்படி மனசுக்குள்ள வரைஞ்சி பார்த்த ஓவியம்! அழகு வண்ணங்கள் ஒழுக ஒழுக, வரைஞ்சிப் பார்த்த உயிர் உள்ள ஓவியம் = மீனாட்சி!

தரங்கம்-ன்னா அலை! தரங்கம்பாடி-ன்னு ஊரு இருக்குல்ல?
அலைகடலை பார்டர் போட்ட புடைவையை உடுத்திக் கொண்டிருக்கும் மண் மகள்! அவளையும் கடந்து கயிலை நின்ற ஒருவன்! எறி தரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன்!

* யார் வரைஞ்சாங்க? = சொக்கன்! சிவன்!
* யாரை வரைஞ்சான்? = மீனாட்சி என்னும் ஓவியத்தையே, ஓவியத்தில் வரைஞ்சான்!


மடுக்கும் குழற் காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!!


மதுகரம் வாய் மடுக்கும் = வண்டுகள் வாய் மடுக்கும்
குழற் காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடி = கருங் காடு போல கூந்தல் பரவிக் கிடக்க, ஒரு வஞ்சிக் கொடி மீனாட்சி பூத்துக் குலுங்குகிறாள்!
அவளைச் சுற்றி வண்டு போல், ங்கொய், ங்கொய்-ன்னு நாமளும் சுற்றி சுற்றி வருகிறோம்!

இட்டும், தொட்டும், கவ்வியும், நெய்யுடை உணவை, மெய்ப்பட விதிர்த்தும்,
சிறு கை நீட்டி, குறு குறு நடந்து.......

* மலையத்துவச பாண்டியன் பெற்றவளே! வருக! வருகவே!
* என்னைப் பெத்த ராசாத்தீ! யம்மாடீ! வருக வருகவே!

* இந்த அம்மன் பாட்டு வலைப்பூவில், எங்கள் மனக் கும்பாபிஷேகம் காண, வருக வருகவே!

தென்னாடுடைய சிவளே போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவீ போற்றி!! எங்கள் மீனாட்சி போற்றி போற்றியே!!!