Saturday, October 13, 2007

அம்பா மனம் கனிந்து- சிவகவி- நவராத்திரிப் பாடல் 3

சிவகவி-ன்னு ஒரு படம் வந்து ஓடு ஓடு ன்னு ஓடிச்சாம். வீட்டுல பெரிய அத்தை இப்படிப் பேச்சை ஆரம்பிச்சாங்கனா, நாங்க எல்லாரும் ஒடு ஓடுன்னு ஓடுவோம் :-)
ஆனால் அந்தப் படத்தில் வரும் தமிழ்ப் பாடல்களின் சுவையும் ஆழமும் முதலில் தெரியவில்லை;
தமிழ்ப் பற்று, தமிழிசைப் பற்று வந்த பின்னால் தான் நமக்கே தெளிவாகத் தெரிகிறது.

தமிழிசைக்கு மிகவும் வேண்டிய ஒன்று, இசையுடன் கூடிய பாடல்கள். அவை இல்லாது இருந்த காலத்தில், அப்படிப் பாடல்களை எழுதிக் குவித்த பெருந்தகை பாபநாசம் சிவன்.
அவர் மேடைக் கச்சேரி பாடல்கள் மட்டும் எழுதியதோடு நிற்கவில்லை.
சினிமாவிற்கும் தமிழ் இசையைக் கொண்டு சென்று, சாதாரண மக்களுக்கும் தமிழ் இசையைச் சொந்தமாக்கினார்.


அவரைப் பற்றியும் அவரின் இசைப் பணி பற்றியும், இசை இன்பம் வலைப்பூவில் யாராச்சும் ஒருவர், தொடராகப் போடலாமே? ஜீவா, திராச, சீவீஆர் - என்ன செய்யலாம்-னு சொல்லுங்க!
இன்றைய நவராத்திரிப் பாடல்...
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்...இதோ; கேட்டு மகிழுங்கள்!




அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்

(அம்பா)

வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே - சங்கரி ஜகதம்பா
(அம்பா)

பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்


பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி
(அம்பா)


படம்: சிவகவி
குரல்: எம்.கே.தியாகராஜ பாகவதர்
வரிகள்: பாபநாசம் சிவன்
இசை: ஜி.இராமநாதன்
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி

16 comments:

  1. ஆத்திக நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நவராத்திரிப் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறீர்கள் - நல்ல பணி - படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது - மனம் சற்றே மகிழ்ச்சியில் திளைக்கிறது - இன்றைய இளைய தலைமுறை ஆத்திகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete
  2. இரவிசங்கர், எப்போதாவது ஏதாவது புதுமையாய் கேட்க வேண்டும் என்று எண்ணும் போது இப்படி சிவகவி, ஹரிதாஸ் போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்பது வழக்கம். இந்தப் பாடலையும் கேட்டிருக்கிறேன். மிக நல்ல பாடலாக இருக்கிறது. நவராத்திரியில் இங்கே இட்டதற்கு நன்றி.

    கதம்ப வனக்குயிலே எங்க மீனாட்சியையும் அகிலாண்ட நாயகி என்று அகிலாண்டேஸ்வரியையும் இந்தப் பாடல் பாடியிருக்க திருக்கடவூர் அன்னையின் திருவுருவத்தை இந்த இடுகையில் இட்டதன் பொருள் தான் என்ன? :-)

    அம்பா - கண் பார்; திருவடி இணை துணை; வெம்பவ - அன்பர் - க தம்ப வன போன்ற இடங்களில் சுவையாக இருக்கின்றது. அறுபகைவர்கள் யார் என்று சொல்லுங்களேன்.

    ReplyDelete
  3. நல்ல பாடல்.

    அது சரி..சிவகவின்னு போட்டுட்டு ஹரிதாஸ் படத்தப் போட்டா எப்படி?

    சிவகவி படத்துலதான் தியாகராஜபாகவதர் பொய்யாமொழிப் புலவரா நடிச்சாரு. முருகன் மேல பாடவே மாட்டேன்னு அடம் பிடிச்சிக் கடைசீல சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமண்ய சுவாமீன்னு பாடுவாரு.

    இன்னொரு கேள்வி. கடம்ப வனம் எப்படிக் கதம்ப வனமாச்சு?

    ReplyDelete
  4. //cheena (சீனா) said...
    மனம் சற்றே மகிழ்ச்சியில் திளைக்கிறது - இன்றைய இளைய தலைமுறை ஆத்திகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது//

    வாங்க சீனா!
    ஆத்திக ஈடுபாட்டுக்கு இளைய, சென்றைய-ன்னு தலைமுறை வித்தியாசம் இல்லீங்க! சுவை இருக்கும் இடத்தில் தேனீ தானே வரும்! நம் சக வலைப்பதிவு நண்பர்கள் பல பேரின் பதிவுகளைக் கண்டால், உங்கள் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும்!

    ReplyDelete
  5. //குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர், எப்போதாவது ஏதாவது புதுமையாய் கேட்க வேண்டும் என்று எண்ணும் போது இப்படி சிவகவி, ஹரிதாஸ் போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்பது வழக்கம்//

    ஆகா...சிவகவி, ஹரிதாஸ் எல்லாம் புதுமையா கேட்கறீங்களா குமரன்! கேளூங்க, கேளூங்க! யார் கண்டா, இன்னும் கொஞ்ச நாள் கழித்து இதே பாடல்களே தமிழ் ஊடு-ன்னு சொல்லி திரும்ப வந்து ஹிட்டாகலாம்!

    //திருக்கடவூர் அன்னையின் திருவுருவத்தை இந்த இடுகையில் இட்டதன் பொருள் தான் என்ன? :-)
    //

    மீனாட்சியம்மன் படம் சென்ற பதிவில் நீங்க போட்டுட்டீங்க! அம்மன் பாட்டு வலைப்பூ முழுக்க ஏற்கனவே மதுரை மணம் வீசுது! :-)
    ஒன்பது நாளும் ஒவ்வொரு தோற்றம் காட்ட வேண்டாமா? அதான் அபிராமி!

    அம்பா-சங்கரி-கனிந்து கடைக்கண் என்று வேறு வருதே! அதான் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே! :-)

    ReplyDelete
  6. //அறுபகைவர்கள் யார் என்று சொல்லுங்களேன்.
    //

    காமம்=காமம்
    லோபம்=பேராசை
    குரோதம்=வெறுப்பு/வெகுளி

    மதம்=ஆணவம்
    மோகம்=மயக்கம்/அறியாமை
    மாச்சர்யம்=அழுக்காறு/பொறாமை

    இவையே அறு பகைவர்கள் என்று பொதுவாக யோக நூல்கள் சொல்லும்!
    திருக்குறளில் ஆறு பகைவர்கள் பற்றி வருகிறதா குமரன்?
    அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் என்று அறம் பற்றி வருகிறது! ஆனால் ஆறு பகைவர்கள் பற்றி வருகிறதா, தெரியவில்லை!

    காமம் க்ரோதம் லோபம் மோஹம் என்று பஜ கோவிந்தம் ஸ்லோகம் ஒன்றும் இருக்குன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  7. //G.Ragavan said...
    அது சரி..சிவகவின்னு போட்டுட்டு ஹரிதாஸ் படத்தப் போட்டா எப்படி?//

    அண்ணே! சிவகவி-ன்னு தேடினா இதான் கிடைச்சுதுண்ணே! சத்தியமா அந்தப் படத்துல டான்ஸ் ஆடறவங்க பேரு கூட எனக்கு என்னன்னு தெரியாதுங்கண்ணே! அதெல்லாம் "பெரியவங்க" உங்களுக்குத் தான் தெரிஞ்சி இருக்கும்! :-)
    யாருண்ணே அவிங்க?

    //சிவகவி படத்துலதான் தியாகராஜபாகவதர் பொய்யாமொழிப் புலவரா நடிச்சாரு. முருகன் மேல பாடவே மாட்டேன்னு அடம் பிடிச்சிக் கடைசீல சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமண்ய சுவாமீன்னு பாடுவாரு//

    ஆமா
    அதுக்கு முன்னாடி "வள்ளலைப் பாடும் வாயால் தறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ" என்று சவடால் வுடுவாரு! அப்புறம் தான் திருந்தி சுப்ரமண்ய சாமீன்னு பாடுவாரு!

    //இன்னொரு கேள்வி. கடம்ப வனம் எப்படிக் கதம்ப வனமாச்சு?//

    கடம்ப மலர் பற்றிய பதிவு போட்ட குமரன் தான் வந்து சொல்லணும்!
    ஒரு வேளை வெம்பவ-கதம்ப-ன்னு எதுகை நயத்துக்காக இங்க வந்திருக்கலாம். நீங்க கேட்டீங்களேன்னு பாபநாசம் சிவன் பாட்டுல போயி பார்த்தேன். அங்கேயும் கதம்ப-ன்னு தான் போட்டிருக்கு!

    ReplyDelete
  8. இரவிசங்கர். அறுதலைப் பிள்ளையைத் தறுதலைப் பிள்ளை ஆக்கும் அளவிற்கு ஏனிந்த கொலைவெறி? :-)

    இராகவன். கடம்பம் கதம்பம் ஆவதெல்லாம் பலுக்கல் விகாரத்தால் ஆவது தான் - பவழம் பவளம் ஆவதைப் போல். மதிள் மதில் ஆவதைப் போல். கடம்பமும் கதம்பமும், பவழமும் பவளமும், மதிளும் மதிலும், கறுப்பும் கருப்பும் என இவையெல்லாம் இலக்கியத்திலும் இருக்கின்றதே.

    ReplyDelete
  9. என் மனம் கவர்ந்த பாடலிது.
    பாபநாசம் சிவன் அவர்களின் இந்தப்பாடலில் 'பைந்தமிழ் மலர் பா..மாலை
    சூடி' என்ற வரிகளில் பாவும் மாவுமே சுரமாக வரும்படி மெட்டமைத்திருப்பார்
    ஜி.ராமநாதன் அவர்கள்.எப்பேர்ப்பட்ட
    கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்!!

    ReplyDelete
  10. என் மனம் கவர்ந்த பாடலிது.
    பாபநாசம் சிவன் அவர்களின் இந்தப்பாடலில் 'பைந்தமிழ் மலர் பா..மாலை
    சூடி' என்ற வரிகளில் பாவும் மாவுமே சுரமாக வரும்படி மெட்டமைத்திருப்பார்
    ஜி.ராமநாதன் அவர்கள்.எப்பேர்ப்பட்ட
    கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்!!

    ReplyDelete
  11. ஹரிதாஸ் படத்தில் நடனமாடுபவர்
    அக்கால கனவுக்கன்னி டி ஆர்.ராஜகுமாரி.
    முருகப்பெருமான் தறுதலை இல்லை.
    அது அறுதலை அதாவது ஆறு தலை.

    ReplyDelete
  12. //குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர். அறுதலைப் பிள்ளையைத் தறுதலைப் பிள்ளை ஆக்கும் அளவிற்கு ஏனிந்த கொலைவெறி?//

    //முருகப்பெருமான் தறுதலை இல்லை.அது அறுதலை அதாவது ஆறு தலை//

    முருகா! முருகா!
    அறுதலை அழகன்...அவன் தருதலைக் குழகன்!
    தமிழும் அமுதும் அன்பருக்கு எல்லாம் தரு தலையன் - தரும் தலையன்!

    குமரன், நானானி...
    நான் குறிப்பிட்ட வசனம், சிவகவி படத்தில் வருவது! பொய்யாமொழிப் புலவன் பேசுவதாக வசனம்...இதோ விக்கிபிடீயாவில் இருந்து....

    //இதே சமயம் சம்பந்தம்பிள்ளை (வாசுதேவ பிள்ளை) என்பவர் முருகக் கடவுள் மேல் உலா பாடித் தரும்படியும் அதற்குப் பதினாயிரம் வராகன்கள் தருவதாகவும் சொல்ல சிவகவி வள்ளலைப் பாடும் வாயால் தறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ என்று பாடுகிறான்.//

    ReplyDelete
  13. //நானானி said...
    என் மனம் கவர்ந்த பாடலிது.
    பாபநாசம் சிவன் அவர்களின் இந்தப்பாடலில் 'பைந்தமிழ் மலர் பா..மாலை
    சூடி' என்ற வரிகளில் பாவும் மாவுமே சுரமாக வரும்படி மெட்டமைத்திருப்பார்
    ஜி.ராமநாதன் அவர்கள்.//

    அட ஆமாம்!
    என்ன அருமையான ரசனை! பா..மா..லை!
    நன்றிங்க நானானி!

    ReplyDelete
  14. Wikipedia is wrong Ravishankar. Please listen to that beautiful song from Sivakavi. A very good Nindhaa Sthuthi song it is.

    ReplyDelete
  15. ஆமாங்க குமரன்
    wikipedia is wrong

    இதோ பாடல்
    http://www.musicindiaonline.com/p/x/9rXgGD7xYt.As1NMvHdW/

    வள்ளலைப் பாடும் வாயால் அறுதலை
    பிள்ளையைப் பாடுவேனோ!
    ...
    அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி
    சுப்பனைப் பாடுவேனோ!

    ReplyDelete
  16. இந்த படத்தை நான் ஒரே வாரத்தில் மூன்று முறை பார்த்தேன். மிகவும் நல்ல படம்
    எம்.கே டி அவர்களின் படங்களில் வசனகர்த்தாவாக இருந்த திரு இளங்கோவன்
    அவர்களின் புதல்வரை நான் நிறைய் முறை சந்தித்திருக்கிறேன். வெகு நாட்களாயிற்று.
    மீண்டும் தொடர்பு கொள்ள வேன்டும்தாங்கள் சிறப்பான
    பணி செய்து வருகின்றீர்கள்
    . தங்கள் ஆன்மீக பணி தொடர எனது இதயம் கல
    ந்த வாழ்த்துக்கள்

    ஆன்மீக சம்மந்தமாக வலைப்பூக்கள் எழுதக்கூடிய பதிவர்கள் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்தால் நல்லது
    நன்றி
    இனியன் பாலாஜி

    ReplyDelete